326. தும்மும் மந்தி!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகனை வரைவு கடாயது.

[(து-வி.) களவு வாழ்வே இனிதென மயங்கி, வரைந்து மணங் கொள்ள நினையாதானாய் வந்து ஒழுகும் தலைமகனின் போக்கைக் கண்டு, தோழிக்கு வருத்தம் உண்டாகின்றது. அவன் உள்ளத்தை வரைவிலே செலுத்தக் கருதிய அவள், அவன் பிரிவால் தலைவிக்கு நேரும் துயரமிகுதியைக் கூறுவது போல, இவ்வாறு கூறி அவனை உணர வைக்கின்றாள்.]


கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன்,
செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கினம்
மீன்குடை நாற்றம் தாங்கல் செல்லாது
துய்த்தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல்—இவட்கே 5
நுண்கொடிப் பீரத்து ஊழ்உறு பூஎனப்
பசலை ஊரும் அன்னோ; பல்நாள்
அரியமர் வனப்பின்எம் கானம் நண்ண,
வண்டெனும் உணரா வாகி,
மலரென மரீஇ வரூஉம், இவள் கண்ணே. 10

தெளிவுரை : கொழுமையான சுளைகளைக்கொண்ட பலாப்பழங்கள் நிறைந்திருக்கின்ற பலாமரங்களையுடைய மலைச்சாரலிலே, செழுமையாகக் காய்த்துப், பாரம் தாங்காமல் வளைந்து கிடக்கும் கரியதொரு பலா மரக்கிளையிலே, கொக்கானது மீனைக் கொணர்ந்து குத்திக் குடைந்து தின்றிருப்பதனாலே உண்டான நாற்றத்தைப் பொறுக்கமாட்டாதாய், பஞ்சுபோன்ற மயிரையுடைய தலையினைக் கொண்ட மந்தியானது, தும்மியபடியே இருக்கும் மலை நாட்டோனே!

பல நாளும் நீதான் எம்முடைய புனத்தயலே வருதல் உண்டாயினும், வரிகள் பொருந்திய வனப்பினையுடைய கருவண்டு என்னும் உணர்விழந்தவாய், தம் அழகிழந்து, பழம் பூக்கள் போலக் கலங்கி அழகழிந்துபோகும் இவள் கண்களும், நுண்ணிய கொடியையுடைய பீர்க்கினது உதிர்தல் பொருந்திய பழம் பூவோ என்னும்படியாகப் பசலையும் படரா நிற்குமே! ஐயோ! அதனை நினக்குச் சொல்லவும் நாணுவனே யான்! இனியேனும் இந்த நிலை வாராதே காப்பாயாக என்பதாம்.

கருத்து : இடையீடுபடும் சிறுபிரிவையும் இவள் தாங்காதவள் என்று உணர்ந்து, விரைவில் மணந்து கொள்வாயாக என்பதாம்.

சொற்பொருள் : கொழுஞ் சுளை – கொழுமையான சுளை. கொழுஞ்சுளைப் பலா என்பது, பலாவின் பல வகையுள்ளும் சிறந்ததான ஒன்று; இதனைச் செம்பலா என்று போற்றுவர். கவான் – மலைச் சாரல். செழுங்கோள் – செழுமையான காய்கள் கொண்ட நிலை. மாச்சினை – கரிய கிளை; பெரிய கிளையும் ஆம். குடைநாற்றம் – குடைந்து உண்டதாலே, அவ்விடத்திருந்து எழும் புலால் நாற்றம். துய் – பஞ்சுபோன்ற மயிர். ஊழ் உறுபூ – உதிர்தலைப் பெறுகின்ற பழம்பூ. அரி – செவ்வரி. 'அறியமர் வனப்பின் கானம்' என்று பாடம் கொண்டு, 'அறிதலைப் பொருந்திய அமர்ந்த அழகினைக்கொண்ட கானம்' எனவும் கொள்வர். 'வண்டு' – கருவண்டு; 'உண்டு' என்றும் பாடம் கொள்வர்; அப்போது, நீதான் கானம் சேர்ந்து அருகிலே உளதானபோதும், அவ்வுணர்வை இழந்து, அடுத்து நீ பிரிவதைப் பற்றியே நினைந்து கண்கள் கலங்கும் என்று உரை கொள்க.

உள்ளுறை : பலாமரம் தினைப்புனமாகவும், கொக்கு தலைவனாகவும், மீன் தலைவியாகவும், குடைதல் இன்ப நுகர்ச்சியாகவும், நாற்றம் ஊரலராகவும், மந்தி அன்னையாகவும் கொண்டு உவமையைப் பொருத்தி உள்ளுறை பொருள் காண்க. தினைப்புனத்து வந்து இவளைக் கலந்து போவதாலாகிய நின் செயலை அலரால் அறிந்து அன்னையும் சினத்தோடு பார்ப்பாளாயினள் என்பதாம்.

விளக்கம் : கொழுஞ்சுளைப் பலாவினை உண்டு களிக்கக் கிளைமீது வந்த மந்தியானது, புலால் நாற்றத்தால் தும்மிக்கொண்டே அகலும் என்பதுபோல, தலைவியை அடைய விரும்பிவரும் தலைவனும், அலருரை ஆரவாரத்தால் அவளை அடையாதே வறிது மீளவும் நேரும் என்றும் சொல்லலாம்.

பயன் : தலைவன் விரைவிலேயே வரைந்துவந்து தலைவியை மணந்து கொள்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/326&oldid=1698610" இலிருந்து மீள்விக்கப்பட்டது