349. என்னென நினையும்?

பாடியவர் : மிளைகிழான் நல்வேட்டனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) தலைவன் ஒருவன், தலைவியின் தோழியின் உதவியால் தலைவியை அடைய முயல்கின்றான். அவள் அவனுக்கு இசையாளாய் ஒதுக்கவே, அவன் துயரம் பெருகுகின்றது. அவன், அவள் கேட்டுத் தன் நிலையைத் தெளியும்படியாகத், தனக்குள்ளே சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.]


கடுந்தேர் ஏறியும், காலிற் சென்றும்,
கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும், செய்தார்ப் 5
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத
பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப்,
பின்னிலை முனியா நம்வயின்,
என்னென நினையுங்கொல் பரதவர் மகளே! 10

தெளிவுரை : விரையச் செல்லும் தேரிலே ஏறிச்சென்றேன். தேரைத் தொலைவிலே நிறுத்திவிட்டுக் காலால் நடந்தும் சென்றேன். வளைந்த கழியின் அருகிலேயுள்ள அடும்பின் மலர்களைக் கொய்து தந்தேன். தாழையின் மலரைப் பறிக்குமாறு அவளைத் தூக்கியும் உதவினேன். நெய்தல் தழையையும் மலரையும் கொய்து தந்தேன். இவ்வாறெல்லாம் செய்து, அவளைச் சேர்ந்தது போலவே கருதிய உள்ளம் உடையவனானேன். அந்நினைவோடு நாள்தோறும் இத்தன்மையனாகவே ஆயினேன். இருந்தும்—

செய்யதான தாரினையும் பசுமையான பூண்களையும் அணிந்த வேந்தர்கள் பட்டு வீழ்ந்த பாசறையின்கண்ணே, வேல்கள் ஒளிசெய்த வண்ணமிருந்த படைக்கடலிலே, பகைக்களிறு பட்டு வீழும்படியாக ஆண்மையோடு போரிட்டான் ஒருவன். அவன், அப்போது பெரும் புண்ணையும் களத்திலே பெற்றான். அவனைப் பேணிக் காப்பார் எவரும் இல்லாமையால், பேய் ஒன்று வந்து காத்து நின்றது. அதுபோல, இத்தோழியின் பின்னாகவே நின்று, இவள் தெளிவடையும் வரையும் வெறுப்படையாமலிருக்கின்றோம் நாம். நம்மிடத்தே, நம் காதலியாகிய பரதவர் மகள்தான் என்னென்னவெல்லாம் நினைவாளோ?

கருத்து : 'இவளும் உதவ முன்வந்திலன்; அவள்தான் என்ன நினைப்பாளோ?' என்பதாம்.

சொற்பொருள் : கடுந்தேர் – கடிதாகச் செல்லும் குதிரைகளையுடைய தேர்; தேர் ஏறிச் சென்றது கூறியது அவனுடைய உயர்குடியைச் சொல்லியதாம். காலிற் சென்று – நடந்து சென்று; காற்றாலே செலுத்தப்படும் கலத்தினைச் செலுத்திக் கடல்வழியே சென்று எனவும் கொள்ளலாம். கைதை –தாழை. தூக்கியும் – கொய்யுமாறு அவளைத் தூக்கியும், அவளைக் கரையிலிருந்து எட்டிப் பறிக்குமாறு, தான் தாளையை மேலாகத் தூக்கியும் என்றலும் பொருந்தும். 'புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சம்' – புணர்ந்ததேபோல இச்சிறு சிறு உதவிகளைச் செய்ததனாலேயே களிப்புற்ற நெஞ்சம். அழுவம் – படைப் பெருக்கம். பின் நிலை – பின்னேயாக இரந்து நிற்றல். முனியா –வெறுக்காத.

விளக்கம் : புண்பட்டுக் கிடக்கும் வீரனைக் காப்பார் இல்லாத போதில், பேயும் இரங்கி வந்து காத்து நிற்குமே? இங்கோ, இத்தோழி புண்பட்டு நலியும் எனக்கு உதவி செய்ய மனமில்லாதிருக்கின்றனளே என்பதாம். 'என் என நினையுங்கொல்' என்றது, தான் தோழியின் பின்னாகவே இரந்து நிற்பதைக் காணும் தலைவி, தன் செயலைக் குறித்து மாறுபாடாகவும் நினைப்பாளோ என்று வருந்திக் கூறியதாம். இதனைக் கேட்கும் தோழி, தலைவியும் இவனும் பலகாற் பழகிய நட்பினர் என்று தெரிவாளாகவே, அவனுக்கு உதவ முன்வருவள் என்பதாம்.

மேற்கோள் : 'தோழி நம்வயிற் பரதவர் மகளை என்னென நினையுங்கொல் என்றது' என, இச்செய்யுளை, மெய்தொட்டுப் பயிறல் என்னும் சூத்திர உரையுள் நச்சினார்க்கினியர் காட்டுவர்.

பாடபேதங்கள் : கைதை ஊக்கியும், முனியா நம்மை ஓராள் என்னுங் கொல்; பெரும்புண் உறுநர்க்கு.

பயன் : தலைவன் இனி இறந்துபடுதலும் நேருமென அஞ்சலுறும் தோழி, தலைவியுடன் பேசி, அவளையும் அவனையும் கூட்டுவிப்பாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/349&oldid=1698667" இலிருந்து மீள்விக்கப்பட்டது