385. மலரும் கூம்பின!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : ......

இப்பாட்டின் ஆசிரியர் பெயர் முதலிய விவரங்கள் எதுவும் இந்நாள் வரையிலும் கிடைக்கப் பெறவில்லை. ஏழு அடிகள் மட்டுமே எல்லாப் பதிப்புக்களிலும் காணப்படுகின்றன.

பேராசிரியர் ஔவை, சு. அவர்கள் தம்முடைய விரிவான ஆராய்ச்சியுரை பதிப்பில், 'அஞ்சிலாந்தையார் பாட்டு' என்ற குறிப்பினைத் தமிழ்ச்சங்கப் பதிப்பில் கண்டதாகவும் எழுதியுள்ளார்கள்.

ஆகவே கிடைத்த வரைக்கும் இங்கே நாமும் காணலாம்.


எல்லை சென்றபின், மலரும் கூம்பின;
புலவுநீர் அடைகரை யாமைப்பார்ப் போடும்
அலவனும் அளைவயின் செறிந்தன; கொடுங்கழி
இரைநசை வருத்தம் வீட மரமிசைப்
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால் 5
பொழுதன்று ஆதலின், தமியை வருதி
எழுதெழில் மழைக்கண்......

தெளிவுரை : பகற்போதானது சென்று கழிந்ததன் பின்னர் வந்துற்ற மாலைக் காலத்திலே, கழிப்பாங்கரிலேயுள்ள நெய்தல் மலர்களும் இதழ் குவிந்துவிட்டன; புலவு நாற்றத்தையுடைய அடைகரையினிடத்தே, யாமையின் பார்ப்போடு நண்டுகளும் தத்தம் அளைகளினிடத்தே சென்று ஒடுங்கிக் கொண்டன, வளைந்த கழியினிடத்தே சென்று இரையினைத் தேடித்திரியும் வருத்தமானது கழிந்து போனதாக, மரத்தின் மேலுள்ள கூட்டினிடத்தே நாரைகளும் தம் குஞ்சுகளோடு சென்று தங்கின. அதனாலே, இதுதான் நீயும் வருதற்குரிய பொழுது அல்ல. ஆதலினாலே, தனியனாகவே வருகின்றனை. மையெழுதிய மலர் போன்ற குளிர்ந்த கண்......

சொற்பொருள் : எல்லை – பகற்போது; கதிரவனும் ஆம். மலர் – நீல மலர். கூம்பின – இதழ்குவிந்தன. புலவு நீர் – புலவு நாற்றத்தையுடைய நீர். நீர்மை – தன்மை. அடைகரை – அடையாக அமைந்துள்ள கரைப்பாங்கர்; அது புலவு நாற்றம் உடையதானது, கடற்பறவைகள் தாம் பற்றிய மீன்களை அதன்கண் இருந்து குத்தித் தின்பதனால். கொடுங்கழி – வளைந்த கழி. வீட – இல்லாது ஒழிய. மரமிசை – மரத்தின்மேல்; கண்டல் மரமாகவோ, பனைமரமாகவோ கொள்க. பிள்ளை – குஞ்சுகள். பொழுதன்று – பொழுது இதுவன்று; கடற்கரைப் பாங்கரிலே, பரதவர் மகளிர் களவு வாழ்க்கையானது பெரும்பாலும், அவர் மீனுணங்களைக் காத்திருப்பதும், பிறவுமான தொழில்களில் ஈடுபட்டோராய் இருக்கும் பகற் போதிலேயே நிகழும்; மாலைப்பொழுது கடல்மேற் சென்ற தமர் திரும்பிவரும் காலமாதலானும், இல்லுறை மகளிர் தத்தம் இல்லத் தலைவரை எதிர்கொள்ளக் கடற்கரை நோக்கி வரும் நேரம் ஆதலாலும், கடற்கரையும் கழிச்சோலையும் ஆரவாரத்துடன் திகழ்வதனால், களவு வாழ்க்கைக்கு இசைவானது அன்று எனலாம். ஆகவே தான், 'பொழுதன்று ஆதலின்' என்று குறித்தனர். தமியை வருதி – தனியனாக வருகின்றனை; அவன் வரைவு வேட்டுச் சான்றோரோடு வருவதனை எதிர் பார்த்திருந்த தோழி, அவன் தனியனாக வருவது கண்டு மனம் வருந்திக் கூறியதாகும்.

விளக்கம் : எல்லை சென்றபின் மலர் கூம்பினது போல, இவளும், நீதான் அருளிச்செய்து அகன்றுபோயின பின்னர் வாட்டமடைவாள் என்பதாம். யாமைப் பார்ப்பொடு நண்டும் தம் அளைவயிற் செறிந்தன என்றது, பிறர் வரவஞ்சி அவை ஒடுங்கின என்பதாம்; அதுபோல அலர் உரைப்பார் பேச்சுக்கு அஞ்சித் தலைவியும் வீட்டினுள் ஒடுங்கினள் என்பதாம். புள்ளும் பிள்ளையோடு வதிந்தன என்றது, அவ்வாறே தலைவனும் தலைவியை மணந்து இல்லறமாற்றிப் புதல்வனை அவள் பெற்றுத்தர, மாலைவேளையிலே, அவளுடன் இல்லிலிருந்து மகிழவேண்டும் கடப்பாடுடையன் என்று சுட்டிய தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/385&oldid=1698708" இலிருந்து மீள்விக்கப்பட்டது