387. உறைகழி வாளின் மின்னி!

பாடியவர் : பொதும்பில் கிழார் மகனார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.

[(து-வி.) தலைமகன், வருவதாகக் குறித்த காலத்தின் வரவிலும் வாராதானாகத், தலைவியின் வருத்தம் கனன்று பெரிதாகின்றது. அப்போது தோழி, எதிர்ப்படும் பருவவரவைக் காட்டி, அவன் சொற்பிழையாது திரும்புவான் எனக் கூறித், தலைவியின் கவலையைத் தணிவிப்பதாக அமைந்த செய்யுள் இது.]


நெறியிருங் கதுப்பும் நீண்ட தோளும்
அம்ம! நாளும் தொன்னலஞ் சிதைய
ஒல்லாச் செந்தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
துன்னருங் கவலை அருஞ்சுரம் இறந்தோர் 5
வருவர் வாழி—தோழி! செருவிறந்து
ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த
வேல்கெழு தானைச் செழியன் பாசறை
உறைகழி வாளின் மின்னி, உதுக்காண்,
நெடும்பெருங் குன்றம் முற்றிக் 10
கடும்பெயல் பொழியுங் கலிகெழு வானே!

தெளிவுரை : தோழீ! வாழ்வாயாக. இதனையும் கேட்பாயாக. போர்க்களத்தே பகையழித்து வென்று, ஆலங்கானம் என்னுமிடத்திலே, களத்தில் எதிராத பிறரும் அஞ்சி நடுங்குமாறு பாசறையிலே வீற்றிருந்தான், வேல்வீரர் நிரம்பிய படையினையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன். அவனது பாசறையிடத்தே உள்ளவர் உறையினின்றும் உருவியெடுத்த வாளைப் போல மின்னலிட்டபடியே, அதோ பாராய், நெடிய பெரிய குன்றத்தைச் சூழ்ந்து, இடிமுழக்கம் மிகுந்த மேகங்கள் கடுமையான மழையைப் பெய்கின்றன. அதனாலே, நெறித்த கரிய கூந்தலும், நெடிய தோளும் நாளுக்குநாள் தம்முடைய பழைய அழகுகள் சிதைந்து போகுமாறு, செவ்விதாக அம்பு தொடுத்தற்கு இயையாதவரும், அவிழ்ந்து சோரும் கண்ணியை உடையவருமான, தம் தொழிலைக் கல்லாத மழவர்கள் வில்லின் செயலாலே, வழிச்செல்வார் செல்வதற்கு அரிதாகிப்போன, குறுக்கிட்டுக் கிடக்கும் கவர்த்த வழியினைக் கொண்ட அருஞ்சுரத்தைக் கடந்து, வேற்று நாட்டிற்குப் போயிருப்பவரான நம் தலைவரும், தவறாது திரும்பி வருவார்காண். அதனால், நீயும் துயர் மறந்து ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

கருத்து : தலைவர் வருவார் என்று தேறுதல் கூறியதாம்.

சொற்பொருள் : நெறி – நெறிப்பு; கூந்தல் அலையலையாக அமைந்திருக்கும் செவ்வி. கதுப்பு – கூந்தல். நீண்ட தோள் – நெடிய தோள்; நெடுமை பூரிப்பால் அமைவது. ஒல்லா – கைகூடாத. செந்தொடை – செவ்விதாக அம்பு தொடுத்து எய்யும் திறன்; எய்த அம்பு தவறாமற் சென்று குறியை வீழ்த்துதல் இது. ஒரீஇய – விலகிய; தலையினின்றும் சோர்ந்து கலைந்து கிடக்கும். மழவர் – ஓர் இனத்தார்; இவருட் சிலர் ஆறலை கள்வராயும் இருந்தனர்; பிறர் மாவீரர்களாகப் படையணிகளில் சிறந்தனர். துன்னரும் – நெருங்குதற்கு அரிய. கவலை – கவறுபட்டுக் கிடக்கும் பாதை. அருஞ்சுரம் – கடத்தற் கரிதான சுரநெறி. செருவிறந்து – செருவினைக் கடந்து; கடந்தாவது பகைவரையழித்து வெற்றி காணல். அஞ்சுவது – அச்சம் உண்டாக; இது களம் வராதுள்ள பிறபிற அரசரைக் குறித்தது. உறைகழிவாள் – உறையினின்றும் உருவப்படும் வாள். கலி – ஆரவாரம்; இது இடி முழக்கம். வான் – மேகம்

விளக்கம் : 'செருவிறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல்கெழு தானைச் செழியன் பாசறை உறைகழிவாளின் மின்னி' என்று மின்னலைக் கூறியது, அதுதான் கோடை வெம்மையாகிய பகையை முற்றக் கடிந்து, வெற்றி மிடுக்குடன், பிறரை வாழ்விக்க எழுந்த மின்னல் என்று சுட்டியதாகும். அருஞ்சுரத்தையே முயற்சியோடு கடந்து போயினவர் இதுகாலை மழை பெய்தலாலே பசுமைப் பொலிவோடு விளங்கும் வழியினை எளிதாகவே கடந்து மீள்வர் என்றும் கூறினாள். தொன்னலம் சிதைந்த தோளும் கதுப்பும் அவர்வர மீளவும் தொன்னலம் பெறும் என்பது தேற்றமாம்.

பயன் : இதனால் தலைமகள் தன் துயரம் சிறுகக் குறைந்து அவன் வரவை ஆவலோடு எதிர்நோக்குபவளாக மகிழ்வாள் என்பதாம்.

பாடபேதங்கள் : தொன்னலம் சிதையேல்; ஓராச் செந்தொடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/387&oldid=1698710" இலிருந்து மீள்விக்கப்பட்டது