327. சாகலும் இனிதே தோழி!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.

[(து-வி.) தலைவன் நெடுங்காலம் களவுறவையே நாடி வருதலன்றி, மணவினையிற் கொள்ளக் கருதாத காரணத்தால் தலைவி வருந்துகின்றாள். அவளைப் பொறுத்திருக்குமாறு கூறும் தோழிக்கு, அவள், தன் நிலைமையைச் சொல்லுவதாக அமைந்தது இந்தச் செய்யுள்.]


நாடல் சான்றோர் நம்புதல் பழியெனின்
பாடில கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே—காதலம் தோழி!
அந்நிலை அல்ல ஆயினும், 'சான்றோர்
கடன்நிலை குன்றலும் இலர்' என்று, உடனமர்ந்து 5
உலகம் கூறுவ துண்டென, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே—போதவிழ்
புன்னை ஓங்கிய கானல்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.

தெளிவுரை : தோழீ! என்பால் அன்பு கொண்டவளே! நம்முடைய உறவினை விரும்பியவராக வந்து, அன்போடு ஒழுகுகின்ற சான்றோரான நம் தலைவரை நம்பி வாழுதல் பழியைத்தருவது என்றால், தூங்காதனவாய் அழுதபடியே துன்புறும் கண்ணினோடு, நாளுக்குநாள் உடல் இளைப்புற்றுச் சாவினைப் பெறுதலும் நமக்கு இனி இனிதேயாகும்! அவ்வாறு இறந்து போவதுதான் இயல்புடையதன்று என்றாலும், 'சால்பினை உடையவர் தாம் செய்யும் கடமையிலே எப்போதும் குறைவுபடவே மாட்டார்' என்று, சேரப்பொருந்தி உலகம் உரைப்பதான சொல்லும் உளதாகும் எனக் கொண்டோமாகிய எமக்கு, அரும்புகள் மலர்கின்ற புன்னைமரங்கள் உயரமாக வளர்ந்துள்ள கடற்கானற் சோலையினையுடைய தண்ணிய அழகான துறைவனது மெத்தென்ற மார்பானது, உரிமைப் பொருள் ஆகுதலும் முடிவில் உரியதேயாகும். இரண்டினுள் ஒன்று வாய்ப்பது தவறாது என்பதாம்.

கருத்து : இதனைக் கேட்பவன் பின்னும் காலம் தாழ்க்காதே அவளை வரைந்து மணப்பதற்கு முனைவான் என்பதாம்.

சொற்பொருள் : நாடல் – விரும்புதல். பழி – பழியுடையதொரு செயல். பாடுஇல – படுதல் இழந்த; உறக்கமிழந்த. சாஅய் – தளர்ந்து சோர்ந்து இளைத்து. கடன்நிலை – கடமையின் தன்மை. உடனமர்ந்து – ஒன்று சேர்ந்து. தாயம் – உரிமையாக வந்து வாய்க்கும் பொருள். போது – அரும்பு. துறைவன் – கடற்றுறை நாடன். சாயல் – மெத்தென்னும் தன்மை.

இறைச்சிப் பொருள் : தன்னை அடைந்தாரைக் கைவிட்டு மனங்கலங்கி இளைத்துப் போகச் செய்த கொடுமையாளனையுடைய சோலையாக இருந்தும், புன்னைதான், தான் அரும்பு மலர்ந்து மணம் நிறைக்கா நிற்பதும் எதனாலோ என்று வியந்த தாம்.

விளக்கம் : புன்னை போதரும்பி மணம் பரப்பும் காலம் நெய்தல் நிலத்தவர் மணம் வேட்கும் காலமாதலால், அந்தச் செவ்வியைக் கண்டும் தன் கடமை மறந்தானே தலைவன் என்று வெதும்புகின்றனள். தானே உணராதானுக்கு அவை உணர்த்திக் காட்டியும் தெளிவு ஏற்படவில்லையே என்று நினைந்து நொந்ததும் ஆம்.

உலகத்தின் உரையானது பொய்க்காது என உறுதி கொள்ளும் நிலையல்லாமல், அவனுடைய போக்கிலே அதற்கான எந்தவொரு குறிப்பும் காணாத அவள், முதலில் 'சாதலும் இனிதே' என்று கூறினள்; அதனால் எய்துவது யாதும் இல்லாததால், பின்னர் உலக மொழிப்படி ஒருக்கால் அவனை அடைதலும் வாய்க்கும் என்று நினைந்து ஆறுதல் காண்கின்றனள்.

'தாயம்' என்பது உரிமைக்கான அடிப்படை; இது தாய் வயிற்றிலிருந்து பிறப்பதனால் வருதலின் 'தாயம்' என்றனர். 'தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி' என்பர் முடத்தாமக் கண்ணியார் (பொருநர் 132).

பயன் : தன் வருத்தம் புலப்படப் பிறருக்கு உணர்த்தியதால் சிறிது ஆறுதல் பிறக்கும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/327&oldid=1698613" இலிருந்து மீள்விக்கப்பட்டது