320. எதனைக் கருதினள் அவள்?

பாடியவர் : கபிலர்.
திணை : மருதம்.
துறை : பரத்தை தனக்குப் பாங்காயினாள் கேட்ப நெருங்கிச் சொல்லியது. சிறப்புற்றோர்; பாரி, ஓரி முதலியோர்.
[(து-வி.) தலைமகன் ஒருவன் பரத்தமை இயல்பினன். ஒருத்தியோடு உறவு கொண்டு, அவளைக் கைவிட்டு மற்றொருத்தி மையலில் சென்றனன். இதனால் முதற்பரத்தை சினங்கொண்டனள். ஒருசமயம் தலைவனை அவ்வழியே செல்லக் கண்டவள் தன் தோழியர்க்கு உரைப்பாள் போல, தலைவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]


விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று
எவன்குறித் தனள்கொல் என்றி யாயின்
தழையணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்குப் பழவிறல்
ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவிற் 5
காரி புக்க நேரார் புலம்போல்
கல்லென் றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
எழில்மா மேனி மகளிர்
விழுமாந் தனர்தங் கொழுநரைக் காத்தே. 10

தெளிவுரை : தோழி! ஊரிடத்தே நிகழ்த்தப்பெறும் திருவிழாவும் நிகழ்ந்து முடிந்தது. விழாவின் பொருட்டாக முழங்கிய முழவுகளும் ஓய்ந்து கிடக்கின்றன. இக்காலத்தில், இவள்தான் யாதனைக் கருதினாளோ? என்று கேட்பாயானால், கூறுவேன் கேட்பாயாக:—

ஒருநாள் உடுக்கும் தழையுடையை அணிந்தபடியே, அவ்வுடை அசைந்தாடும் அல்குலை உடையவளாக, இவ்விளையோள் தெருவிடத்தே நடந்து சென்றனள். அந்த ஒன்றினுக்கே—

பழமையாகிய வெற்றிச் சிறப்பையுடையவன் வல்வில் ஓரி என்பவன். அவனைக் கொன்றவன் திருமுடிக்காரி என்பவன். கொன்றபின், அவ் ஓரியது ஊரிடத்து ஒப்பற்ற பெருந்தெருவினுள்ளே புகுந்தனன் காரி. அவன் புகுந்ததைக் கண்டதும், அவன் பகைவராகிய ஓரியைச் சார்ந்தோர் பலரும் ஒருசேரப் பேரிரைச்சல் இட்டனர். அவ்வொலிபோன்ற பெருநகைப்பின் ஒலியும் ஊரிடத்தே அப்போது உண்டாயிற்று.

அந்நகையொலியைக் கேட்டனர் ஆராய்ந்தணிந்த வளைகளையுடையவரும், அழகிய மாந்தளிரின் வனப்பமைந்த மேனியை யுடையவருமான அவ்வூர் மாதர்கள், இவள் நம்முடைய கேள்வரையும் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்று எண்ணி அஞ்சினர். தம்தம் கொழுநரைக் காவலிட்டுச் செறிப்புச் செய்து பாதுகாத்துக்கொண்டு நன்மை அடைந்தனர். அங்ஙனம், அவரவர் தத்தம் கொழுநரைப் பாதுகாத்துக் கொண்டதனாலே, இவள் செயல் பயன்படாமற் போயினதனாற் போலும், இவனைக் கைப்பற்றிக்கொண்டு அகன்றனள். காண்பாயாக!

கருத்து : 'இவன் ஒருவனே அவளுக்குக் கைப்பற்றுதற்கு எளியனாவான்' என்று, அவனது பரத்தமை குறித்து எள்ளி நகையாடியதாம்.

சொற்பொருள் : விழவு – ஊர் விழவு. தழை – தழையுடை. அலமரல் – அசைதல். இளையோள் – இளையவளான பரத்தை; அலமரும் அல்குல் இளையோள் என்றது அவள் அசைந்தசைந்து நடந்து சென்ற ஒயிலைக் கூறியது. பழவிறல் – பழமையான வெற்றிச் சிறப்பு. ஒரு பெருந் தெரு – ஒப்பற்ற பெருந்தெரு; என்றது, அரசனின் கோயில் இருந்த அரச வீதியை. நேரார் – பகைவர். புலம் போல் – புலப்பம் போல். பேரிரைச்சல் போல். காரி புகுந்ததும் ஓரியின் கூட்டத்தார் நகையாடிப் பேராரவாரம் செய்தது, அவன் ஓரியை வஞ்சித்துக் கொன்றதன். மறமாண்பற்றதான செயலைக் கருதியாம். விழுமாந்தனர் – சிறப்பு அடைந்தனர்; நன்மை அடைந்தனர்; அவளைக் கண்டு மயங்கிப் பின்போகாதபடி தம் கொழுநரைக் காத்துக்கொண்டனர்.

விளக்கம் : காளிகோயில் விழாநாளில் இன்றும் வேப்பந்தழையாடை அணிந்தபடி மகளிர் வீதிவலம் வந்து பணிவது மரபு; இதே மரபு பண்டும் இருந்தது. ஆனால், அவள் விழாவிழந்த நாளில் தழையுடை உடுத்துத் தெருவில் வந்தது ஆடவரை மயக்கித் தன் வலைப்படுத்துதற்கே என்பதாம். மாதர் பலரும் தத்தம் கொழுநரைக் காத்துக் கொண்டனர்; எவரானும் காத்தற்குரிய தகையற்ற இவன் அவள் வலைப்பட்டு அவள்பின் போயினன் என்றதாம். இதனால், அவளைப் பழித்ததோடு, தலைவனின் கட்டவிழ்ந்த பொறுப்பற்ற தன்மையையும் எள்ளி நகையாடினள் என்று கொள்ளுக. 'முழவும் தூங்கின்று' என்றது விழாவில் முழங்கிய அதுவும், விழா முடியவும் செயலற்றுக் கிடந்தது என்பதாம். அதற்குரிய இடத்தில் தொங்கவிடப் பெற்றிருந்தது எனலும் ஆம்.

இதனால், பரத்தை தன் அயர்வு தீர்வாள் என்று கூறலாம்.

பயன் : அவள் மயக்கிலே மயங்கிக் கிடக்கும் தலைவன் மயக்கம் தீர்ந்ததும் அவள்பால் மீள்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/320&oldid=1698595" இலிருந்து மீள்விக்கப்பட்டது