374. முற்றையும் உடையமோ?

பாடியவர் : வன்பரணர்.
திணை : முல்லை.
துறை : வினை முற்றி மீள்வான், இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.

[(து-வி.) சென்ற வினையினைச் செவ்வையாக முடித்த பின், தன் ஊர் நோக்கித் திரும்பி வந்துகொண்டிருக்கின்றான். இடைவழியிலே, வினைமேற் செல்லும் புதியவர் சிலரைக் காணுகின்றான். அவர்கள் அவனைப்பற்றிய சிறப்புக்களை வினவ, அவன் அவர்கட்குத் தன்னுடைய நிலையைச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]


முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக்
களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப
உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே—பிற்றை 5
வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல்
நீர்வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்தயர் விருப்பினள் வருந்தும்
திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே?

தெளிவுரை : பரற்கற்கள் மேற்பக்கம் எல்லாம் பரந்து கிடக்கின்ற, சென்று கடத்தற்கு இயலாத வழியிலே. உயர்ந்து தோன்றுவது உப்புவாணிக மாக்கள் நிறைந்துள்ள சிறுகுடி. அவ்விடத்திலே, களர்நிலத்திலே விளைந்த புளியின் காயானது பசியைப் போக்கும். அப்படிப் பசிபோக்கிக் கொண்டு, உயரத்தே ஏறுதலை மேற்கொண்ட உயர்ந்த குடையினையுடைய புதியவர்களே! யாம் பிரிந்து வரும்போது மலர்ந்த முகத்தோடு விடைதந்தாலும், பின்னர், கண்ணீர் வழிந்து புள்ளிபுள்ளியாக மார்பகத்தை நனைப்ப, எமக்கு விருந்து செய்கின்ற விருப்பினளாக, எம்மை விருந்துண்ணப் பெறாததனாலே வருந்தியபடியிருக்கும், திருந்திய அணிகளையுடையவளும், விரும்பும் கருமணிபோன்ற புனைதற்குரிய நெடிய கூந்தலையுடையவளும், இனிய பேச்சை உடையவளுமான அவள் நிலையினை, யாம் முற்றவும் அறிதலை உடையம் ஆவேமோ? ஆகோம்காண் என்பதாம்.

கருத்து : 'அவள் துயரத்தினை நம்மால் முற்றவும் உணரமுடியாது' என்பதாம்.

சொற்பொருள் : முரம்பு – வன்னிலம்; மேற்பரப்புக் காலை வருத்தும் பரற்கற்களை கொண்டது. தலைமணந்த – மேற்பக்கம் எல்லாம் பரந்து கிடந்த. நிரம்பா இயவு – நடக்க நடக்கத் தொலையாமல் நீள்கின்ற காட்டு வழி. ஓங்கித் தோன்றும் – உயரமான மேட்டு இடத்திலே காணப்படும். உமண் – உப்பு வாணிகர். சிறுகுடி – சிற்றூர். களரி – களர் நிலம். புளியின் காய் – புளியினது காய். பசி பெயர்ப்ப – பசியைப் போக்க. உச்சிக்கொண்ட – உச்சிநோக்கிச் செல்லுதலை மேற்கொண்ட. ஓங்குகுடை – உயர்த்தகுடை; இது வெயிலுக்கு நிழல் பெறுவதற்கு உயர்த்தது. 'உச்சிக்கொண்ட ஓங்கு குடை' என்பதற்கு, உச்சிமேலே வைத்துக்கொண்டுள்ள உயரமான சோற்றுப் பொதியினைக் கொண்ட குடை எனவும் பொருள்கொண்டு, உமணர் சிறுகுடி காரிப்புளியைப் போலக் காயும் பசியைப் போக்குவதற்கு, 'உச்சிமேற்கொண்ட உயர்ந்த சோறுபொதி குடைகளை உடைய வம்பலீர்' எனவும் கொள்ளலாம். முற்றையும் – முழு – வதையும். உடையமோ – அறிந்துள்ளேமோ. வீழ் – விரும்பப் படும். மாமணி– கருமணி. புள்ளி – புள்ளிகள்; கண்ணீர் வீழ்ந்து வீழ்ந்து காய்தலால் உண்டாகும் புள்ளிகள். விருந்தயர் விருப்பு – விருந்தூட்டும் ஆர்வம்; வயிற்றுப் பசிக்கும் காமப் பசிக்கும் என்று கொள்க. தேமொழி – இனிய பேச்சுடையாள்.

விளக்கம் : வினைமேற் செல்வார் எத்தகு துயரையும் ஏற்றுத் தம் கருமமே கண்ணாக மேற்செல்வர் என்பதற்கு வழிச் செல்வாரின் பசி வருத்தமும், அதனைப் பாராட்டாதே அவர் முயன்று வழிநடத்தலும் கூறினர். அவரும் தத்தம் குடும்பங்களைப் பிரிந்தே வருபவராதலின், அவர்க்குத் தான் வினை முடித்துத் திரும்பினும், தன் மனைவி பட்டிருக்கும் வேதனைகளை நினைந்து வருந்தும் நிலையைக் கூறுகின்றான் என்று கொள்க. இப்படிச் சொல்வது இவன் வெற்றிப் பெருமிதத்தால் எனவும் அறிதல்வேண்டும்.

பயன் : இதனால், வழிச்செல்வாருள்ளும் ஓரிருவர் தம் காதன் மனைவியரைப் பிரிந்தவர், மனம் மாறி ஊர் திரும்புதலும் கூடும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/374&oldid=1698695" இலிருந்து மீள்விக்கப்பட்டது