391. அழுங்குவர் செலவே!

பாடியவர் : பாலைபாடிய பெருங் கடுங்கோ.
திணை : பாலை.
துறை : (1) பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; (2) வரைவு உணர்த்தியதுமாம்.

[(து-வி.) (1) தலைவன் பிரிந்து போவதாகச் சொல்லவும், கேட்ட தோழியின் வருத்தம் மிகுதியாகின்றது. அவளைத் தேற்றுவாளாகத் தோழி அவட்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைமகன் வரைவொடு வருதற்பொருட்டாகப் பொருள்தேடி விரைவில் வருவான் என்று கூறித் தோழி தலைவியைத் தெளிவிப்பதாக அமைந்த செய்யுள் இது.]


ஆழல் மடந்தை! அழுங்குவர் செலவே—
புலிப்பொறி யன்ன புள்ளியம் பொதும்பில்
பனிப்பவர் மேய்ந்த மாயிரு மருப்பின்
மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை
ஒண்தொடி மகளிர் இழையணிக் கூட்டும் 5


பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு
ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின்
யாரோ பிரிகிற் பவரே—குவளை
நீர்வார் நிகர்மலர் அன்னநின்
பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே! 10

தெளிவுரை : மடந்தையே! குவளையினது நீர்சோரும் ஒளிமிகுந்த மலரைப்போன்ற, நின்றனது பெரிதாக அமர்த்தலையுடைய குளிர்ந்த கண்களிலே, தெளிந்த கண்ணீர் நிறையும்படியாக, நீதான் அழாதேயிருப்பாயாக. புலியது புள்ளிகளைப் போன்ற, புள்ளிபுள்ளியாக நிழல் விளங்கும் சோலையிலே, குளிர்ச்சியான கொடியை மேய்ந்த, பெரிய கரிய கொம்பையுடைய, பருத்த தலையமைந்த கருப்புப் பசுவானது, தின்றொழித்த குளிர்ச்சியான தழையினை, ஒள்ளிய தொடியணிந்த மகளிர்கள் கலன்களையணிவதற்குப் பயன்படுத்துவதற்காகக் கூட்டிச் சேர்ப்பார்கள். அத்தகைய பொலிவு பொருந்திய கொண்கானத்து நன்னனின், நல்ல நாட்டிலுள்ள ஏழிற்குன்றத்தையே தாம் பெறுவதாக இருந்தாலும், பொருள் தேடிவருவதற்காக நின்னை யார்தான் பிரிந்து போவாரோ? நின் காதலராகிய அவர்தாம் பிரிந்து போகமாட்டார்; நின் கவலையையும் விட்டொழிப்பாயாக என்பதாம்.

கருத்து : 'அவர் பிரிவாரென நீ வருந்தாதிரு' என்பதாம்.

சொற்பொருள் : ஆழல் – அழாதே கொள். அழுங்குதல் – செலவு தவிர்ந்து தங்குதல். பொறி – புள்ளி. பொதும்பில் – சோலை. காரான் – காராம்பசு; எருமை எனவும் கொள்வர். அடை – இலை; தழை; 'தண்ணடை', மலைப்பச்சை எனவும் சொல்வர். மலர்தலை – பெரிதான தலை. இழையணிக் கூட்டும் – கலன்களை அணிதற்கென்று கூட்டும். ஏழில் குன்றம் – ஏழில் மலை. தெண்பனி – தெளிவான கண்ணீர்; தெளிந்த நீர்போல வழிந்தோடும் கண்ணீர்.

உள்ளுறை : காரான் தின்றொழித்த மலைக்கொடிகளிலே எஞ்சியுள்ள தழைகளை, மகளிர் தாம் அழகுற அணிந்து கொள்வதற்காகக் கூட்டிச் சேர்ப்பார்கள் என்றனள். கொண்கான நாட்டின் வளமை இது. நீங்கள் சிறப்பாக இல்லறம் ஆற்றினாலும், எஞ்சிய பொருள் மற்றும் பலருக்கும் வழங்கப் பயன்படுவதும் உண்டு என்றதாம்.

விளக்கம் : இதனால், 'பொருள் தேடி வருவதற்காக அவன் அவளைத் தனித்திருக்கவிட்டுப் பிரிந்து போகவேண்டியதில்லை; அவன் போகமாட்டான். அதனால் ஆற்றியிருப்பாயாக' என்று தேற்றியதாம். 'காரான் அகற்றிய தண்ணடை' என்றது அதுதான் செழித்துப் பலவிடங்களிலும் இருந்ததனால், அது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தின்று விட்டுப்போன தழை என்பதாம். இனி, கொடிகளை அது வேரொடும் அகற்றியதனால் தோன்றும் பொன்துகள்களைப் பெண்கள் கலன் செய்யக் கூட்டுவர் என்பதுமாம்.

திணை பாலையானதால், வளமான பொதும்பில் புள்ளிநிழல் உடைத்தாய்த் திரிந்தது எனவும்; காரான் புல்லைக் காணாது அங்கங்கே தோன்றிய கொடிகளைப் பற்றித் தின்ன, அதனால் சிதறிய பொற்றுகளை மகளிர் சேர்ப்பர் எனவும் கொள்வதும் பொருந்தலாம். நன்னன் ஏழில் நெடுவரைப் பாழி (அகம். 152) சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி (அகம் 15) என்று பிறரும் நன்னனின் நாட்டைப் பற்றிக் கூறுவர்.

பயன் : இதனால், தலைவி பிரிவைப் பாராட்டாது ஆற்றியிருப்பாள் என்பதாம்.

பாடபேதம் : நன்னன் ஆய்நாட்டு ஏழிற்குன்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/391&oldid=1698714" இலிருந்து மீள்விக்கப்பட்டது