310. போர்வை அஞ் சொல்!

பாடியவர் : பரணர்.
திணை : மருதம்.
துறை : (1) வாயிலாகப்புக்க விறலியைத் தோழி சொல்லியது; (2) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.

[(து-வி) 1. தன் மனைத் தலைவியைப் பிரிந்து, பரத்தமை, உறவிலே களித்தான் ஒருவன்; அவன், மீளவும் தன் தலைவியை விருப்புற்று நாடியவனாகத் தன் வீட்டிற்கு வருகின்றான்; தலைவி பால் விறலியைத் தன் பொருட்டாகத் தூதாகப் போக்குகின்றான்; அவளும் வந்து, தலைவியிடம், அவளைத் தலைவனுக்கு இசையுமாறு செய்விக்கக் கருதினவளாகப்பலப்பல கூறுகின்றாள். அவள் பேச்சினால் தலைவிக்கு மனம் சற்றும் மாறவில்லை. தலைவியின் தோழி விறலிக்கு விடைதருகின்ற வகையில் அமைந்த செய்யுள் இது.

2. தலைவன் பரத்தமை உடையவன்; அவனுக்கு அவ்வகையிலே உதவி நிற்பவள் ஓர் விறலி; அவளை வழியிற் காண்கின்றாள், தலைவனால் விரும்பி உறவுகொண்டு பின்னர்க் கைவிட பெற்றாளான காதற் பரத்தை ஒருத்தி; அப்பரத்தை அவ்விறலி யிடத்தில் தன் ஆற்றாமைதீரப் பேசுவதாக அமைந்த செய்யுள் இது

இந்த இருநிலைக்கும் பொருந்துமாறு அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.]


விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு—நாளை
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே! 5
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட் டோராத் தாயரோடு ஒழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே?—வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல 10
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே!

தெளிவுரை : 'சுடர் விளக்கைப் போன்றதாகச் செவ்வொளியினைச் சுடர் விட்டபடியிருக்கும் தாமரை மலர்கள்; அவை களிற்றின் காதைப்போன்ற அதன் பசுமையான இலைகளோடு தாமும் சாய்ந்து அலைபடும்; நீர் உண்ணும் துறைக்கண்ணே நீர் முகத்தற்பொருட்டு இறங்கிய மகளிர் அதுகண்டு அஞ்சி ஓடுவர். ஆழமான நீர் மிகுந்த பொய்கையிலே இவை உண்டாகுமாறு வாளைமீன்கள் துள்ளிப் பிறண்டபடியே இருக்கும். இத்தகைய ஊருக்கு உரியவன் தலைவன். அவனுக்கு ஒவ்வொரு நாளைக்கும் புதியவளான பரத்தை ஒருத்தியைக் கொண்டு கூட்டுவதற்கு முற்பட்டுள்ள, மடமை பொருந்திய பெண்ணே!

மெய்ம்மையே பேசியறியதாத நின் நாவினாலே, நிலைகுலைந்தவாறு தாழ்மை உடையதாகப் பேசுகின்ற நின் குறும்பேச்சினாலே, நினக்கு உடன்பட்டுவிட்ட அப்பரத்தையரின் தாய்மாரோடு, நீயும் ஒரு சார் அடைந்திருந்தனையாய்—

விரைவாக ஆன் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணனின் கையிடத்ததாகியதும், பெரிதாக உயிர்த்தலை உடையதுமாகிய தண்ணுமையினைப் போல, உள்ளே யாதுமில்லாத ஒரு மேற்போர்வை போலும் நின் சொற்களை, இன்னும் சொல்லவில்லையோ? அங்ஙனம் சொல்லி, அவரையும் நின் தொழிலுக்கு உட்படுத்தவில்லையோ?"

கருத்து : 'தலைவனது காமத்துக்கு இசையப் பரத்தையரைக் கூட்டித்தந்து, தான் பொருட் பயன்பெறும் விறலியின் பெண்மைத் தன்மையை எள்ளி நகையாடி, அவள் பேச்சுத்தம்மிடமும் செல்லாது என்றதாம்.

சொற்பொருள் : விளக்கு – விளக்குச்சுடர்; தாமரையின் செந்நிறத்துக்கு உவமை. சுடர்விடு – ஒளிவிடு. பாசடை – பசிய இலை. தயங்க – அலைபட. இரிதல் – அஞ்சி ஓடுதல். குண்டு நீர் – ஆழமான நீர் நிலை. 'தொலைந்தநா' – உண்மை தொலைந்து போன நா. குறுமொழி – குறுகப்பேசும் பேச்சு. தாயர் – பரத்தையரின் தாயர். வல்சி – உணவு. போர்வையஞ்சொல் – உள்ளீடற்று மேற்போர்வையால் மட்டுமே கேட்பதற்கு அழகிதாகத் தோன்றும் பொருளற்ற ஆரவாரச் சொல்.

விளக்கம் : பேச்சிலே நகைச்சுவை பொதிந்து கிடக்கிறது. நின் தலைவனுக்குப் புதிய பெண் ஒருத்தி தேவையானால், இங்கு ஏன் நீ வரவேண்டும்? அவன் தரும் பொருளை விரும்பும் பரத்தையின் தாயரையே கண்டு பேசிச் சேர்த்து வைக்கலாமே? என்கின்றது காண்க. 'நின் சொல் எம்பாற் பயன்படாது' என்பதும் ஆம். இதனால், சொல்பவரின் வெகுளியையும் காணலாம்.

இறைச்சிப் பொருள் : 'வாளைமீன், தாமரை வருந்தவும், மகளிர் அஞ்சி ஓடவும், குண்டு நீரில் துள்ளிப் பிறழும்' என்றனள். தலைவனும் யாம் வருந்தவும், காமக்கிழத்தியர் இல்லத்திலிருந்து கதறவும், நீ சேர்த்துவைத்த புதிய பரத்தையிடம் சென்று தங்கா நிற்பான் என்றதாம்.

மேற்கோள் : ஆசிரியர் நச்சினார்க்கினியர், இது 'விறலிக்கு வாயின் மறுத்தது' என்று, 'பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்' என்னும் சூத்திரத்தின் உரையுள் (தொல். பொருள் 156) இச்செய்யுளை எடுத்துக் காட்டுவர்.

பாடபேதங்கள் : மகட்கொடை பொதிந்த மறங்கெழு பெண்டே.

பயன் : தலைவனின் காமக்கிழத்தியர் இல்லுறை மனைவி போல உரிமை கொண்டாடுதலைத் தடுத்ததாகும் இது; அவர் நிலையை விளக்கியதுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/310&oldid=1698570" இலிருந்து மீள்விக்கப்பட்டது