306. எக்காலத்தே வருமோ?

பாடியவர் : உரோடகத்துக் கந்தரத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) புனமடிவு உரைத்துச் செறிப்பறிவுறுத்தியது; (2) சிறைப்புறமும் ஆம்.

[(து-வி.) (1) "தினை கொய்வதற்குத் தொடங்கினர்; ஆதலின் இனிக் களவு உறவும் வாய்த்தலரிது; தலைவியும் இற்செறிக்கப் படுவாள்" என்று கூறுவதன்மூலம், அவளை அவன் விரைந்து வரைந்துவந்து மணந்துகொள்ளல் வேண்டுமென வற்புறுத்துவதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகன் சிறைப்புறத்தானாகக் கூறியது என்பதும் ஆம்; அப்போதும் வரைவுவேட்டுக் கூறியதாகவே கருதுதல் வேண்டும்.]


தந்தை வித்திய மென்தினை பைபயச்
சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ
குளிர்படு கையள் கொடிச்சி செல்கென
நல்ல வினிய கூறி மெல்லக்
கொயல்தொடங் கினரே கானவர் கொடுங்குரல் 5
குலவுப்பொறை யிறுத்த கோல்தலை இருவி
விழவொழி வியன்களங் கடுப்பத் தெறுவரப்
பைதல் ஒருநிலை காண வைகல்
யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொல்
செறிதோட் டெல்வளைக் குறுமகள் 10
சிறுபுனத் தல்கிய பெரும்புற நிலையே!

தெளிவுரை : நின் தந்தை விதைத்த மெல்லிய தினைப் பயிரைக் காக்கும் பொருட்டாகப் பையச் சென்றனையாய், தினைக் கதிர்களைக் கவரவரும் கிளிகளை ஒப்புதலாகிய அச்செயல்தான், இனியும் எவ்வாறு வாய்க்குமோ? 'குளிர்' என்னும் கிளிகடி கருவியை ஏந்திய கையினளாகத் தோன்றும் கொடிச்சியே! 'இனி நீயும் நின் மனைக்குப் போவாயாக' என்று, நல்ல இனிய சொற்களைக் கானவரும் கூறினர். அவர், மெல்லத் தினையையும் கொய்தலைத் தொடங்கினர். புனமும், வளைந்த கதிர்களாகிய சுமையைத் தாங்கிய திரண்ட தலையையுடைய தினைத்தாள்கள் தனித்து நிற்பதாயிற்று. அதுதான் விழா நிகழ்ந்து கழிந்த, அகன்ற விழாக்களத்தைப் போலப் பொலி விழந்தும் தோன்றும், வருத்தம் பொருந்திய அக்காட்சியைக் காண்பதற்கு அமைந்த காலையில், தீவிய சொல்லும் செறிந்த தொடியும் விளங்குகின்ற வளையும் கொண்ட இளையோளாகிய தலைமகள், சிறிய தினைப் புனத்தேயுள்ள பரணிடத்தே நின்று, காவல் காத்திருக்கும் நிலைமையைக் காணும் பொருட்டாகத் தலைவன் வருதல் தான் இனி எவ்வாறு பொருந்துமோ?

கருத்து : 'இனிக் களவுறவு வாயாது; கடிமணமே செய்தற்கு உரியது' என்பதாம்.

சொற்பொருள் : குளிர் – குளிர் என்னும் கிளிகடி கருவி; தென்னை அல்லது பனை மட்டையில் செய்வது இது. கொடிச்சி –குறவர் மகள்; கொடி போன்றவள். கொடுங்குரல் – வளைந்த தினைக்கதிர்; கொழுங்குரல் எனவும் பாடம். பொறை – சுமை, கோல்தலை – கோலின் தலைப்பகுதி; தண்டின் மேற்புறம். கடுப்ப–போல. தெறுவர–பொலிவழிந்து வருத்தமுண்டாக்க, தோன்றும் எனவும் பாடம். தீஞ்சொல் – இனிக்கும் பேச்சு. 'செறிதோட்டு', செறிதொடி என்றும் பாடம். எல்வளை–ஒளியுள்ள வளைகள். குறு மகள் – இளமகள். சிறுபுனம் – சிறிதான தினைப்புனம். புறநிலை – புறம் காக்கும் காவல் நிலை. பைதல் – துன்பம்.

விளக்கம் : புனத்தே தினைக்கதிர் கொய்யப் பெற்றது. ஆதலின், இனிப் பகற்குறி வாயாது என்பதும், 'கொடிச்சி செல்க' என்றதால் இனி இற்செறிப்பு நிகழ்தல் உறுதி என்பதும் உணர்த்தி, இனி இவளை வரைந்து மணந்தன்றி அடைதல் வாயாதுகாண்; அதன்பால் மனஞ்செலுத்துக என்றனள். தினை கொய்யப் பெற்ற புனமானது விழவொழி வியன்களம் போலத் தோன்றித் துன்பந்தரும் என்றது, அதன் முன்னைச் செழுமையையும், அதனிடத்தே அவளும் அவனுமாகக் கூடி மகிழ்ந்த இன்ப நினைவுகளையும் நினைவில் எழச் செய்து, அது தான் இனி வாயாமையினையும் உணர்த்தி, மனத்தை வருத்தும் என்றதாம்.

'தந்தை வித்திய' என்றது, புனங் கொய்தலைத் தள்ளிப் போடுவதும் போடாததும் தந்தையின் உரிமையன்றி மகளுரிமை அன்றென்பதற்காகலாம். பொலிவழிந்துபோய் புனத்தைப் போலவே, நின்னை அடையமுடியாத பிரிவுப் பெருநோயினாலே தலைவியும் பொலிவிழந்து வாடி வருந்துவள்; அவளைக் காத்தற்குரிய கடமையை ஆதலின், இனியும் களவையே நாடாது கடிமணம் பெற்றுப் பிரியாது வாழ்வதனைக் கருதுக என்பது குறிப்புப்பொருள் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/306&oldid=1698559" இலிருந்து மீள்விக்கப்பட்டது