நற்றிணை-2/399
399. நயந்தனன் வரூஉம்!
- பாடியவர் : தொல்கபிலர்.
- திணை : குறிஞ்சி.
- துறை : (1) நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது; (2) 'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
[(து-வி.) களவொழுக்கத்திலே நெடுங்காலம் ஒழுகி வந்த தலைவனின் போக்கினைக் கண்டு, அதனால் வருந்தி நலிந்து மெலிந்த தலைவியைக் கண்டு மனங் கலங்கிய தோழி, அவன் வந்து ஒருசார் நிற்பதறிந்து, 'அவன் தக்கது செய்வான்' என்று கூறித் தேற்றுவதுபோல, அவனும் கேட்டு வரைதற்கு விரையும்படியாகச் சொல்கின்றனள்; (2) 'இதற்கான நல்லது செய்யும் பெருமானாகிய நம் தலைவனின் ஆற்றலை விரும்புவோம்' என்று கூறிய தோழிக்குத் தலைமகள் சொன்னதாகவும் கொள்ளலாம்.]
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்துக்
குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள்
வரியணி சிறகின் வண்டுண மலரும்
வாழையம் சிலம்பிற் கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பலவுறு திருமணி
5
ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி
களிறு புறங்காப்பக் கன்றொடு வதியும்
மாமலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ—தோழி!—நின் திருநுதல் கவினே?
10
தெளிவுரை : தோழீ! அருவிகள் ஒலித்தபடியிருக்கும் பெரிய மூங்கில்கள் செறிந்த மலைச்சாரலிலே, செங்குருதியைப் போலத்தோன்றும் மணம் கமழ்கின்ற அழகிய செங்காந்தள், வரிகள் அழகுசெய்யும் சிறகினைக் கொண்டவான வண்டினம் தேனுண்ணும்படியாக மலர்ந்திருக்கும். வாழைமரங்களை மிகுதியாகக் கொண்ட அத்தகைய சிலம்பினிடத்தே, பன்றிகள் பறித்த நிலத்துப் புறங்களிலே வெளியிற் போந்தவாய்க் கிடந்த பலவான அழகிய மணிகளின் ஒளிசுடர்கின்ற விளக்கொளியிலே கன்றை ஈன்றது இளைய பிடியானை ஒன்று. அதுதான், அதன் களிறானது அயலிலே நின்று காவல்காத்தபடியிருக்கத், தன் கன்றோடும் தங்கியிருக்கும். இத்தகைய பெரிய மலைநாடன் நம் தலைவன். நின் அழகான நெற்றியின் கவினானது, அவன், தானே விருப்பம் உடையவனாகித் தேடி வருகின்ற பெருமையினை உடையவள் நீ என்பதைத் தருவதாகும் அல்லவோ! ஆதலினாலே அவன், தானே விரைவில் நின் குறையைத் தீர்ப்பனாதலின் நீயும் வருந்த வேண்டாம் என்பதாம்.
கருத்து : நின் அழகு அவனைத் தானே வந்து மணக்குமாறு செய்யும் என்பதாம்.
சொற்பொருள் : குருதி – இரத்தம், வரியணி சிறகு – வரிகள் அழகுற அமைந்திருக்கின்ற சிறகு. கேழல் – பன்றி. மடப்பிடி – இளைய பிடியானை. புறங்காப்ப – புறத்தே காவலாகக் காத்து நிற்க. மாமலை - பெருமலை; கருமையான மலையும் ஆம். திருநுதல் - அழகான நுதல்; சிறப்பு மிகுந்த நெற்றியும் ஆம்.
உள்ளுறை : பன்றிகள் கிளைத்த மணிகளின் ஒளியிலே கன்றீன்ற பிடியானையானது, களிறு புறங்காப்பக் கன்றுடன் தங்கியிருக்கும் என்றது, நின்னை மலைநாடன் மணந்துகொண்டு இல்லறம் பேண, நீயும் புதல்வரையீன்று அவன் பாதுகாத்துப் பேண மகிழ்ச்சியோடு வாழ்பவளாவாய் என்பதாம்.
இறைச்சி : வண்டினம் வந்துண்டு மகிழுமாறு காந்தள் மலரும் என்றனள், இது அவன் வந்து இன்புற்று மகிழும் வண்ணம், நீதான் அவனை வெறுத்தொதுக்காதே அவனுடன் இசைந்து மனம் பொருந்தி இன்பந் தருவாயாக என்றதாம்.
விளக்கம் : காந்தள் மலர் வண்டுண்ண மலர்ந்து, வரும் வண்டினங்களைத் தேனளித்து மகிழ்விப்பது களவு வாழ்வின் போக்கிற்கும், கன்றீன்ற பிடியினைக் களிறு புறங்காத்து நிற்பது இல்லறக் கடமைச்செறிவுக்கும் எடுத்துக் காட்டுக்களாகும். இவற்றை அறிபவன், தன் கடமையை மறவான் என்பதும் ஆம். தலைவி கூற்றாகக் கொள்ளும்போது அதற்கேற்ப உரைகொள்ளல் வேண்டும்.
பயன் : இதனைக் கேட்பவன் விரைந்து வருதற்கு ஆவன விரைவிற் செய்வான் என்பதாம்.
பாடபேதம் : பாழியஞ் சிலம்பில்.