நற்றிணை-2/280
280. நன்மனை நன்விருந்து அயரும் !
- பாடியவர் : பரணர்.
- திணை : மருதம்.
- துறை : (1) வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது. (2) தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
[(து.வி.) (1) பரத்தையின் உறவினாலே தலைவியை மறந்தானாகிப் பிரிந்து சென்றிருந்தான் தலைவன்; அவன் மீண்டும் தலைவியைக் கூடுதலை விரும்பியவனாகத் தோழியைத் தூது விடுக்கின்றான். அவள், தலைவியிடம் சென்று, தலைவனை மீண்டும் ஏற்குமாறு சொல்ல, அவள், தன் மனநிலையை விளக்குவதாக அமைந்த சுவையான செய்யுள் இது. (2) தலைமகனைப் புலந்துவிடாது தலைவி ஏற்றுக் கொள்ள, அவள் நிலையைத் தோழி புகழ்ந்து கூற, அவளுக்குத் தலைவி சொல்லியதும் இது.]
கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின்
கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல்
தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழும்
தண்துறை யூரன் தண்டாப் பரத்தமை
புலவாய் என்றி தோழி!—புலவேன்
5
பழன யாமைப் பாசறைப் புறத்துக்
கழனி காவலர் சுடுநந்து உடைக்கும்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னவென்
நன்மனை நனிவிருந் தயரும்
கைதூ வின்மையின் எய்தா மாறே!
10
வயலாமையது பசிய கற்போன்ற முதுகிலே, அவ்வயலைக் காவல் செய்யும் மள்ளர்கள், தாம் சுடுகின்ற நத்தையை உடைத்துத் தின்பார்கள். அத்தன்மையுடைய பழமை முதிர்ந்த வேளிர்களது குன்றூரைப் போன்றது என் மனை. அந்த என் நல்ல மனையினிடத்தே, மிகுதியான விருந்தினர்களை நாளும் உபசரித்தலாலே கையொழியாமையினாலே, யான் அவனைப் பல நாளாகச் சந்திக்கப் பெற்றிலேன். அதனாற்றான், அவன்பாற் புலவாதுள்ளேன்,காண்பாயாக! 'அவனைப்பற்றிய பிற எவையுமே எனக்குத் தோன்றிற்றில்லை' என்கின்றாள் அவள்.
சொற்பொருள் : கொக்கின் கூம்பு–கொக்கு தலையை உடலுள் ஒடுக்கியபடி யிருக்கும் நிலை. முகை–அரும்பு. பாசறை–பசிய கற்போன்ற மேற்புறம். கை தூவல்–கை யொழிதல். பழனம்–வயல். காவலர்–காவல் செய்வோர்.
விளக்கம் : கொக்காலே வீழ்ந்த மாங்கனியானது கொக்கின் ஒடுங்கிய நிலைபோன்ற அரும்புகளைக் கொண்ட ஆம்பல்கள் நிரம்பிய ஆழ்குட்டத்து நீரில் 'துடும்' என்ற ஓசையுடன் விழும் என்றது, மருதத்தின் நீர்வளமிக்க தன்மையை நன்கு காட்டுவதாகும்.
இரண்டாவது துறைக்கேற்ப உரை கொள்வதாயின், "ஊரன் வேறுபட்டவனாக நடந்ததனை நினைத்து அவனிடத்து ஊடாதே கொள்' என்றனை; அவன் என்பால் வருவதே அரிதாதலால், ஊடினால் முற்றவும் வெறுக்குமோ என்று கருதி யான் அஞ்சுவேன்" என்று தலைவி சொன்னதாகக் கொள்க.
உள்ளுறை : 'கொக்காலே உதிர்ந்த மாம்பழமானது, ஆம்பற் பொய்கையிலே துடுமென வீழும் என்றது, பரத்தையாலே வெறுத்து ஒதுக்கப்பட்ட தலைமகன், நின்னை வாயிலாகக் கொண்டு, இவ்விடத்துக்கு வந்தனன் போலும் என்றதாம்.
இறைச்சி : 'வயல் காப்பவர், சிறப்பில்லாத நத்தையைச் சுட்டு, ஆமையின் புறஓட்டிலே தட்டியுடைத்துத் தின்பர்' என்றது, தலைவனும் சிறப்பில்லாத பரத்தையின் நலனை விரும்பியவனாய், அவளைத் தன் பாணனின் உதவியாலே பெற்று மகிழும் இயல்பினனாவான் என்றதாம்.ஒப்புமை : 'கொக்கின் அன்ன கூம்புமுகைக் கணைக்கால் ஆம்பல் (நற் 230)' எனப் பிறரும் உரைப்பர்.
மேற்கோள் : 'அவனறிவாற்ற அறியுமாகலின்" என்னும் சூத்திரத்து,'வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ' என்பதற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி, 'இது, 'தலைவனோடு புலவாமை நினக்கு இயல்போ?' என்ற தோழிக்கு, விருந்தால் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலேன்; அல்லது புலவேனோ?' என்றவாறு, என நயமும் உரைப்பர் நச்சினார்க்கினியர்–(தொல்.பொருள்.147).