நற்றிணை-2/308
308. நெஞ்சம் வந்தன்று
- பாடியவர் : எயினந்தை மகன் இளங்கீரனார்.
- திணை : பாலை.
- துறை : நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி, ஆற்றானாய், நெஞ்சினில் சொல்லிச் செலவழுங்கியது.
[(து-வி.) இல்வாழ்வுக்கு வேண்டிய பொருளைத் தேடிவருங் கடமையினைத் தலைவனின் உள்ளம் தூண்டுகிறது. காதன் மனைவியைப் பிரிந்து சென்று பொருள் தேடிவரத் துணிகின்றான் அக்கணவன். அவன், தலைவியின் நிலை கண்டும் உள்ளம் நெகிழ்கின்றான். தன் நெஞ்சுக்கு பிரிவால் அவள் வாடும் தன்மையைக் கூறித், தன் பயணத்தைத் தள்ளி வைக்கின்றான். இந்தக் கருத்தோடு அமைந்த செய்யுள் இது.]
செலவிரை வுற்ற அரவம் போற்றி
மலரேர் உண்கண் பனிவர ஆயிழை
யாம்தற் கரையவும் நாணின வருவோள்
வேண்டா மையின் மென்மெல வந்து
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி
5
வெறிகமழ் துறுமுடி தயங்க நல்வினைப்
பொறியழி பாவையின் கலங்கி நெடிதுநினைந்து
ஆகம் அடைதந் தோளே, அது கண்டு
ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கேற் றங்கு, எம்
10
பொருள்மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்றே!
தெளிவுரை : யாம் பொருள் கருதிச் செல்லுதற்குரியவற்றை விரைந்து செய்துவருதலைப் பற்றிய எம் சொல்லையும், அது கேட்பது தன் கடமையெனக் கொண்டு விரும்பிக் கேட்டனள். ஆயினும், குவளை மலரைப்போலும் மையுண்ட அவள் கண்களிலிருந்தும் அப்போது கண்ணீரும் வழிந்தது. ஆராய்ந்தணிந்த கலன்களையுடையாளான அவளும், யாம் அதனையறிந்தேமாய், அவளை எம்மருகே வருமாறு கூப்பிடவும், அவள் தன் செயலுக்கு நாணினளாக மெல்ல வருவாளாயினாள். என் பிரிவை அவள் உள்ளத்து விரும்பாமையினாலேயே, மெல்ல மெல்ல அடிவைத்து வந்தனள். யாதும் என்பால் வினவுதலும் அன்றி, யாதுங் கூறி என் செலவைத் தடுத்தலும் செய்யாள் ஆயினள். மணங் கமழும் தன் கூந்தல் முடியானது அசையுமாறு, விசையானது கெட்டமையாலே செயலற்றுப்போன நல்ல வேலைப்பாடமைந்த ஓர் எந்திரப் பாவையேபோலத் தன் நிலை கலங்கியவளும் ஆயினாள். நெடும்பொழுதுக்கு எதையோ நினைந்தாளாய்ப் பித்துற்று நின்றவள், சோர்ந்து என் மார்பின் மேல் மயங்கியும் விழுந்தனள். அவளது அந்நிலையைக் கண்டேம். ஈரமண்ணாலே செய்யப்பட்டு நீர் கசிந்துகொண்டிருந்த பசுமண் கலமானது, பெருமழைப் பெயலிலே கொண்டு வைத்தபோது முற்றவும் கரைந்து அழிந்து போயினாற்போலே, பொருளின் பொருட்டு அவளைப் பிரியக்கருதிய என் நெஞ்சமும் அதன்பாற் செல்லாது கரைந்து, அவளோடேயே ஒன்றிக் கலந்து விட்டது; இனிப் பிரிந்து போவதென்பதுதான் யாங்ஙனம் கைகூடுமோ?
கருத்து : 'பிரிவு' என்னும் சொல்லைக் கேட்டதும் அவளது உள்ளத்தில் பொங்கிப் பெருகிய கலக்கமிகுதியைக் கண்டேன். ஆதலின், 'அவளைப் பிரியாதிருத்தலே இதுகாலை செய்யத்தக்கது எனப் பயணத்தை நிறுத்திக்கொண்டேன்' என்பதாம்.
சொற்பொருள் : விரைவுற்ற – விரைந்து அதற்காவன செய்த. அரவம் – பேச்சரவம்; இது பிறரிடம் பேசக் கேட்ட. சொற்களும் ஆகும். பனி – கண்ணீர்த் துளிகள். கரையவும் –கூப்பிடவும். வேண்டாமை – விரும்பாமை. தகைத்தல் – தடுத்தல். வெறி – மணம். துறுமுடி – கூந்தலை முடித்துக் கொண்டையிட்டிருத்தல்; அந்தக் கொண்டையைக் குறிக்கும். பொறி – விசை. அடைதல் – அடைக்கலமாகக் கொள்ளல்; சாய்ந்து வீழ்தல். பசுங்கலம் – சுடாத பச்சை மண்கலம். பெருமழைப் பெயல் – பெருமழையின் பெயல்; பெருமேகத்தின் பெயலும் ஆம்.
விளக்கம் : 'பொறியழி 'பாவையிற் கலங்கித் தன் ஆகம் அடைந்தவள்' எனத் தலைவியது அன்பின் பெருக்கத்தை உணர்த்தினார். 'பொருள்மலி நெஞ்சம் புணர்ந்து வந்தன்று' என்றது. அன்பிற் கனிந்த இவளை அடைந்திருப்பதைக் காட்டினும், பொருள் அத்துணைச் சிறந்ததன்றெனத் தன் நெஞ்சமே நெகிழ்ந்து ஒன்றுபட்டதெனத் தன் ஆர்வமிகுதியையும் கூறினதாம்."ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம், பெருமழைக் பெயற்கு ஏற்றாங்கு" என்றது சுவையான உவமை. அப்கலமானது பெருமழையில் கரைந்து நெகிழ்ந்து போவதுபோல, பொருள் ஆர்வத்தாலே செறிந்த அவன் உள்ளவன்மையும், அவள் நிலை கண்டதும் நெகிழ்ந்து கட்டுவிட்டது" என்று கொள்க.