நற்றிணை-2/390
390. தொலையுந பலவே!
- பாடியவர் : ஔவையார்.
- திணை : மருதம்.
- துறை : (1) பாங்காயின வாயில் கேட்ப நெருங்கிச் சொல்லியது; (2) தலைமகள் தோழிக்கு உரைப்பாளாய் வாயிலாகப் புக்கார் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.
வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை
ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ
5
விழவிற் செலீஇயர் வேண்டும் மன்னோ;
யாணர் ஊரன் காணுநன் ஆயின்,
வரையா மையோ அரிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்
வரைவேய் புரையும் நற்றோள்
10
அளிய—தோழி!—தொலையுந பலவே.
தெளிவுரை : தோழீ! வாளை மீன்கள் பொய்கையிலே வாளைப் போல ஒளிவீசியபடியே பிறழும். நாள்தோறும் பொய்கையிலேயே உள்ளதான நீர்நாயோ அதனைப் பாராட்டாது தங்கிய துயிலை ஏற்று உறங்கியபடி இருக்கும். கைவண்மையுடைய கிள்ளிவளவனது கோயில்வெண்ணியைச் சூழ்ந்துள்ள வயல்களிலேயுள்ள, வெள்ளை ஆம்பலின் அழகான நெறிப்பையுடைய தழையை, மெல்லியதாக அகன்ற அல்குல் அழகுபெறுமாறு உடுத்துக்கொண்டு, யானும் விழாக்களத்திற்குச் சென்றுதான் ஆகவேண்டுமோ? அவ்வாறு யான் செல்ல, புதுவருவாய்களையுடைய ஊரன் என்னையும் காண்யான் ஆயின், என்னை வரைந்து கொள்ளாமற் போவதோ அப்போது அரிதாகுமே! அப்படி என்னையே அவன் வரைவானாயின், மலைபோலத் தோன்றும் யானைகளையும், வாய்மையையும் கொண்ட முடியனது, மலையிடத்துள்ள மூங்கிலைப் போன்று விளங்கும் பிறமாதரின் நல்ல தோள்கள் பலவும், தம் அழகினை இழப்பனவாகுமே! அவைதாம் இரங்கத்தன!
கருத்து : 'யான் அவ்வாறு போகேன்' என்று தன் தகுதி தோன்றக் கூறியதாம்.
சொற்பொருள் : வாளை – வாளை மீன். வைகு துயில் – தங்கும் துயில்; நெடுந்துயில். கைவண் கிள்ளி – கைவண்மையுடைய கிள்ளிவளவன். உருவ – நிறமுள்ள; அழகிய. நெறி – நெறிப்பமைந்த. ஐது – மெல்லிதாக. தைஇ – உடுத்து. வாய் மொழி – சொன்ன சொல் பிறழாத வாய்மை. முடியன் – ஒரு மலைநாட்டுச் சிற்றூர்த் தலைவன். அளிய – இரங்கத் தக்கன.உள்ளுறை : பொய்கையிலே வாளைமீன் பிறழவும், அதனைப் பற்றி உண்பதில் மனஞ் செலுத்தாது, பொய்கை நீர் நாய் துயிலேற்கும் என்றனள். விழாக் களத்திலே ஆடுகின்ற பரத்தையர் மகளிர் எத்துணைதான் தலைவனை மயக்கி, அவன் தம்மைக் கொள்ளுமாறு தூண்டினாலும், அவன்தான் அவர் செயலைப் பாராட்டாதே தன்னை நாடி வந்து சேர்வான் என்றதாம். அவர்தாம் தம் கருத்து நிறைவேறாமற் சோர்வார் என்பவள்' 'நற்றோள் அளிய தொலையுந பலவே' என்றனள்.
விளக்கம் : 'செலீஇயர் வேண்டும் மன்னோ' என்பதைச் செல்ல வேண்டும், சென்றால் அவன் பிறர்பாற் செல்லான் எனவும் சொல்லலாம். 'செல்லவும் வேண்டுமோ' எனின், அவன் வாளை பிறழக் கவலையுறாது துயிலும் நீர்நாய் போல, அவர் எத்துணைதான் ஆடியாடித் தம் அழகைக் காட்டினும், அவர்பால் மனம்போக விடான் என்று கூறியதாகும்.
பயன் : இதனைக் கேட்கும் வாயிலோர் தலைவியின் சிறப்பை உணர்ந்து போற்றுவர் என்பதும், தலைவன் அதனையுணர்ந்தானாய் அவள்பால் திரும்புவான் என்பதும் கொள்க.