281. அன்பிலர் தோழி நம் காதலர் !

பாடியவர் : கழார்க்கீரன் எயிற்றியார்.
திணை : பாலை.
துறை : (1) வன்பொறை எதிரழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.(2) ஆற்றாள் எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.

[(து-வி) (1) பிரிந்தவன், தான் வருவதாகக் குறித்த காலத்தும் வராததனாலே பெரிதும் ஆற்றாளாயினாள் தலைவி. அவளை, 'இன்னும் சற்றுப் பொறுத்திரு' என்று தோழி வற்புறுத்துகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது. (2)' தலைமகள் இனியும் பொறுத்திருக்க ஆற்றாள்' எனக் கவலையுற்ற தோழி, தலைமகட்கு உரைத்ததாகவும் கொள்ளப்படும்.]


மாசில் மரத்த பலியுண் காக்கை
வளிபொரு நெடுஞ்சினை களியொடு தூங்கி
வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி அம்பல் யாணர் 5
விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப
மழையமைந் துற்ற மாலிருள் நடுநாள்
தாம்நம் உழைய ராகவும் நாம்நம்
பனிக்கடு மையின் நனிபெரிது அழுங்கித்
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர் தோழிநங் காத லோரே! 10

தெளிவுரை : தோழீ! மாசற்ற மரத்திலே அமர்ந்தபடியே மக்களிடும் பலியை உண்ணும் காக்கையானது, காற்று மோதுகின்ற நெடிய கிளையிலே தன் மேல் வீழ்கின்ற மழைத்துளியுடனேயே அசைந்துகொண்டு, பலிக்குக் காத்திருக்கும், வெல்லுகின்ற போர்வலிமையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற, நல்ல பலவகையான மிகுந்த பலிக்கொடையோடும் சொரியப்படுகின்ற, சொல்லிலடங்காத சோற்றுத் திரளைகளுடனே அழகிய பலவான ஊனும் கலந்து இடப்படுகின்ற பெருஞ்சோற்றைத் தான் நினைத்தபடியேயும் அது இருக்கும். மழை பொருந்திய பெய்தலைக் கொண்ட மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்திலே, அவர்தாம் நம் அருகேயிருந்தா ராகவும், நாம் நமக்கு உண்டாகிய மெய்க்குளிரின் கடுமையாலே மிகப்பெரிதும் வருந்தினமாய்த் தூங்காதிருந்தனம்! அதனை அறிந்தும், நமக்குத் தலையளி செய்து நம்மைக்காக் காதவரான நம் காதலர் தான் நம்பால் அன்பேயில்லாதவர் காண்! அதனால், யானும் அவர் பிரிவுக்குச் சற்றும் வருந்துவேன் அல்லேன்!

சொற்பொருள் : மாசு–குற்றம்; பலியுண்ணும் காக்கை குற்றமற்ற மரத்திலேயே இருக்கும் என்பது மரபு. மழையாற் கழுவப்பெற்று மாசு தீர்ந்த மரமும் ஆகும். பலியுண் காக்கை–மக்கள் தெய்வங்களைக் குறித்து இடும் பலிச்சோற்றை யுண்ணும் காக்கை. களியொடு–களிப்போடு. தூங்கி–அசைந்தாடியபடி. 'கழாஅர்'–சோழர்க்குரிய கடற்றுறைப் பட்டினம். சொன்றி–சோறு; சோற்றுத் திரளை. விடக்கு–ஊன். மால் இருள்–மயக்கத்தையுடைய இருள். உழையர்–அருகிருப்பவர். பனி–குளிர். அழுங்கி–வருத்தமுற்று; நலிந்து.

விளக்கம் : மழையில் நனைந்து மரக்கிளையில் அசைக்கும் காற்றோடு தானும் ஆடியடியே இருக்கும் காக்கையானது, 'கழாஅர்' நகரிற் கொள்ளும் பெரும்பலியை நினைத்தபடி இருக்கும் என்றனர். இதனால், தெய்வங்களுக்கு நிணச்சோற்றுத் திரளைகளைப் பலியாக இடும் மரபும், அதனைக் காக்கை உண்ணத் தெய்வம் ஏற்றதாகக் கருதும் நம்பிக்கையும் பண்டைநாளில் இருந்தனவென்பது அறியப்படும். அருகிருந்த காலத்திலேயே நம் துயரைக் களையாத அவர் பிரிவை நினைத்து யானும் நெஞ்சழிவதிலேன் என்னும் தலைவியின் பேச்சிலே, அவளது ஏக்கமிகுதி நன்கு வெளிப்படக் காணலாம். அவள் காதன்மையின் மிகுதியும் புலப்படும்.

'முயங்கு தொறும் முயங்குதொறும் முயங்க முகந்து கொண்டு அடக்கும்' மார்பின் முயக்கம் என்பர் இதனை–(பொருநர். 183-4.) அதனைப் பெறுதலையன்றி அவனை வெறுத்தலை அவள் எதனாலும் எக்காலத்தும் நினையாள் என்பதாம்.

இறைச்சி : பலியுண் காக்கையானது மழையிலே நனைந்து குளிரிலே வருந்தி நலிந்திருக்கும் காலத்தினும், கழாஅர் நகரிலே கிடைக்கும் விடக்குடைப் பெரும் பலியைக் கருதியிருக்கும் என்றனள். இது. 'என்றேனும் அவர் வந்து நம்மைத் தலையளி செய்வர் என்னும் நம்பிக்கை ஒன்றாலேயே யானும் உயிர் வாழ்கின்றேன்' என்றதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/281&oldid=1698490" இலிருந்து மீள்விக்கப்பட்டது