நற்றிணை-2/373
373. நாளையும் இயலுமோ!
- பாடியவர் : கபிலர்.
- திணை : குறிஞ்சி.
- துறை : செறிப்பு அறிவுறீஇயது.
[(து-வி.) களவிலே வந்து மகிழும் இயல்பினனாகிய தலைவன், ஒரு பக்கமாகச் செவ்விநோக்கி மறைந்திருப்பதைத் தோழி காண்கின்றாள். அவனுள்ளத்திலே, தலைவியை மணந்து இல்லறம் பேணுதற்கான முயற்சியிலே விரைவு உண்டாக்குதல் வேண்டும் என்றும் கருதுகின்றாள். அவள், தலைவியிடம் சொல்வாள் போல, அவனும் கேட்குமாறு, இனிக் களவுறவு வாய்ப்பதரிது எனக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது வாகும்.]
முன்றில் பலவின் படுசுளை மரீஇப்
புன்தலை மந்தி தூர்ப்பத் தந்தை
மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடிக்
5
காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப்
பாவமை இதணம் ஏறிப் பாசினம்
வணர்குரல் சிறுதினை கடியப்
புணர்வது கொல்லோ, நாளையும் நமக்கே?
தெளிவுரை : தோழீ ! இன்று நம் அன்னையும் நம்மை இற்செறிக்கக் கருதினள். முற்றத்துப் பலாமரத்திலேயுள்ள பழுத்த பழத்தைப் பிளந்து கிளறிப் புல்லிய தலையையுடைய மந்தியானது சுளைகளைத் தின்று கொட்டைகளைக் கீழே உதிர்க்கும். அயலிலே நின்ற கொடிச்சியானவள், தன் தந்தையது மேகந்தவழும் பெரிய மலையினது வளத்தைப் போற்றிப் பாடியவளாக, ஐவன வெண்ணெல்லைக் குத்தியபடியே இருப்பாள். அத்தகைய வளநாடன் தலைவன்! அவனோடு, அச்சத்தையுடைய மலையிடத்திலே அருவியாடிக், கருநிறத்தையுடைய அரும்புகள் இதழவிழ்ந்து மலர்ந்த, சோதிடம் வல்லார் போன்ற வேங்கைமரத்திலேயுள்ள பரப்பமைந்த பரணிடத்தே ஏறி, வளைந்த கதிர்களையுடைய சிறுதினையைக் கவரவரும் பசிய கிளியினத்தைக் கடிந்து ஓட்டியபடி இருத்தலானது, நாளையும் நமக்குப் பொருந்துவதாகுமோ? ஆகாதே காண்!
கருத்து : நாளைக்குத் தலைவனை நம்மாற் சந்திக்க முடியாது என்பதாம்.
சொற்பொருள் : முன்றில் – முற்றம். படுசுளை – நிறைந்த சுளைகள். மரீஇப் – கிளறிப் பிளந்து எடுத்து. தூர்ப்ப – உதிறுமாறு வீழ்த்த. மைபடு – மேகம் தவழும். மால் வரை – பெரிய மலை. கொடிச்சி – குறவர் மகள். ஐவன வெண்ணெல் – ஐவன மாகிய மலைவெண்ணெல். குறூஉம் – குற்றும். சூர் – அச்சம்; அணங்கும் ஆம். காரரும்பு – கருமையான அரும்பு. கணிவாய் – கணிபோன்று காலம் அறிவிப்பதான். பாவமை – பரப்பமைந்த. இதணம் – பரண். பாசினம் – பசிய கிளியினம். வணர்குரல் – வளைவான தினைக்கதிர். புணர்வது – பொருந்துவது; கை கூடுவது.
விளக்கம் : வேங்கை அரும்பவிழ்ந்து மலருங் காலம், கானவர் தினை கொய்வதற்கு முற்படுகின்ற காலமாதலின், தினை கொய்யும் காலம் வந்ததென்று அறிவிக்கும் கணிபோன்று வேங்கை மலர்ந்தது என்றனள். வேங்கை மலருங்காலம் மணவினைக்கு உரிய காலமாதலின், இல்லத்தார் மகளுக்கு மணவினை முடித்தலைக் கருதி இற்செறிப்பர் எனவும் கொள்ளலாம். இப்போதும் 'கணிவாய் வேங்கை' என்பது பொருந்தும்.
உள்ளுறை : மந்தியானது முற்றத்துப் பலாவின் பழத்தைப் பிளந்து பழச்சுளைகளைத் தின்றுவிட்டுக் கொட்டைகளைக் கீழே போடும். அதனைப் பாராட்டாது குறமகள் மலைவளம் பாடி நெற்குற்றுவாள். அத்தகைய மலைநாடன் என்றனர். இது தலைவியைக் களவிலே கூடி நலனுண்டுவிட்டுச் செல்லும் தலைவன், ஊரிலே பழிச்சொல்லை உதிர்த்துச் செல்வான்; அதனையறியாதே அன்னையும் தெய்வம் அணங்கிற்றுப் போலும் என நினைந்து, இற்செறித்து, வெறியாடலுக்கு ஏற்பாடு செய்வாள் என்றதாம்.
பயன் : தலைவன், தலைவியை, விரைவிலே மணந்து கொண்டு, பிரியா இன்பவாழ்விலே இல்லறமாற்றுதலை நிகழ்த்தற்கு முற்படுவான் என்பதாம்.