279. அதர்உழந்து அசையினன் கொல்லோ!

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : மகட்போக்கிய தாய் சொல்லியது.
[(து.வி.) தலைவனோடு தலைவியும் உடன்போக்கிற் சென்று விட்டனள். அவள் செயல் அறனொடு பட்டதென்றே கருதினாலும், அவளைத் திடுமெனப் பிரிந்ததனாலே, தாயின் மனம் பெரிதும் வேதனைப்படாமலும் இல்லை; அந்த மன வேதனையைக் காட்டுவதாக அமைந்த செய்யுள் இது.]


வேம்பின் ஒண்பழம் முணைஇ இருப்பைத்
தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ
வைகுபனி யுழந்த வாவல் சினைதொறும்
நெய்தோய் திரியில் தண்சிதர் உறைப்ப
நாட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையொடு 5
பொருத யானைப் புண்தாள் ஏய்ப்பப்
பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை
வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம் 10
பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே!

தெளிவுரை : வேம்பினது ஒளியையுடைய பழத்தைத் தின்னுதலையும் வெறுத்தது; இருப்பையின் இனிய பால்வற்றிய சுவையான பழத்தையும் தின்ன விரும்பியது; அதனாலே, வைகிய பனியிலேயும் சென்று வருந்தியது, வௌவால். அவ்வாறு நாடிச் சென்ற அதன்மேல், மரக்கிளைகள் தோறுமிருந்து வீழ்ந்த பனித்துளிகள், நெய் தோய்த்த திரியினின்றும் வீழும் சுடரைப் போலத் தண்ணிய துளிகளாக வீழ்ந்தபடியே இருக்கும். அத்தகு விடியற்காலையிலேயே சுரத்திடையே சென்று வருந்தியவள் அவள்! வாள்போலும் கோட்டையுடைய புலியேற்றையோடு யானையும் போரிட்டது; அதனால் யானையின் கால்கள் பெரிதும் புண்பட்டன. புண்பட்ட அவ்யானையது தாள் போலச் சிதையுமாறு, பசிமிகுந்த பிடியானையானது ஓமையின் அடிமரத்தை உதைத்துச் சிதைத்தது. சிதைந்த ஓமையின் சிவந்த அந்த அடிமரமானது, வெயில் எழுந்து காய்கின்ற பொழுது விட்டுவிட்டு ஒளிசெய்தபடியேயிருக்கும். அத்தன்மையுடைய பாலையின் அருஞ்சுரமாகிய வழியிலே—

தலைவனை அவள் மணமுடிக்கும் காலத்துக் கழிக்க வேண்டிய, சிலம்பைக் குறித்த சிலம்புகழி விழாவின் சிறப்பினை யானும் கண்டு மகிழாதே, பிறர்கண்டு மகிழுமாறு அவன் பின்னாகப் போயினாள் அவள்! அழகிய கலனணிந்த என் அந்த மகளின் அடிகள்தாம் அச்சுரத்திடையே சென்று இதுகாலை எவ்வாறு வருந்துகின்றனவோ!

சொற்பொருள் : வாவல்–வௌவால். சிதர்–சிறுதுளிகள். சுரம்–சுரநெறி. அத்தம்–பாலை ஓமை–ஒரு வகை மரம். செல்வம்–செல்வம்போலப் போற்றும் விழாச் சிறப்பு.

இறைச்சி: 1 . 'வேம்பின் பழத்தைத் தின்பதை வெறுத்து இருப்பைப் பழத்தை விரும்பிய வௌவாலானது, வெய்ய பனியானது உறைப்ப இருக்கும்' என்றனள். இது பிறந்தகத்துச் செல்வத்தைத் துய்ப்பதை வெறுத்துத் தலைவனின் செல்வத்தைத் துய்ப்பதை நாடிச்சென்ற தலைமகள் அவ்வில்லத்தாரோடும் எவ்வாறு மனமொத்து இருப்பாளோ என்று தாய் கலங்கியதைக் குறித்ததாம்.

2. 'பசியுற்ற பிடியாலே உண்ணற் பொருட்டு உதைக்கப்பட்டுப் பொழிந்த ஓமையின் அடிமரமானது, வெயிலில் ஒளி செய்யும்' என்றனள். இது, மகளால் வெறுத்து நீக்கப்பட்ட என்நிலைதான் பொழுது விடிந்ததும், பலராலும் அறியப்பட்டுத் தூற்றப்படும் என்று வருந்தியதாம்.

விளக்கம் : 'வேம்பின் ஒண்பழம்' எனவும், இருப்பைத் தேம்பால் செற்ற தீம்பழன்' எனவும் வேறுபாடு குறித்த நயம் காண்க. அருகிருக்கும் முன்னதை வெறுத்துத் தொலைவிலுள்ள பின்னதை நாடிக் காலை வேளையிலே சென்று துயரத்தையும் அடையும் வாவல் என்றனர். இது, தலைவி இல்லத்தை விட்டகன்று அவனுடனே சென்றதான பேதைமையை நினைந்து கூறியதாகும். 'வைகுபனி யுழந்த வாவல்' என்றது, அவளும் புலர் காலையிலே அகன்று சென்றனள் எனக் குறிப்பதாகும். இரவிலே பிடியால் உதைத்துச் சிதைக்கப்பெற்ற ஓமையின் செவ்வரை, பொழுது புலர்ந்ததும் வெயில்பட்ட காலையிலே இமைக்கும் என்றது, அவள் இருந்த நிலைமைக்கு நல்ல உவமையாகும்.

புலியேற்றை யானையொடும் பொருதிப் புண்படுத்தியதைக் கூறியது, வழியும் ஏதமுடைத்து என்றதாம். இலையும் தழையும் அற்றுப்போகவே மரத்தைச் சிதைத்து உண்ணலாயிற்று என்றது, வழியின் கொடிய வெம்மையைக் குறித்ததாம்.

'சிலம்பு கழி நோன்பு' மணத்துக்கு முன் செய்யப்படும் ஒரு விழா! இதனைக் 'கன்னிமை கழித்தல்' என்பர். அது செய்யாததற்கு முன்பே அவள் அவனுடன் சென்றதற்குத் தாய் வருந்துகின்றனள். 'பிறருண' என்றது இவ்விழாவைத் தலைவன் இல்லத்தார் கண்டு களிப்பர் போலும் என்று, அந்த நினைவாற் கூறியதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/279&oldid=1698486" இலிருந்து மீள்விக்கப்பட்டது