398. சொல்லாள் சிலவே!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, 'நீதான் இவளது தன்மையை ஆற்றுவி' எனச் சொல்லியது.

[(து-வி.) தலைவன் களவொழுக்கத்தினையே நாடி வருதலன்றி, முறையாக மணந்து கொள்வதிலே நாட்டமில்லாமல் இருப்பதறிந்து தோழி கலங்குகின்றாள். பகற்குறி நாடி வந்துள்ள அவனிடம், "நின் காதலி நின் களவிடைச் சிறு பிரிவையும் ஆற்றது வருந்தும் துயரமோ மிகப் பெரிது. அதனை; எம்மால் ஆற்றவியலாது. நீயே ஏற்பன கூறி ஆற்றுவித்துப் போவாயாக' என்று கூறுவதன் மூலம், விரைவிலே வரைந்து வந்து மணத்தலே சிறப்பு என்னும் நினைவினை அவனுக்கு ஏற்படச் செய்கின்றனள். இவ்வகையில் அமைந்த செய்யுள் இது.]


உருகெழு தெய்வமும் கரந்துறை யின்றே
விரிகதிர் ஞாயிறும் குடக்குவாங் கும்மே
நீரலைக் கலையிய கூழை வடியாச்
சாஅய் அவ்வயிறு அலைப்ப உடனியைந்து
ஓரை மகளிரும் ஊர் எய் தினரே 5
பல்மலர் நறும்பொழில் பழிச்சி யாம்முன்
'சென்மோ சேயிழை' என்றனம், அதனெதிர்
சொல்லாள் மெல்லியல் சிலவே—நல்லகத்து
யாணர் இளமுலை நனைய
மாணெழில் மலர்க்கண் தெண்பனிக் கொளவே. 10

தெளிவுரை : அச்சம் பொருந்திய தெய்வமும் மறைந்திருக்காமல் நடமாடியபடியிருக்கும். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேலைத்திசைக்குச் சென்று மறையும். ஓரையாடிய மகளிரும், நீர் அலைத்தலாலே கலைந்துபோன கூந்தலைப் பிழிந்து நீரை வடித்தவராக, துவண்டு, அழகிய வயிறானது பசியாலே வறுத்த, ஒருசேரக் கூடியவராக ஊரைவந்து சேர்ந்தனர். பலவான மலர்களையுடைய நறும் சோலையிடத்தே, காதலியைப் பாராட்டிப் பேசியபடியே, யாம் முன்னே செல்வோமா?' என்று கேட்டனம். அதற்கு எதிராக, மென்மைத் தன்மையினளான அவள்தான் சிலவான சொற்களேனும் உரைத்தாளில்லை. நல்ல மார்பினிடத்தே, புத்தெழில் பெற்றுள்ள இளைய கொங்கைகள் நனையும்படியாக மாட்சிமைகொண்ட எழிலோடுங்கூடிய குவளை மலர் போன்ற கண்கள் தெளிந்த கண்ணீரைக் கொள்ளக் கலங்கி நின்றனள். அவளை நீயே தேற்றிச் செல்வாயாக என்பதாம்.

கருத்து : அவள் நின் களவிடை இடையீடுபடும் பிரிவையும் பொறுத்திராது புலம்பும் தன்மையள் ஆயினாள் என்பதாம்.

சொற்பொருள் : உரு கெழு – அச்சம் செய்யும். தெய்வம் – தெய்வங்கள்; இவை மாலை மயங்கும் வேளையிலே காட்டுச் சோலைகளிலே திரிந்தபடி இருக்கும் என்பது பழைய நம்பிக்கை. குடக்கு வாங்கல் – மேற்றிசையில் மறைந்து போதல். கூழை – பெண்கள் தலைமயிர்; குட்டையான மயிரும் ஆம். வயிறு அலைப்ப – வயிறு பசியாலே வருத்தம் செய்ய; நேரமாயிற்றென்று வயிற்றில் அடித்தபடி எனலும் பொருந்தும். பழிச்சி – பாராட்டி; 'பொழில் பழிச்சி' பொழிலிடத்துத் தலைவியைப் பாராட்டி; பொழிலுறை தெய்வத்தைப் போற்றி எனினும் ஆம். யாணர் இளமுலை – பார்க்குந்தோறும் புதிதுபுதிதாக அழகுடைத்தாகத் தோன்றும் இளமுலை.

விளக்கம் : 'ஓரை மகளிர்' என்றது, ஓரையாடியிருந்த சிறுமியர் என்பதாம். இவர் மாலை மயங்கியதும், அன்னைமார் சினந்துகொள்வாரே எனத் தம் வயிற்றலடித்தபடி ஊர்நோக்கி ஒன்றுசேர்ந்து செல்வராயினர் என்றனள்; ஆகவே, யாம் ஊர் செல்லாதிருப்பின் அன்னையின் கோபத்துக்கு ஆளாக, அதனால் இற்செறித்தலும் பிறவும் நேரும் என்றனளும் ஆம். தலைவி அழுதது, பிரிவைப் பொறாமையாலும், பிரியாது இன்புற்றிருக்கத் தலைவன் மணந்து கொள்ளற்கு முற்பட்டானில்லையே என்ற ஏக்கத்தாலும் ஆம்.

பயன் : தலைமகளது ஆற்றாமை மிகுதியை உணர்பவன், அவளை மணந்து கொள்ளலிலே மனம் விரைபவனாவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/398&oldid=1698739" இலிருந்து மீள்விக்கப்பட்டது