386. வதுவை என்றவர் வந்த ஞான்று!

பாடியவர் : தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்.
திணை : குறிஞ்சி.
துறை : பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளை முகம் புகுவல் என முற்பட்டாள். தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றின்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப்புணர்ந்து வழிப்படுவேனாவேன் மன்னோ' எனச் சொல்லியது.

[(து-வி.) பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன் வீட்டிற்குத் திரும்புகின்றான். மனைவியிடம் நேரே சொல்ல அஞ்சியவன், தோழியின் உதவியை வேண்டுகின்றான். அவளும் அவரை ஒன்றுபடுத்த நினைக்கின்றாள். தலைமகளிடம் சென்ற போது, அவள் முகபாவத்திலே தோன்றிய சினம் அவளை ஏதும் சொல்லமுடியாமற் செய்து விடுகின்றது. தான் வந்த நிலைக்குத் தலைவியும் தன்னைச் சினந்து கொள்ளலாம் என்று நினைப்பவள், 'இனித் தான் தலைவியின் குறிப்பின்படியே நடந்து கொள்வ'தாகத் தலைவியிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
துறுகட் கண்ணிக் கானவர் உழுத,
குலவுக்குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்
விடரளைப் பள்ளி வேங்கை அஞ்சாது
கழைவளர் சாரல் துஞ்சும் நாடன்— 5
'அணங்குடை அருஞ்சூள் தருகுவென்' எனநீ,
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' எனத்
தெரிந்தது வியந்தெனன்—தோழி! பணிந்து நம்
கல்கெழு சிறுகுடிப் பொலிய,
வதுவை என்றவர் வந்த ஞான்றே. 10

தெளிவுரை : தோழீ! சிறுத்த கண்களையுடைய பன்றியது பெரும் சினத்தைக் கொண்ட ஆண், கள் நிரம்பிய மாலைகளை அணிந்துள்ள கானவர்கள் உழுது விளைவித்துள்ள, வளைந்த தினைக்கதிர்களை நிறையத் தின்றுவிட்டு, பக்கத்திலே, மலைப் பிளப்பினைத் தான் தங்குமிடமாகக் கொண்டிருக்கும் வேங்கைப் புலிக்கு அஞ்சாததாய், மூங்கில்கள் வளர்ந்துள்ள மலைச் சாரலினிடத்தே உறங்கியபடியிருக்கும் மலைநாட்டவன் நம் தலைவன். அவள், 'அணங்குதலையுடைய அரிய சூளுரைகளை நினக்குத் தருவேன்' என்றனன். நீயோ, 'நும்போன்ற சால்புடையவர்கள் தம் வாக்கைப் பொய்யாதவர் ஆதலினால், இத்தகைய சூளுரைகளைச் சொல்ல மாட்டார்கள்' என்று கூறினை. பின்பொரு காலத்திலே, அவன், நம் தமர்களைப் பணிந்தவனாக, நம்முடைய மலையகத்து விளங்கிய சிறு குடியானது அழகடையுமாறு, 'வதுவை அயர்தும்' என்று அந்தணர் சான்றோரை முன்னிட்டு வந்த பொழுதிலே, அவன் உண்மைப் பண்பை அறிந்தேனாகிய யானும், நின் அறிவு நுட்பத்தை வியந்தேன் அல்லேனோ!

கருத்து : 'அத்தகைய நின் தலைவனை நீதான் வெறுத்து ஒதுக்குதல் முறையன்று' என்பதாம்.

சொற்பொருள் : ஒருத்தல் – தலைமையுடைய ஆண் பன்றி. துறுகட் கண்ணி – கள் நிரம்பிய தலைக்கண்ணி. உழுது – உழுது விளைத்த. குலவுக்குரல் – வளைந்து தலைசாய்ந்திருக்கும் முற்றிய தினைக்கதிர். மாந்தி – நிறையத் தின்றுவிட்டு. ஞாங்கர் – அடுத்துள்ள பக்கத்திடத்தே. அருஞ்சூள் – பொய்த்தற்கரிய சூளுரை. அணங்குடை – அணங்குதலை உடைய; அணங்குதல் தெய்வம் சாற்றிச் சொல்லும் சூளுரை பொய்ப்பின் அத்தெய்வம் பொய்த்தானைத் தாக்கி வருத்துதல். துன்னார் – சொல்லார். பொலிய – அழகு கொள்ள. வதுவை – திருமணம்.

உள்ளுறை : பன்றியின் ஒருத்தல், கானவர் விளைத்த தினைக்கதிரை நிறையத் தின்றுவிட்டு, பக்கத்திலே தங்கியிருக்கும் வேங்கைப் புலிக்கும் அச்சப்படாததாய், மூங்கிற் காட்டிலே கிடந்து உறங்கும் நாடன் என்றனள். இது தலைவனும் அவ்வாறே பரத்தையரின் அன்னையர் அறியாதே அவர் தம் இன்பத்தை நுகர்ந்து களித்து மயங்கியவனாய், அண்டை அயலிலுள்ளவர் பழித்துப் பேசுவதற்கும் அச்சப்படாதவனாக வந்து, மனைவி வீட்டின் முற்றத்திலே காத்து நிற்கின்றனன் என்றதாம்.

விளக்கம் : 'அன்று சூளுரைத்தல் வேண்டா; நின் சொல்லே போதும்' என்று அவனிடமுள்ள பெருகிய காதலால் நீயுரைத்த சொற்கள், பின் அவன் வதுவை வேட்டு வந்தபோது மெய்யாயினதும் அறிந்து வியந்தேன். இப்போது, அவன் தவறு செய்துவிட்டு, அதுபற்றி அஞ்சாமல் வந்து வீட்டின்முன் நிற்கின்றான். அவனைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளாமல் நீதான் சினந்து ஒதுக்குகின்றனை. நின் குறிப்பை என்னாற் புரிந்துகொள்ள முடியவில்லை; நீதான் அறிவுள்ளவளாதலின் ஏற்றது ஆராய்ந்து செய்க என்று தோழி உணர்த்துவதாக கொள்க.

பயன் : இதனால், தன் சினம் தணியும் தலைவி, தலைவனை ஏற்றுக் கொள்வாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/386&oldid=1698709" இலிருந்து மீள்விக்கப்பட்டது