328. எண் பிழி நெய்!

பாடியவர் : தொல் கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : வரை விடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.

[(து-வி.) தலைமகளை வரைந்து வந்து மணந்து கொள்வதாக உறுதிகூறியவனாகத் தலைவன் வரைபொருள் தேடிக்கொணரும் பொருட்டாகப் பிரிந்து போயினான். அவன் வருவதாகக் குறித்த காலமானது வந்து நாட்களும் கழிந்துபோகத் தொடங்கவே, அவன் குறித்த காலம்வரை ஆற்றியிருந்த தலைவிக்கு மனவேதனை மிகுதியாகி நலிவிக்கின்றது. அதனால், நாளுக்கு நாள் சோர்ந்து தளர்ந்து மெலிகின்றாள். அவள் துயர்கண்டு பொறுக்க மாட்டாதாளான தோழி, அவளுக்கு, அவன் தவறாமல் சொற்படியே வந்து சேர்வான் என்று கூறித் தேற்றுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]


கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேல் தூங்கிச்
சிற்சில வித்தப் பற்பல விளைந்து
தினைகிளி கடியும் பெருங்கல் நாடன்
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம்; அதனால்
அதுஇனி வாழி, தோழி!—ஒருநாள் 5
சிறுபல் கருவித் தாகி வலனேர்பு
பெரும்பெயல் தலைக, புனனே!—இனியே,
எண்பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது
சார்ந்து தலைக்கொண்ட ஓங்குபெருஞ் சாரல்,
விலங்குமலை அடுக்கத் தானும் 10
கலம்பெறு விறலி ஆடும்இவ் ஊரே.

தெளிவுரை : தோழியே! கிழங்குகள் வேர்வீழ்த்துக் கீழே இறங்கின. தேன் அடைகள் மரக்கிளைகளின் மேலாகத் தொங்கலாயின. சிற் சிலவான விதைகளை விதைத்த தினைப்பயிரும் பலப்பலவாகக் கிளைத்து, கதிர்கள் விளைந்து முற்றி விட்டன. அதைக் கவர்தற்கு வரும் கிளிகளைக் கடியும் குரலும் எழுந்தது. இத்தகைய பெரிய மலைநாட்டிற்கு உரியவனான நம் தலைவனின் குடிப்பிறப்பானது, நமக்கு ஒப்பாகாத தன்மையினையும் இப்போது நாம் அறிந்து விட்டோம். அதனால், அவனது அந்த உயர்வு தானும் இனி என்றும் வாழ்வதாக!

இனிமேல், எள்ளைப் பிழிந்து பெறுகின்ற நெய்யோடு, வெண்மையான பொற்கிழியையும் பெற விரும்பாது போதலைக் கொண்டு, சந்தன மரங்களை உச்சியிலே மிகுதியாகக் கொண்டு, உயர்ந்த இடத்தைக் கொண்டதாக விளங்கும் மலைச்சாரலினிடத்தே, குறுக்கிட்டுக் கிடக்கும் மலையடுக்குகள் விளங்கும் இடங்களிலே, நன்கலங்களைப் பரிசிலாகப் பெறுதலை விரும்புகிறவரான விறலியர்கள் கூத்தாட்டு அயர்ந்தபடியே இருப்பர். அத்தகைய களிப்பையுடைய நம் ஊரிடத்தே, ஒரு நாளில், மேகங்கள் சிறிய பலவான மின்னல்களின் தொகுதிகளைக் கொண்டனவாக வலங்கொண்டு எழுந்து, நம் தினைப்புனங்களுள்ளவிடத்தே, பெரிதான பெயலையும் பொழிவதாக.

கருத்து : அவன் குறித்த கார்காலம் இன்னும் தொடங்கவில்லை; அவன் உயர்குடியினன் ஆதலின் சொற்பிழையானாய் மீள்வன்; நீதான் நின் துயரத்தைக் கைவிடுக என்பதாம்.

சொற்பொருள் : வீழ்ந்து – வேர்விட்டு நிலத்தினுள் இறங்கி. 'வள்ளி கீழ் வீழா' என்று கலியுள்ளும் வரும் (கலி. 39); ஆகவே, இதனையும் குறிஞ்சிக்கு உரிய வள்ளிக்கிழங்காகவே கொள்க. தூங்கி – தொங்கி. பெருங்கல் நாடன் – பெரிய மலை நாட்டுத் தலைவன். ஓர் அன்மை – ஒரு தன்மை அல்லாமை, கருவி – தொகுதி. வலன்ஏர்பு – சூல்கொண்டு கறுத்து வானில் மேலெழுந்து. தலைக – தலைப்படுக; பெய்க. எண் – எள்; எண் பிழிநெய் – எண்ணெய், விலங்குதல் – குறுக்கிடல். கலம் – அணிவகைகள்.

உள்ளுறைகள் : 1) கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி என்றது, அன்பு உள்ளத்தே வேரூன்றியதனால் களிப்பான கனவுகள் மேலாக எழுந்து, பிறர்க்கும் புலப்படத் தோன்றுகின்றன என்பதாம்.

2) 'சிற்சில வித்திப் பற்பல விளைந்து' என்றது, அவ்வாறே நீ செய்த சிறுசிறு அன்புச் செயல்கள் பலவான நன்மைகளைத் தரும் மணவினையாக மலிந்து பெருகும் என்பதாம்.

3) 'கிளி கடியும்' என்றதனால், அந்தப் பயன் கெடாதபடி பாதுகாக்கும் என்பதாம்.

4) 'எண்ணெய் கிழி வேண்டாதே விறலி ஆடும்' என்றது, பரிசில் பெற்றே வாழும் வாழ்வினளாகிய அவள் தானும், தான் தன் செழுமைக் களிப்பின் காரணமாகத்தானே மகிழ்ந்து ஆடுவள் எனப் பொருள்பட்டு, சுற்றத்தார் வரைபொருள்யாதும் இன்றியே மகிழ்வுடன் அவனோடு மணம்புணர்க்க இசைவர் என்பதாம்.

பயன் : தலைவி மணவினை நிகழுங் காலம் வரை ஆற்றியிருத்தலும், தலைவன் மணவினைக்கு விரைதலும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/328&oldid=1698616" இலிருந்து மீள்விக்கப்பட்டது