309. யான் தேறியிருப்பேன்!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : வரை விடை ஆற்றாள் எனக் கவன்று, தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.

[(து-வி.) தலைவன், தலைவியை நாடி வரைந்து வருவதற்கு உரியதான குறித்த காலம் நீட்டித்துக் கொண்டே போயிற்று. அதனாலே, தலைவியும் பொறுக்கவியலாத் துயரத்தே பட்டவளாக உழன்றனள். 'இதனால் இவள் உயிர் அழிந்தும் போவாளோ?' என்று அவள் தோழி கலங்கினாள். தோழியின் கலக்கத்தை அறிந்தாளாகிய தலைமகள், அவள் கொண்ட துயரைத் தணிக்கும் வகையாலே, தான் ஆற்றியிருக்கும் மன உறுதியுடையவள் எனத் தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்
தளிர்வனப் பிழந்தவென் நிறனும் நோக்கி
யான்செய் தன்றிவள் துயரென அன்பின்;
ஆழல் வாழி தோழி வாழைக்
கொழுமடல் அகலிலைத் தளிதலைக் கலாவும்
பெருமலை நாடன் கேண்மை நமக்கே
விழுமம் ஆக அறியுநர் இன்றெனக்
கூறுவை மன்னோ நீயே
தேறுவன் மன்யான் அவருடை நட்பே.

தெளிவுரை : தோழியே! நீயும் வாழ்வாயாக! தொடி நெகிழ்தலாலே என் தோள்களும் மெலிவுற்றன; உடல் வாட்டத்தாலே மேனியின் இரேகைகளும் சுருங்கிப் போயின; என் மேனியும் பண்டைய மாந்தளிரின் வனப்பை இழந்து விட்டதாய், தன் நிறமும் மாறிவிட்டது; இவற்றை எல்லாம் நீயும் நோக்குவாய்! "யான் செய்த பிழையாலேதான் இவளுக்கு இத்துயரமெல்லாம் வந்துற்றன" என நீயும் நினைவாய். என்பாலுள்ள மிகுதியான அன்பினாலே பெரிதும் வருந்தவும் செய்வாய்! அங்ஙனம் எண்ணி வருந்தாதிருப்பாயாக! நம் தலைவன், வாழையினது கொழுமையான மடலிடத்தேயுள்ள அகன்ற இலைகளிலே மழைத்துளிகள் கலந்து தங்கியிருக்கின்றதான, பெருமலை நாட்டினன் ஆவான்! 'அவனுடைய நட்பானது நமக்குத் துன்பந்தருவதாக ஆகின்றவிதனை அறிபவர் எவரும் இல்லையே?' என, நீயும் கூறுவாய். ஆயினும், அவருடைய நட்பினது உறுதியை யான் நன்றாகத் தெளிந்திருக்கின்றேன்; ஆதலின், அவர் வரும்வரையிலும் பொறுத்துத் தேறியிருப்பேன் என்று நீயும் அறிவாயாக.

கருத்து : அது வரும்வரை ஆற்றியிருப்பேன் என்பதாம்.

சொற்பொருள் : வரி – இரேகைகள். ஆழல் – வருந்தல்; துயருள் அழுந்தலும் ஆம். விழுமம் – துன்பம். தளி – மழைத்துளி. தேறுதல் – தெளிதல். கேண்மை – கலந்து உறவாகும் நட்பு. கலாவும் – கலக்கும்.

விளக்கம் : 'தலைவன் பிரிந்து போயின களவொழுக்கத்தின் பல காலத்தும், வாய்மை பிறழாதே மீண்டும் குறித்தபடியே வந்தவனாதலின், அவன் நம்பேரிற்கொண்ட அன்பும் உறுதியானதாகலின், அவன் தவறாதே வருவான் என்று தான் தேறியிருப்பதாகத் தலைவி கூறுகின்றாள். தோழியைத் தேற்றும் வகையிலே தலைவி இவ்வாறு கூறினளேனும், அவள் உள்ளத்தவிப்பினைத் தாமே காட்டும் மேனியின் மெலிவை அவளால் மூடி மறைக்கவும் இயலவில்லை. ஆனால், 'யான் செய்தன்று இவள் துயர்' என்று தோழி வருந்துவதில் பொருளில்லை எனவும், தானே அவனைத் தன் உயிர்க்காதலனாகக் கொண்டு அவன் நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டதாகவும் உரைக்கின்றனள்.

'கொழுமடல் அகலிலைத் தளிதலைக் கலாவும் பெருமலை நாடன்' என்றது, தலைவனும் அத்தளிபோலத் தனக்கு அருள் செய்யும் கனிவுடையவன் என்பதாம். கொழுமடல் அகலிலைத் தளிதலைக் கலாவியதும், வாழையானது பொதிவிட்டுப் பூவைத்தள்ளும்; இவ்வாறே அவன் அருள் அவளும் இல்லறமாற்றி நன்மகப்பெற்று இன்புறுவள் என்பதுமாம்.

உள்ளுறை : 'வாழை மடலிலே மழைத்துளிகள் கலந்திருக்கும் என்று உரைத்தது, 'தன் உள்ளத்திலேயும் அவன் அவ்வாறே தங்கிக் கலந்திருப்பவன்' என்று உரைத்ததாம். அதனால், தான் அவனை நினைந்து வருந்துவதும் மறப்பதும் இல்லையென்றதும் ஆம். அவன் வரும்வரை ஆற்றியிருக்கும் உறுதியுடையவள் தான் என்பதுமாம்.

'தளிர்வனப்பு' என்றது மாந்தளிர் வனப்பை. 'மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர்' எனத் திருமுருகாற்றுப் படையுளும் வரும் (143).

பாடபேதங்கள் : 1. நெகிழ்த்த தோளும். 2. அழாஅல்வாழி. 3. விழுமமாக அறியுநர் இன்றென.

மேற்கோள் : 'உயிரினும் சிறந்தன்று நாணே' எனத்தொடங்கும் சூத்திர உரையின் கண்ணே, 'தோழியை ஆற்றுவித்ததற்கு', ஆசிரியர் நச்சினார்க்கினியர், இப்பாட்டினை மேற்கோள் காட்டுவர் (தொல். பொருள்: 113).

பயன் : தோழியை ஆற்றுவிக்கும் பொழுதில், அவள் கூறிய சொற்களை மெய்ப்பிக்கும் பொருட்டாகவேனும், அவள் மேலும் சில காலம் ஆற்றியிருப்பாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/309&oldid=1698567" இலிருந்து மீள்விக்கப்பட்டது