351. புனம் காப்பின் நலன் பெறுவள்!

பாடியவர் : மதுரைக் கண்ணத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி அருகடுத்தது.
[(து-வி) களவுக்காலத்தே தலைவன் இடையிடையே வராதுபோகத் தலைவியின் மனத்துயரம் பெரிதாகின்றது. அதனால், அவள் உடலின் வனப்பும் குன்றுகின்றது. உடல் மாற்றங் கண்ட தாய், 'முருகு அணங்கிற்றுப் போலும்' என்று கருதி, வெறியயர ஏற்பாடு செய்கிறாள். அதற்கு அஞ்சிய தோழி, 'புனங் காவலுக்கு இவள் சென்றாலே இவள் அழகு மீண்டுவிடும்' என்று சொல்வது போல அமைந்த செய்யுள் இது.]


இளமை தீர்ந்தனள் இவளென வளமனை
அருங்கடிப் படுத்தனை யாயினும் சிறந்திவள்
பசந்தனள் என்பது உணராய் பல்நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி—வேண்டு, அன்னை! கருந்தாள்
வேங்கையம் குவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத்துப்பு அஞ்சாப் புலியதள் இதணத்துச்
சிறுதினை வியன்புனம் காப்பின்
பெறுகுவள் மன்னோ என் தோழீதன் நலனே.

தெளிவுரை : அன்னாய்! வாழ்வாயாக! யான் சொல்லப் போகும் இதனையும் கேட்பாயாக; இவள்தான் தன்னுடைய பெதும்பைப் பருவமாகிய இளமையிற் கழிந்து விட்டனள் என்று நினைத்து, நம் வளமான வீட்டிலே வைத்து அரிய காவலுக்கு உட்படுத்தினை. என்றாலும், இவள் தன் பழைய அழகிலே சிறப்படைந்தாளல்லள்; மேலும் பசலை நோயை மிகுதியாக அடைந்தனள் என்பதை உணர்ந்தாய் அல்லை. பல நாட்களாகவே துயரமுற்ற நெஞ்சத்தைக் கொண்டனையாகித் தெய்வத்தைப் பேணிப்பேணி வருந்தாதே இருப்பாயாக. கருமையான அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய அழகான குன்றத்திடத்திலே, சந்தன மரத்தாலே செய்த, களிற்றியானையின் வலிமைக்கும் அஞ்சாத புலியினது தோலாலே வேயப்பட்டுள்ள கட்டுப்பரணிடத்தே சென்றிருந்து, சிறிய தினைகளையுடைய பெரும்புனத்தை மீண்டும் காத்திருப்பாளானால், என் தோழியாகிய இவளும், தன் அழகினை மீண்டும் அடையப் பெறுவாளே! அதற்கு ஏற்பாடு செய்க என்பதாம்.

கருத்து : இவள் மாற்றம் புனங்காவலின்போது ஏற்பட்ட காதலின் விளைவென்பதைக் குறிப்பால் உணர்த்தியதாகும்.

சொற்பொருள் : இளமை – இளமைப்பருவம்; இங்கே இது பெதும்பைப் பருவத்தைக் குறிக்கும். கடி – காவல். எவ்வம் –துன்பம். தெய்வம் – தெய்வம் என்ற பொதுச் சொல்லாயிருப்பினும், குறிஞ்சித் தெய்வமாகிய முருகனை வேட்டு வெறி அயர்தலாகவே கொள்க. குவடு – குன்று; கவட்டிடை என்பதும் பாடம்; அப்போது வேங்கைமரத்தின் இரண்டு கிளைகளாகப் பிரியும் கவடுபட்ட பகுதியிலே கட்டிய பரண் என்று கொள்க. சாந்தில் – சந்தன மரத்தில். புலியதள் – புலித்தோல்.

விளக்கம் : பேதைமை கடந்து மங்கைமையாகிய மணப் பருவம் எய்தியதால் (இல்லிகவாப் பருவம்) காடுகாவலாற் கேடுசூழும் என்றஞ்சி இற்சிறைப்படுத்தல் வளமனை மரபு என்று கொள்க. 'தெய்வம் பேணி வருந்தல் வேண்டா' என்பதனால், அது மறுத்துக், குறிப்பாக அவள் கொண்ட காதல் நோயை கூறியதாகும். 'களிற்றுத் துப்பு அஞ்சாப் புலியதள்' என்றது. அதனையும் வென்று மேம்பட்ட மறமாண்பினர். அவள் தந்தையும் தமையன்மாரும் என்பதாம்; அது கண்டு தினைகவர வரும் யானைகள் அஞ்சி அகலும் என்பதும் ஆம்.

பயன் : இதனால், தலைவியின் களவுறவை அறிந்த நற்றாய், அதன் விவரங்களை மேலும் ஆராய்ந்து, அவனோடு தலைவியை மணவினைப்படுத்தி மகிழ்வள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/351&oldid=1698779" இலிருந்து மீள்விக்கப்பட்டது