350. நின்னைச் சார விடேன்!

பாடியவர் : பரணர்.
திணை : மருதம்.
துறை : தலை மகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.
சிறப்பு : விரானின் இருப்பை.

[(து-வி.) தலைமகன் பரத்தையுறவு கொண்டிருந்தவன் மீண்டும் தன் மனைக்கு வருகின்றான். தலைமகள் உள்ளத்திலே அவன்மீது ஊடல் இருந்தாலும், கூடவே, அவனை ஏற்றுக் கொள்ளும் பண்பும் கலந்திருக்கிறது. அவள், அவனைப் பழித்துக் கூறி, தன் ஆற்றாமை தீர்ந்தவளாக, அவனை ஏற்றுக் கொள்ளுகின்றாள்.]


வெண்ணெல் அரிநர் தண்ணுறை வெரீஇப்
பழனப் பல்புள் இரியக் கழனி
வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர்வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல்கவின் தொலையினும் தொலைக! சார 5
விடேஎன், விடுக்குவென் ஆயின், கடைஇக்
கவவுக்கை தாங்கும் மதுகையம் குவவுமுலை


சாடிய சாந்தினை, வாடிய கோதையை;
ஆசில் கலந்தழீ இயற்று;
வாரல்; வாழிய, கவைஇ நின் றோளே! 10

தெளிவுரை : வெள்ளை நெல்லை அரிபவர்கள் முழக்குகின்ற தண்ணுமையின் ஒலிக்கு வெருவிப், பழனத்திடத்தேயுள்ள பலவான புள்ளினங்களும் கழனியிடத்தேயாக வளைந்திருக்கும் கிளைகளைக்கொண்ட மருதமரத்தின்மீதே சென்று சேர்தலால், அதனிடத்தேயுள்ள தொங்கும் பூங்கொத்துக்கள் கழனியிடத்தே உதிரும். இத்தகையதும், இரவலருக்குத் தேர்களையே வழங்கும் வண்மையுடைய விராஅனுக்கு உரியதும், இருப்பையூர் ஆகும். அதனைப் போன்று, என் பழைய கவின் முற்றத் தொலைவதாயினும் தொலைவதாகுக. நின்னை என்னருகே நெருங்கவே விடமாட்டேன். அங்ஙனம் நெருங்க விடுவேனாயின் தாவி என்னை மார்பகத்தேயிடும் நின் கைகளோ விலக்குதற்கு இயலாதவாறு தடுத்து என்னைத் தான் தாங்கும் வன்மை உடையன. பரத்தையின் குவிந்த முலைகளாலே மோதப்பெற்ற சந்தனத்தையும் நீ நின் மார்பிலே உடையை. அவளோடு தழுவிக் கிடத்தலாலே வாடிப்போன கோதையினையும் பெற்றுள்ளனை. ஆதலாலே, நின்னைத் தழுவுதல் என்பது, கழித்துப் போடப்பெற்ற கலங்களைத் தொடுவதற்கே எமக்கு ஒப்பானதாகும். ஆகவே, எம் மனையிடத்துக்கு வாராதே கொள். நின்னைத் தழுவி நின்றவளான அந்தப் பரத்தையும், நின்னோடு கலந்து மகிழ்ந்தாளாய் நெடுநாள் வாழ்வாளாக!

கருத்து : அவனைப்பற்றிய குறையை மனந்திறந்து சொல்லித் தன் சினம் தீர்ந்தவள், ஊடல் தீர்ந்து, அவனை ஏற்பாள் என்பதாம்.

சொற்பொருள் : வெண்ணெல் – 'வெள்ளை' அரிசியுடைய நெல். அரிநல் – அரிதல் மேற்கொள்வார். வெரீஇ – அஞ்சி. இரிய –அஞ்சி அகல. வாங்குசினை – வளைந்துள்ள கிளை. தூங்கு துணர் – தொங்கும் பூங்கொத்து. தேர்வண் – தேர் வழங்கும் வண்மை. இருப்பை – இருப்பையூர். கடைஇ – சொல்லி. சாந்து – சந்தனத் தேய்வை. கோதை – மலை. ஆசுஇல் கலம் – கழித்துப்போட்ட பழங்கலம்; இதனைத் தொடுவதும் தகாது என்பது மரபு. கவைஇ – தழுவி.

உள்ளுறை : மள்ளர் முழக்கும் தண்ணுமை ஒலிக்கு அஞ்சிய புள்ளினம் செறிதலால், மருதின் கிளையிலுள்ள பூங்கொத்துக்கள் உதிரும் கழனியில் என்றனள்; என்பால் நினக்கு அன்பில்லையாயினும், அயலார் உரைக்கும் பழிக்கு அஞ்சியே, நீயும் இங்கு வந்தனையாதலின், என் உள்ளம் நின்னை ஏற்காமல் வெறுத்தே ஒதுக்கும் என்பதாம்.

விளக்கம் : 'வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை' 'பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்' என்று அகநானூற்றுள்ளும் (204) வரும். 'கவவு' என்பது அகத்திடுதல் என்னும் பொருளது; கவவுக்கை - என்பது தன்னோடு உடல் இறுகக்கட்டித் தழுவும் கையணைப்பு என்று கொள்க. 'என் தொல் நலனும் தொலையினும் தொலைக' என்றது, நின் செயலாலே தொலைந்து போயின அதுதான், இனிமேலும் தொலைவதானாலும் தொலைவதாக என்பதாம். நெல்லரிவோர் தண்ணுமை கொட்டுவது, கழனியிடத்துள்ள பறவையினம் அகல்வதற்கும்; அரிவோர் திரள்வதற்குமாம்.

பாடபேதங்கள் : கலங் கொளீஇயற்று; கலம்கழீயற்று; ஆசில்கலம் தழீஇயற்று.

பயன் : அவன் வலிந்துபற்றிக் கைவளைத்து இறுகத்தழுவினால், அப்பிடியை விலக்கி ஒதுக்க முடியாதவள் தான் என்று கூறுதலால், வெறுப்பினிடையிலும் அவள்பால் குடிப்பண்பின் உயர்ச்சி உள்ளத்தில் இழையோடுவதனை அறியலாம். ஆகவே, ஊடிப் பிணங்கினாலும், முடிவில் இசைந்து கூடுதலே பயனென்று கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/350&oldid=1698668" இலிருந்து மீள்விக்கப்பட்டது