389. காமம் அமைந்த தொடர்பு!

பாடியவர் : காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்.
திணை : குறிஞ்சி.
துறை : பகற்குறி வந்து ஒழுகா நின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.

[(து-வி.) பகற்போதிலே வந்து தலைவியோடு களவிலே உறவாடி மகிழ்ந்து வருகின்ற தலைவன், தலைவியை வரைந்து வந்து மணந்துகொள்வது பற்றிய சிந்தனையே இல்லாதவனாக இருப்பதறிந்து, தலைவி கவலை கொள்கின்றாள். 'இனித் தினைப்புனம் காவல் கைகூடாது; ஆகவே, இத்தொடர்பு எப்படி முடியுமோ?' என்று கவலைப்படுவது போலத், தலைவனும் கேட்டுணருமாறு தோழியிடம் சொல்லுகின்றதாக அமைந்த செய்யுள் இது.]


வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
தேம்படு நெடுவரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்துநோக் கினளே, என்னையும்
களிற்றுமுகம் திறந்த கல்லா விழுத்தொடை
ஏவல் இளையரொடு மாவழிப் பட்டெனச் 5
சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல்
காவல் நீயென் றோளே? சேவலொடு
சிலம்பின் போகிய சிதர்கால் வாரணம்


முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப்பல
நன்பொன் இமைக்கும் நாடனொடு 10
அன்புறு காமம் அமையுநம் தொடர்பே!

தெளிவுரை : என் தந்தையும், களிற்றின் முகத்தைப் பிளந்த விற்றொழில் அல்லது பிறதொழிலைக் கல்லாத, சிறந்த அம்புதொடுக்கும் ஆற்றலையுடைய ஏவல் மக்களாகிய வீரரோடு, விலங்கினங்களைப் பின்பற்றி வேட்டைமேற் சென்றனன். அதனாலே, 'சிறு கிளிகள் கொய்தழிக்கும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனத்தின் காவலும் நீதான் என்றனள்' அன்னை. தன் சேவலோடு மலைப்பகுதியிலே சென்றதான, கிளைக்கின்ற காலையுடைய கோழியானது, பழங்கொல்லையின் மேற்புறத்தைக் கிளைத்தெழுப்பிய புழுதியானது, மிகப் பலவாகிய நல்ல பொன் துகள்போல ஒளி வீசுகின்ற மலைநாடன் நம் தலைவன்! அவனோடு அன்புமிகுந்த காமமே தலைக்கீடாக நாமும் தொடர்பு உடையவராயினோம். அங்ஙனம் ஏற்பட்ட நம் தொடர்ச்சியானது விரைவில் நீங்கும்படியாக, வேங்கை மரங்களும், புலிபோன்ற புள்ளியுள்ள பூக்களை ஈன்றன. அருவிகள் தேன்மணமிகுந்த நெடிய மலையிடத்தே நீலமணிபோலத் தோன்றுகின்றன. அன்னையும் அமர்ந்து நோக்கியவளாயினள். இல்லத்தார் மணவினைக்கு முயல் நேருமாதலால், நம் தொடர்பு எப்படித்தான் முடியுமோ?

கருத்து : 'விரைய வந்து தலைவன் வரைந்து கொள்ள வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : புலி – வேங்கை மலருக்கு உவமையாகு பெயர்; புள்ளிபெற்ற பூக்கள் என்பதனால் இவ்வாறு கூறினர். தேம்படு நெடுவரை – தேன் மிகுந்த நெடிய மலைத்தொடர். மணி – நீலமணி. அமர்ந்து நோக்கல் – ஒன்றை மனம் கருதித் தொடர்ந்து பார்த்தல். மா – விலங்கு. வழிப்படல் – துரத்திப் பின்செல்லல். முதை – பழங் கொல்லை. சுவல் – மேற்புறம். பூழி – புழுதி. அன்புறு காமம் – அன்புபொருந்திய காமவுறவு.

இறைச்சி : சேவலோடு சென்ற கோழியானது கிளைத்து எழுப்பிய புழுதிமண்ணும் பொன்போலத் தோன்றும் நாடன் என்றது, அவன்றான் வளமான குடியினன் ஆதலின், எமர் வேண்டும் வரைபொருளைத் தந்து விரைவிலேயே மணந்து கொண்டானில்லையே என்று வருந்திச் சொன்னதாம்.

விளக்கம் : தந்தையும் பிறரும் விலங்குகளைத் தொடர்ந்து சென்றவர் விரையத் திரும்புதல் கூடுமாதலால், அவர் தலைவனைக் காணின் அவனுக்கும் தலைவிக்கும் ஊறு நேரும் என்று சுட்டிப் பகற்குறி மறுத்ததாகக் கொள்க. தினை கொய்யும் காலமும் வந்தது, வேங்கையும் மலர்ந்தது என்றது, மணவினைபற்றி இனித் தாயும் தமரும் விரைந்து ஏற்பாடு செய்தல் நேரும் என்று அறிவித்ததாம். ஆகவே, இற்செறிப்பு நிகழும் என்பது, தலைவன் வரையாது தாழ்த்தலால் தலைவிக்கு உண்டாகும் வேதனை தலைவனுக்குப் புலனாகும் என்பதும் இதனால் அறியப்படுவதாம். வேங்கைப் பூவைப் புலியென்றது, அது தன் தாயின் உள்ளத்திலே மணவினை நினைவை உண்டாக்கி, தன்னையும் தலைவனையும் உறவாடாத நிலைக்கு இற்சிறை வைக்கத் தூண்டிய கொடுமைக்குக் காரணமாதலால் என்றும் கொள்க.

பயன் : தலைவன் வரைபொருளோடு சான்றோரை முன்னிட்டு வந்து மணம் வேட்டுத் தலைவியை முறைப்படி மணந்து கொள்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/389&oldid=1698712" இலிருந்து மீள்விக்கப்பட்டது