நற்றிணை-2/305
305. நோயாகின்றோம் மகளே!
- பாடியவர் : கயமனார்.
- திணை : பாலை.
- துறை : (1) நற்றாய் தோழிக்குச் சொல்லியது; (2) மனை மருட்சியும் ஆம்.
[(து.வி.) (1) தன் மகள், அவள் காதலனுடன் உடன் போக்கில் வீட்டையகன்று சென்று விட்டதனாலே, தாயின் மனத்துயரம் அளவிறந்து பெரிதாகின்றது. அவள் தலைவியின் தோழியிடத்தே தன் அவலத்தைச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) பெற்ற தாய், தன் மனையிடத்தேயிருந்து மருண்டு சொல்லியதாகவும் கொள்ளப்படும்.]
வரியணி பந்தும் வாடிய வயலையும்
மயிலடி யன்ன மாக்குரல் நொச்சியும்
கடியுடை வியன்நகர்க் காண்வரத் தோன்றத்
தமியே கண்ட தண்தலையும் தெறுவர
நோயா கின்றேம் மகளை! நின் தோழி
5
எரிசினந் தணிந்த இலையில் அம்சினை
வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி
உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கிலை வென்வேல் விடலையை
விலங்குமலை ஆரிடை நலியுங்கொல் எனவே!
10
தெளிவுரை : மகளே! வரிந்து வரிந்து கட்டப்பெற்ற அழகுடன் தோன்றும் பந்தும், வாடிக் கிடக்கும் வயலைக் கொடியும், மயிலது காலடிபோன்ற கரிய பூங்கொத்தையுடைய நொச்சியும், காவலையுடைய நம் அகன்ற மாளிகையிடத்தே கண்ணுக்கு அழகாகவே தோன்றுகின்றன. அவற்றோடு, அவளையில்லாதே தனியாகச் சென்று கண்ட குளிர்சோலையும், என்னைப் பெரிதும் வருத்தா நிற்கும். நின் தோழியானவள், கதிரவனின் எரிக்கும் சினமானது தணிந்திருக்கும் மாலைப்பொழுதிலே, இலைகளற்ற அழகிய மரக்கிளையில் அமர்ந்தபடியே, வரிகள் பொருந்திய முதுகுப்புறத்தையுடைய புறாக்கள், வருத்த மிகுதியாலே கூவுகின்ற தெளிந்த கூப்பீட்டொலியையும் கேட்பாள். கேட்டதும், "வெப்ப மிகுந்த பொழுதின்கண்ணே போரிடப் புகுந்தாற் போன்ற கண்களையுடையவளாக, இலங்கிய இலைவடிவான வெற்றிவேலை ஏந்தியபடியே தன்னோடும் உடன் வருகின்ற இளையோனாகிய தன் காதலனை உறுத்து நோக்கி, மலை குறுக்கிட்ட கடத்தற்கரியதான வழியிடையே அவனைத் துன்புறுத்துவாளோ?" என்றே, எனக்கு மிகவும் வருத்தம் உண்டாகின்றது காண்!
கருத்து : "அவள்தான் அவனோடு இனிதாக வழியைக் கடந்து சென்று மணம்பெற்று நீடு வாழ்வாளாக" என்பதாம்.
சொற்பொருள் : வரியணி பந்து – வரிந்து வரிந்து கட்டிய அழகிய பந்து; இது அவள் தோழியருடன் பந்து ஆடியிருக்கும் காட்சி நினைவைத் தாய்க்கு உண்டாக்கும். வயலை – வயலைக் கொடி; இது வாடிக்கிடப்பது அதற்கு நீர்விடும் தலைவி அகன்று போயினாள் என்பதை நினைப்பூட்டும். மாக்குரல் நொச்சி –கரியபூங் கொத்துக்களையுடைய நொச்சி; இது கருநொச்சி; இதன் நிழலிலே அவள் சிற்றில் இழைத்து விளையாடியிருந்ததை இது நினைவுபடுத்தும். தண்தலை – குளிர்ந்தவிடமான சோலைப் பகுதி; இது அவள் தோழியரோடு கூடியாடிச் சோலை விளையாட்டயர்தலை நினைவுபடுத்தும். 'தமியேன் கண்ட கண் தலைத்தலை தெறுவர' எனவும் பாடபேதம் கொள்வர். தன் மகள் பழகிய இடங்களைப் பார்க்கப் பார்க்கத்தாயின் மனத்தே அவளது பிரிவின் நினைவு மேலெழுதலால், அவள் கொண்ட வருத்தம் மிகுதியாகின்றது. எரிசினம் – எரித்தலாகிய சினம்; சினம் என்றது அனைத்தையும் வெங்கதிர்களால் வாட்டிவருத்தலால். புலம்பு – தனிமைத் துயரம். 'புலம்பு கொள் தெள்விளி' என்றது 'புறவுப் பேடும் தன் துணையைக் காணாதாய்ப் புலம்பியழைக்கும் கூப்பீட்டுக் குரல்' என்றதாம். அக்குரலைக் கேட்பவள் ஆணின் பிரிந்துபோகும் கொடுங்குணத்தைக் கருதினளாகத் தன்னுடன் வருவானையும் ஐயுற்றுச் சினந்து நோக்குவாளோ என்றதாம். அது நேராதிருக்குமாக என்று நினைக்கிறது தாய்மை நெஞ்சம்.
விளக்கம் : நொச்சி மனைக்கண் வேலியிடத்தே வைத்து வளர்ப்பது; அதன் இலைகள் மயிலடிபோலத் தோன்றும் என்பது 'மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி' எனவரும் நற்றிணையாலும் (115) அறியப்படும். இது ஐவிரல் நொச்சி எனப்படும். இதன் நீழலிலிருந்து பெண்கள் சிற்றில் இழைத்து விளையாடுதலை, 'கூழை நொச்சிக் கீழது என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த, வண்டலும் காண்டிரோ கண்ணுடையீரே' (அகம். 275) என்பதனால் அறியலாம். மனையிடத்தே மகளைக் காணாது மருண்டு வருந்தும் தாய், அவள் ஒத்த பருவத்து உடன் தோழியிடம் சொல்லிப் புலம்புகிறாள். 'நலியுங் கொல்' என்றது, 'அத்தகு வெம்மை வழியில் தன்னை அழைத்து வந்த கொடுமையாலே புண்பட்டு அவனை வருத்துவாளோ!' என்று கருதிக் கூறியதாம். அவனோடு சென்றவள், அவன் மனம் உவக்க நடந்து, அவனை மணந்து, இனிது இல்லறமாற்றி வாழ்தல் வேண்டும் என்றும், அவர்களுக்குள் மனவேறுபாடு ஏதும் ஏற்படலாகாது என்றும் கவலையடைகின்றது பெற்ற தாயின் தாய்மை நெஞ்சம்!
மேற்கோள் : 'தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி' என்று தொடங்கும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தின் (சூ. 36), 'தோழி தேஎத்தும்' என்னும் பகுதிக்கு, இதனை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, 'இது தோழியை வெகுண்டு கூறுவது' என்று உரைப்பர்.