335. என்புற நரலும்!

பாடியவர் : வெள்ளிவீதியார். `
திணை : நெய்தல்.
துறை : காம மிக்க கழிபடர் கிளவி மீதூர்ந்து, தலைமகள் சொல்லியது.

[(து-வி.) தலைவன்மீது பெருகிப் படர்ந்த காமநினைவினாலே நெஞ்சழிந்த தலைமகள், நள்ளிரவுப் போதிலும் கண் மூடாதவளாக நினைந்து நினைந்து சோர்கின்றவள், தனக்குத்தானே கூறிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.]


திங்களும் திகழ்வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்குதிரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலிபுனற்
பல்பூங் கானல் முள்இலைத் தாழை
சோறுசொலி குடையின் கூம்புமுகை அவிழ, 5
வளிபரந்து ஊட்டும் விளிவுஇல் நாற்றமொடு
மையிரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி
விரல்கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ்
யாமம் உய்யாமை நின்றது 10
காமம் பெரிதே; களைஞரோ இலரே!

தெளிவுரை : திங்களும் வானத்திடத்தே தோன்றி அழகினைப் பொழிகின்றது; ஒலிக்கும் நீரோடு பொங்குகின்ற அலைகளையுடைய கடலும் தன் ஒலியை விடாதே ஒலித்தபடியுள்ளது; ஒலியிலே மிகுந்ததாகிக் கடல்நீரும் கரையை மோதிமோதி மீண்டு செல்லும்; புனல்வளம் மலிந்த பலவான பூக்களையுடைய கடற்கரைச் சோலையினிடத்தேயுள்ள, முள்ளுள்ள இலைகள்கொண்ட தாழையும், சோற்றைச் சொரிகின்ற குடையைப்பேரல நடுப்பருத்தும் முனை கூம்பியும் விளங்கிய அரும்பு, அவிழ்ந்து மலர்ந்துள்ளது; காற்றானது அத் தாழை மலரின் நறுமணத்தை எங்கணும் கொண்டு கெடுதல் இல்லாத நறுமணத்தோடே நிறைக்கின்றது; கரிய பெரிய பனையின் மேலிருந்து துன்புற்றதாய் ஒலிக்கும் அன்றிலின் குரலும் என் பக்கத்தே வந்து ஒலித்தபடி இருக்கும்; அன்றியும் விரலாலே தடவி வருந்தி இசைகூட்டிய விருப்பந்தரும் நல்ல யாழும், இரவின் நடுயாமப் பொழுதிலே யான் உயிர் வைத்து வாழாதபடி சோக இசையை எழுப்புகின்றது; யான் கொண்ட காம நோயோ பெரிதாயிரா நின்றது; அதனைப் போக்கவல்லவரான காதலரோ என்னருகே இரலாயினார்? இனி, யான் எவ்வாறு உய்வேனோ?

கருத்து : 'யான் இனிச் சாவதுதான் நேரும்போலும்' என்பதாம்.

சொற்பொருள் : திகழ்தல் – விளங்கல். இமிழ்தல் – ஒலித்தல். புணரி – கடல். பாடு – ஒலித்தல். ஓதம் – கடல் நீர்; கரையிலே மோதிச் சிதறும் அலை நீர். கூம்பு – குவிந்துள்ள. முகை – அரும்பு. விளிவு இல் – கெடுதல் இல்லாத. மை இரும் – கரிய பெரிய. பைதல் – துன்புற்றதாக. என்புற – என் பக்கத்தே யான் இருக்கும் இல்லின் அருகே. உழந்த – வருந்திய. உய்யாமை உயிர்தரியாமை. களைஞர் – களைவாரான காதலர்.

விளக்கம் : காதலனைப் பிரிந்து விட்ட மகளிர், இரவிலும் துயில் பெறாதே கிடந்து வருந்தியிருப்பர் என்பது இயல்பு; ஊர் ஒலியடங்கிய அந்த நள்ளிரவிலே, தலைவியின் தனிமையைச் சூழ்நிலைகளின் தன்மையும் சேர்ந்து பெரிதும் வருத்த, அவள் புலம்புகின்றதாக அமைந்தது இச்செய்யுள்.

வானிலே எழுந்து நிலவைப் பொழியும் திங்கள்; ஒலிக்கும் கடல்; மோதிப் பெயரும் அலையோசை எல்லாம் அவள் காதுகளில் வந்து மோதியடியே இருக்கின்றன. இதழவிழ்ந்த தாழையின் நறுமணத்தைக் காற்று எங்கும் பரப்பி மயக்குகின்றது. துணைபிரிந்த அன்றிலின் சோகக்குரலும் அவள் மனத்தின் துயரை மிகுவிக்கின்றது. அவள் விரலால் தடவி மீட்டி வீணை இசையிலாவது ஆறுதல் பெறுவதற்கு முயன்றால், அதிலிருந்தும் அவளைக் கொல்வதுபோன்ற சோகமான இசையே எழுகின்றது. அவளின் துயரமோ பெரிதாகின்றது! களைஞரோ இலர்! நல்ல சோகப் படப்பிடிப்பு இச்செய்யுள்!

தாழை முகைக்குச் சோறு பொதி குடையையும், அது இதழ் அவிழ்தலுக்குச் சோறு சொரிதலையும் சொன்னதும் மிகச் சிறந்த உவமையாகும். 'குடையோர் அன்ன கோள் அமை எருத்திற் பாளை' (அகம். 335) என இவ்வுவமையைக் கமுகம் பாளைக்குத் தருவர் பிறர்.

பயன் : உள்ளத்தெழுந்து வருத்தும் பெருந்துயர நினைவலைகள், வாய்விட்டுப் புலம்பும்போது, சிறிது தணிவதால் அவள் அமைதியைச் சிறிது காணலும் கூடும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/335&oldid=1698633" இலிருந்து மீள்விக்கப்பட்டது