321. வறுமனை நோக்கி வருந்துவளோ!

பாடியவர் : மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். :திணை : முல்லை.
துறை : வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

[(து-வி.) வினைவயிற் பிரிந்து சென்ற தலைவன், வினை முடிந்தபின், தன் வீடுநோக்கித் திரும்புகின்றான். அவன் நினைவு முற்றவும் அவன் மனைவியிடத்தேயே செல்லுகின்றது. அவன், தன் பாகனிடத்தே, தேரை விரைவாகச் செலுத்தும் படி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை
பாடின் தெண்மணித் தோடுதலைப் பெயரக்
கான முல்லைக் கயவாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற்புறத் தணியக்
கல்சுடர் சேருங் கதிர்மாய் மாலைப் 5
புல்லென் வறுமனை நோக்கி மெல்ல
வருந்துங் கொல்லோ திருந்திழை அரிவை
வல்லைக் கடவுமதி தேரே சென்றிக
குருந்தவிழ் குறும்பொறை பயிற்றப்
பெருங்கலி மூதூர் மரந்தோன் றும்மே. 10

தெளிவுரை : செம்மண் நிலத்தையுடைய காட்டினிடத்தே, புல்லிய மயிரையுடைய யாடுகளின், தெளிந்த இனிய ஓசையுடைய மணிகள் கழுத்திலே கட்டப்பெற்ற கூட்டம் எல்லாம், தாம் மேய்வதனை விட்டுத் தொழுவம் சென்று புகுமாறு ஊரைநோக்கிப் பெயரா நிற்கும். கானத்தின் கண்ணுள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரினைச், சாரலின் புறத்துள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடா நிற்பர். ஆதித்தன் அத்தமனக் குன்றினைச் சேருகின்றதான, கதிரவன் ஒளி மழுங்கிய அத்தகைய மாலைப் பொழுதிலே—

திருத்தமாகச் செய்த கலனணிந்தவளான என் காதலியானவள், யான் இல்லாமையாலே பொலிவிழந்துபோன வறிய மாளிகையை நோக்கியவளாக, மெல்ல மெல்ல வருத்தங் கொண்டிருப்பாளோ?

பாகனே! குருந்த மரங்கள் மலர்கின்ற காட்டினிடத்தே நெருங்குதலும், பேரொலியுடைய நம் ஊரிடத்துள்ள மரங்கள் தோன்றாநிற்கும். நம் தேரையும் விரைவாகச் செலுத்திச் சென்றனையாய், அவ்விடத்தைச் சென்றடைவாயாக!

கருத்து : 'அவள்பால் விரையச் சென்றடைதலை நெஞ்சம் விரும்பிற்று' என்பதாம்.

சொற்பொருள் : செந்நிலப் புறவு – செம்மண் நிலங் கொண்ட காட்டுப் பகுதி. புன்மயிர் – குறுகலான மயிர். புருவை – யாடுகள். பாடின் தெண்மணி – தெளிவாக ஒலிக்கும் இன்னோசையுடைய மணி. தோடு – தொகுதி; ஆட்டுக் கூட்டங்கள். தலைப்பெயர – வீடு நோக்கித் திரும்புதலை மேற்கொள்ள. கயவாய் அலரி – அகன்ற வாயையுடைய விரிந்த பூக்கள். சாரற்புறத்துப் பார்ப்பன மகளிர் – மலைச்சாரலின் புறத்தேயுள்ள பார்ப்பனச் சேரியிடத்து உள்ளவரான் பார்ப்பன மகளிர்; பார்ப்பனச் சேரி ஊரைச் சேராது தனித்தொதுங்கி இருந்ததாதலின் சாரற் புறத்து என்றனர். 'கல்' என்றது அத்தமன கிரியினை. கதிர்மாய் மாலை – கதிரவனின் கதிர்கள் ஒளிமங்கிவிடும் மாலைக் காலம். 'அரிவை' என்றது, தன்னுடைய மனைவியை. குருந்து – குருந்தமரம். பெருங்கலி மூதூர் – பெரிய ஆரவாரத்தையுடைய மூதூர். குறும் பொறை – குறிய பொற்றைகளைக் கொண்டதான சாரற்பகுதி.

விளக்கம் : ஆடுகள் ஊர்நோக்கித் திரும்புதலும், பார்ப்பன மகளிர் பூச்சூடியிருத்தலும், அவன் வழியிடைக் கண்ட காட்சிகள். அவற்றைக் காண்பவன், தானும் விரைய வீடுசேர்வதையும், தன் மனைவியும் தான் சென்றடைந்த களிப்பினாலே மலர்சூடி மகிழ்தலையும் நினைக்கின்றான். 'மரந்தோன்றும்' என்றதனால், ஊர் அணிமையிலுள்ளதென்பதைக் குறிப்பிட்டுத் தேரை விரைவாகச் செலுத்தும்படி கூறுகின்றனன்.

'முல்லைக் கயவாய் அலரி' என்றது, முல்லை இதழ்விரிந்து மலர்ந்துள்ளதனைக் கண்டு கூறியதாம்.

'பார்ப்பன மகளிர் கார்ப்புறத் தணிய' என வருவன, பார்ப்பாருட் சிலர், அந்நாளில் மருதத்தைவிட்டு முல்லை நிலப்பகுதிகளிலும் சென்று வாழ்ந்து வந்தனர் எனக் காட்டும். மாலை வேளையிலே பார்ப்பன மகளிர் முல்லைக் கயவாய் அலரியை விரும்பித் தம் கூந்தலிற் சூடினர் என்பது, அவர்தம் இன்பமயக்கத்தையும், புனைதல் விருப்பத்தையும் காட்டும். இன்றும் இவர் இவ்வாறு அணிவதனைக் காணலாம்.

பயன் : பாகன் தேரை விரையச் செலுத்தலாலே ஊரை அடைந்தவன், தன் தலைவியைத் தழுவி இன்புற்று மகிழ்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/321&oldid=1698598" இலிருந்து மீள்விக்கப்பட்டது