329. கடல் முகந்த மழை!

பாடியவர் : மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். :திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது.

[(து-வி.) தலைமகன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்து சென்றனனாக, தலைவி அவனைப் பிரிந்திருக்க இயலாதவளாகி வாடி நலிகின்றாள். அவளைத் தேற்றுதல் கருதித் தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்றாற்றுத் துறந்த மாக்களின் அடுபிணன்
இடுமுடை மருங்கில் தொடுமிடம் பெறாஅது
புனிற்றுநிரை கதித்த பொறிய முதுபாறு
இறகுபுடைத் திற்ற பறைப்புன் தூவி 5
செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடுகொள் நெஞ்சமோடு அதர்பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும் நத்துறந்து
அல்கலர் வாழி தோழி!—உதுக்காண்
இருவிசும்பு அதிர மின்னி 10
கருவி மாமழை கடல்முகந் தனவே.

தெளிவுரை : தோழீ! வாழ்வாயாக! எல்லையில்லாத நன்மைகளை உடையவராய், நிரையத்தைச் சேர்க்கின்ற தீ நெறிகளுள் எதனையும் பேணாதவராய் விளங்குபவர் நம் காதலர் ஆவார். அவர்—கொன்று வழிப்பக்கத்தே போட்டுச் செல்லப்பட்ட மக்களுடைய செத்தபிணங்களின் முடைநாற்றத்தினாலே அருகே சென்று கொத்தித் தின்னுதற்கேற்ற வாய்ப்பைப் பெறாதாய்; ஈன்ற அணிமையால், வரிசையாகத் தோன்றும் புள்ளிகளையுடைய முது பருந்தானது, இறகினை அடித்தடித்து வருந்தும். அப்படி அது இறகடிக்கும்போது உதிர்ந்து பறந்து கிடக்கும் புல்லிய இறகுகளைத் தம் சிவந்த கணையிலே செறித்துத் திரிபவர் மறத்தன்மையுடையவரான ஆடவர்கள். அவர்கள் வெற்றிகொள்ளும் கருத்தோடு வழியையே பார்த்தபடியாக மறைந்திருக்கும் காட்டுவழியிலே சென்றனராயினும், நம் தலைவர், நம்மைக் கைவிட்டு அங்குத் தங்கிவிடுவார் அல்லர். உவ்விடத்தே பாராய்! பெரிய ஆகாயமெல்லாம் அதிரும்படியாக இடித்து மின்னலின் தொகுதியைக் கொண்ட கார் மேகமானது, கடல் நீரை முகந்து வந்துள்ளன. ஆதலின் அவர் இப்போதே வந்து விடுவார்காண் என்பதாம்.

கருத்து : கடல் முகந்து மேகம் நம்மூர்ப் பக்கத்து வான்மேல் வந்து இடித்து மின்னி நமக்கு மழைவளம் தருதலே போல, தலைவரும் தாம் தேடிய பெரும் பொருளோடு வந்து நம்மை வரைந்து மணந்து இன்பம் தருவர் என்பதாம்.

சொற்பொருள் : வரையா – எல்லையற்ற. நயவினர் –நன்மையுடையவர்; நன்மையாவது நற்பண்பு. நிறையம் – நரகம்; இங்கே நரகம் உய்த்தற்குரிய தீவினை. அடுபிணன் –கொலைப்பட்டுக் கிடக்கும் அழுகற் பிணம். மருங்கு – பக்கம். நிரை கதித்த பொறிய – வரிசையாகத் தோன்றிய புள்ளிகளைக் கொண்ட. பாறு – பருந்து. புடைத்தல் – அடித்துக்கொள்ளல். இற்ற – உதிர்ந்து வீழ்ந்த. வன்கண் ஆடவர் – வன்கண்மையுடைய ஆறலை கள்வர். ஆடு – வெற்றி. அதர் – வழியிடம். அல்கும் – தங்கியிருக்கும்.

இறைச்சிப் பொருள் : 1) 'ஈன்றணிமையுடைய பருந்து' பசியால் மிகத்துன்புற்றபோதும், அழிந்த பிணத்தினின்றும் எழுந்த முடைநாற்ற மிகுதியினாலே, நெருங்கித் தின்ன மாட்டாதும், விட்டுப்போக மனமின்றியும் சிகறடித்து வருந்தும் என்றது, நின்பால் தோன்றும் பசலையானது, அவர் குறித்த நாளிலே வருதல் மெய்ம்மையாதலின், தாம் அகன்று போதல் நேருமென வருந்தியிருக்கும் என்றதாம்.

2) கணைசெறித்த ஆடவர் வெல்லும் கருத்துடன் நெறிபார்த்துத் தங்கியிருப்பர் என்றது, கொடுமையுடைய அலர்வாய்ப்பெண்டிர் நின்னைத் தூற்றி மகிழும் கருத்தோடு நின் சோர்வு பார்த்துக் காத்திருப்பர் என்பதாம்.

விளக்கம் : வன்கண் ஆடவர் அதர்பார்த்து அல்கும் அத்தம் இறந்தனர் ஆயினும், நம் தலைவர் வரையா நயவினர் ஆதலின், ஊறு ஏதுமின்றிக் குறித்த காலத்தில் தவறாதே வந்து நின்னை மணங்கொண்டு இன்புறுத்துவர் என்பதாம். 'வரையா நயவின் நிரையம் பேணார்' என்பதற்கு, நயமான எந்தவொரு செயலையும் கருத்துட் கொள்ளாரும், நரகம் புகுதல் தீவினையால் நேரும் என்பதைக் கருதாதவருமான வன்கண் ஆடவர் என்றும் பொருள் கொள்ளலாம். செல்லுங் காலைப் பொருள்மிகுதியின்மையால் கள்வர் கொடுமைக்கு அஞ்சவேண்டா, வருங்காலை அஞ்சுதல் வேண்டும் என்பது நினைந்தும் அங்கேயே தங்கிவிடார், நின்னைத் துறந்து இருந்தற்கு இயலாராதலின் என்று, அவனது காதலன்பின் மிகுதியையும் ஆண்மையையும் கூறியவாறும் ஆம்.

பயன் : தலைவி, தலைவன் வரைபொருளோடு மீண்டு வரும் காலம்வரை பிரிவைப் பொறுத்து ஆற்றிருப்பாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/329&oldid=1698618" இலிருந்து மீள்விக்கப்பட்டது