நற்றிணை நாடகங்கள்/தினசரியா பாட்டு?

5. தினசரியா பாட்டு?



1

சங்கத் தமிழின் சிறப்பியல்பு அகம் என்றும், புறம் என்றும் பாக்களைப் பகுத்துப் பேசுவதுதான். "அகம் என்றால் காதல்; புறம் என்றால் வீரம்" என எளிதாகப் பலர் விளக்கிவிடுகின்றனர். புறப்பாடல்களில் காதற்பாடல்களும் உண்டு: அகத்தில் போர்க்களமும் வரும். முல்லைப் பாட்டுப் பாசறையைப் பாடவில்லையா? பின் என்னவோ வேற்றுமை? குறித்த ஒரு தலைவன் பெயர் அகப்பாட்டில் வருதல் ஆகாது. பாண்டியன், வேப்பமாலை என்ற குறிப்புக்கள்கூட வருதலாகாது என்பர் நச்சினார்க்கினியர். எனவே, ஒரு காலத்து வாழும் மக்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் வரும் பாடலாகாமல், எக்காலத்துக்கும் பொருந்த அகப்பாடல்கள் அமைதல் வேண்டும் என்பதாயிற்று. ஆனால், பாடல்கள் எல்லாம் ஒருகாலத்தைப் பற்றி எழுந்தாலும், காலத்தையும் கடந்த உண்மையை உணர்ச்சி நிலையில் உணர்த்தி, நம் மனத்தை நீர்ப் பிண்டமாய் உருக்கி, அந்த உயர்ந்த நிலையே இறுகிநிற்குமாறு செய்வன அல்லவோ? புறப்பாடல்களும் அகப்பாடல்களும் அத்தகையனவே ஆம். புறநானூற்றுப்பாடல்கள் அன்றும் உண்மை, இன்றும் உண்மை, என்றும் உண்மை. தோற்றத்தைக் கண்டு களித்து, அதன் வழியே தோற்றத்தின் அடிப்படையை வெளியிடுவது ஒருமுறை. மாறிமாறி வரும் தோற்றத்தினை அறவே விட்டொழித்து, அடிப்படையான உள்ளூடு நிலையை விளக்கிப் பகருவது மற்றொரு முறை. தோற்றம், புறத்தோற்றம்; ஆதலின், புறப்பாடலாய் வளரும். உள்ளூடு நிலையோ, மனநிலை என்றும் உயிர்நிலை என்றும், உயிர்க்குயிராம் கடவுள் நிலை என்றும் கூறத்தக்க அகநிலையின் ஆழமாம் அகப்பாடலாய் வேரூன்றி நிலைக்கும். தமிழன் கண்ட கடவுள் நிலை என்ன? "அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே" என்பதன்றோ தமிழ்த் திருமூலர் கண்ட திருமந்திரம்! ஆதலின், அகப்பாடல் அன்புப் பாடலாக அமைகிறது. வெறுங்காமமோ காதலோ அன்று அகப்பாடல்கள் பாடுவது. தோற்றத்தின் அடிப்படையான உண்மை நிலையாம் அகத்தினைக் கடவுள் வடிவாம் அன்பின் பலவேறு நிலைகளாகக் கண்டு அக நானூறு முதலியன பாடுகின்றன. இவ்வாறு அகநிலையான அடிப்படையினைப் பாடுவதால் அன்றோ, தேவாரமும் திருக்கோவையாரும் ஆழ்வார்கள் அருளிச் செயலமுதமும் இவ்வகப்பாடல்களைக் கடவுட் பாடலாகக் கொண்டு தம் ஆன்ம அனுபவத்தினை வெளியிடுகின்றன! எனவே, புறம், அகம் என்பனவற்றை Phenomenon and Noumenon என்ற மேனாட்டுச் சொற்களுக்கு,முறையே நேர் நேர் ஆன தமிழ்ச்சொற்கள் என்று முடிவு கட்டலாம். அகப்பாட்டு என்பது: The Poetry of the Noumenon; புறப்பாட்டு என்பது; The Poetry of the Phenomenon.

2

சங்கப் புலவர்கள் அரசியலின் உயிர் நிலையாக நின்று அரசரைத் திருத்தி அவர்களது அருட்டிருப்பேர் ஆசிரியர்களாக உள்ளூற விளங்கினர். கண்ணகி என்ற காதற்கிழத்தியைப் பேகன் என்ற வள்ளல் துறந்ததற்கு இரங்கி, இருவரையும் ஒன்றுபடுத்தி அன்பு நெறியிற் செலுத்த, எத்தனைப் புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர்! இத்தகையோர், தம் நாளைய வரலாற்றுக் குறிப்புக்களைத் தம் பாடல்களில் எப்படி விட்டொழிக்கமுடியும்? அன்னோர்புறவாழ்வை அன்றே அக வாழ்வாக உயர்த்த முயன்றனர்! வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன? வரலாறு, இறந்த காலச்சிறப்பைத் தொடர்புபடுத்தி, உள் பொருள் விளக்கி, ஒற்றுமை காட்டும் ஒரு கலையாம். இறந்த காலத்தில் திளைத்துக் குளிப்பது மட்டும் அன்று இதன் நோக்கம். இந்த ஒற்றுமைக் காட்சியின் வழியே நிகழ் காலத்தினையும் விளக்கி, எதிர்காலக் காட்சியையும் நம் மனக்கண்ணெதிரே எழச்செய்து, அதனை நனவிலும் கண்டு அறிய வழிசெய்வதும் அக் கலையின் நோக்கமாம். வரலாறு, பல செய்திகளின் கோவையே ஆம். ஆனால், எல்லாச் செய்திகளும் நிகழ்ச்சிகளும் வரலாற்றுக் குறிப்புக்கள் ஆதலில்லை. ஊர் வழியே செல்கிறோம்; பல பல வீடுகள் கண்ணைக் கவருகின்றன. பின்னர், மலைமேல் ஏறுகின்றோம்; ஊர் முழுவதனையும் ஒற்றுமைக் காட்சியாகக் காண்கிறோம்; கண்டுகளித்த வீடுகள் தோன்றாமல் குறுகி அங்கே ஓடி ஒளிகின்றன; அதுபோலவே வரலாற்று மலைமேல் ஏறி ஒற்றுமைக் காட்சியாகக் காணும்போது, நாம் கண்டறிந்த பல நிகழ்ச்சிகள் பொருளற்று அங்கே இடம் பெறாது மறைகின்றன.

முதல் உலகப் போரில், எம்டன் என்ற ஜர்மானியப் படைக்கப்பல் குண்டு வீசியதனை, அந்நாளில் சென்னையில் வாழ்ந்த நாங்கள் மறந்திருக்கமுடியாது. ஆனால், உலகப் போரின் வரலாறு எழுதுவோர், தம் ஒற்றுமைக் காட்சியில் இதனைக் காணமுடியாது. எங்கோ ஒரு மூலையில் ஒரு காலத்தில் எழுந்த பொருளற்ற நிகழ்ச்சியாக அஃது ஒழிகிறது. ஆனால், அக் காலத்தில் அதனைப் பற்றிய தமிழ்ப் பாட்டொன்று ஆயிரக்கணக்கில் விற்றது. எல்லாச் செய்திகளும் இப்படி மறைந்து ஒழிவதில்லை. சந்திரகுப்த மௌரியரின் வெற்றி, பானிப்பட்டுச் சண்டைகள், சிப்பாய்க் கலகம் என்று எள்ளப்பட்ட இந்திய விடுதலைத் திருப்போர்—இவை என்றென்றும் வரலாற்றில் இடம் பெற்று விளங்கும். வரலாற்றுக் குறிப்பினைப் பற்றிப் பாடுகிற புலவன் "நான் பாடும் குறிப்பு எம்டன் குண்டு வீச்சுப்போல மறைந்தொழியுமா? சிப்பாய்க் கலகம்போல மக்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்திருக்குமா?" என்ற இதனை எவ்வாறு அறியமுடியும்? அறியமுடியாது. இவற்றைப்பற்றிப் பாடுவது, வளர்ந்து செல்லும் வரலாற்றோடு போட்டியிட்டுச் சூதாடுவதாகத்தான் முடியும். நாளை வரும் பலாப் பழத்தினும் இன்று வரும் களாப் பழம் மேல்என்பார், இப்படிஎண்ணிப் பாடிமகிழ்வோர். அவர்கள், இன்றுள்ளாரது பாராட்டில் மகிழ்ந்து, அன்று வருவாரது பாராட்டை இழக்கலாம். மாலையில் புற்றீசல் எனக்கிளம்பிக் காலையில் மறையும் தினசரிப் பத்திரிகைகளின் கலை, இந்நாளின் சிறந்த கலையாம். இதனை நாட்காலைக் கலை எனலாம். பாவலன், இவ்வாறு இன்றைக்கென வாழும்போது, பாட்டுக் கலையை மறந்து நாட்காலைக் கலையில் ஈடுபடுகின்றான். இவன் உணர்ச்சியின் உண்மை எல்லாம், "குடிகாரன் பேச்சுப் பொழுது விடிந்தால் போச்சு" என்ற பழமொழிக்கு இலக்கு ஆகும்.

அகமோ, புறமன்றி இல்லை. புறத்தினை உயர்த்துவதாலேயே அகத்தினை எட்டிப்பிடித்துயரலாம். அருவமாம் நிலையை உணர, உருவத்தினைப் பற்றவில்லையா? கட்புலனாகாக் கடவுளைக் காட்டும் சட்டகம் வேண்டும் அன்றோ! அகத்தினை உணரப் புறத்தினைப் பற்றவேண்டும். சங்கப் பாவலர்கள், அரசியலைத் தூய்மைப்படுத்திய கலைஞர்கள், குரவர்கள் - இவ்வாறு வரலாற்றில் மூழ்கியவர்கள் வரலாற்றுக் குறிப்பினை எவ்வாறு பாடாது இருத்தல் கூடும்? எவ்வாறு மறத்தல் கூடும்? அவற்றினைச் சுட்டித்தானே மேலுயர்த்த முயலவேண்டும்? இக் குறிப்புக்களை மறவாது பாடினால், அவர்கள் பாடல் பாட்டுக் கலையாகுமா? நாட்காலைக் கலையாக அன்றோ உடனுக்குடன் மறைந்தொழியும்? ஈதே இங்குள்ள சிக்கல்.

வரலாறு, பாட்டாகாது என்று நாம் கூற வரவில்லை. ஒரு நாட்டின் வரலாற்றையோ, ஓரரசன் அல்லது பெரியாரின் வரலாற்றையோ, ஓர் அரசகுலத்தின் வரலாற்றையோ முழுப்பொருளாகக் கண்ணும், மூக்கும், காதும், வாயும், கையும், காலும் வைத்து உயிர் கொடுத்துப் பாட்டாகப் பாடிவிடுவதே புலவர் செய்யும் புதுமையாகும். ஷேக்ஸ்பியர் எழுதிய வரலாற்று நாடகங்கள், நெப்போலியன் காலத்தைப்பற்றி ஹார்டி (Hardy) எழுதிய டைனாஸ்ட் (Dynast) என்ற நாடகம், காளிதாசன் எழுதிய இரகுவமிசம், சேக்கிழார் பாடிய பெரிய புராணம் முதலியன, கண்கட்டி விட்டாற்போல நாம் அலைந்துவரும் வரலாற்றுக் காட்டில், தெள்ளத் தெளிய விளக்கி நம் கண்ணைத் திறந்து வைக்கும் வரலாற்றுக் காப்பியங்களாகும். வரலாற்றினையே பாட்டின் உயிர்நிலையாக வைத்துப் பாடாமல், எடுத்துக் காட்டாகவோ உவமையாகவோ வரும் வரலாற்றுக் குறிப்புக்கள் இவ்வாறு பாட்டாதலில்லை: பொருள் விளங்காத துண்டு துணுக்குக்களாகவே அவை ஒழிகின்றன; பின் வருவாருக்கு விளங்காத பகுதிகளாய்ப் பாட்டினையே கெடுத்தொழிக்கும் புல்லுருவிகளாகவும் உயிருணிகளாகவும் மாறிவிடுகின்றன.

மாமூலனார் பரணர் முதலிய சங்கப் புலவர்கள் இத்தகைய உவமைகளை ஏறக்குறையத் தங்கள் பாடல் தோறும் பாடுகின்றார்கள். பாட்டோ இல்லையோ, இவற்றால் பெரியதொரு நன்மை விளைந்துள்ளது. ஒன்றுமே அறிய முடியாது கிடக்கும் சங்க காலத்தினைப்பற்றி அறிய இவையே உதவுகின்றன. சங்க கால வரலாற்றுக் கருங்கடலில், இவையே கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன. மற்றொன்றும் உண்டு. மொழிநடை மாறியுள்ளமை காரணமாகக் கற்றோருக்கு அன்றி மற்றோருக்கு விளங்காத நிலைக்குச் சங்கப் பாக்கள் வந்துள்ளன. கற்றோரும் சங்க கால வரலாற்றை ஒருவாறு அறிந்தாலன்றிச் சங்க நூல்களை அறிவது அருமை. எனவே, சங்க நூல்களை ஓதுவோர், ஏறக்குறையச் சங்க கால மன நிலையை அடைந்து தீரவேண்டும். முதலுலகப் போரின் சென்னை வரலாற்றுச் சிறப்பறிஞருக்கு (Specialists) எம்டன் குண்டினைப் பற்றிய பாட்டு விளங்குவதுபோல, சங்ககாலச் சிறப்பறிஞர்களுக்கு இக் குறிப்புக்கள் ஒரு வகையாக விளங்கி இன்பந்தரும்.

3

இந்தப் பயன் ஒருபுறம் இருக்கப் பாட்டாகுமா என்றும் ஆராய வேண்டாவா? மாமூலர் பாட்டொன்றினைக் காண்போம்.

இயற்கையின் விளையாட்டிலே, கடவுளின் அருளால் சிறந்ததொரு தலைவனும், சிறந்ததொரு தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு, ஈருடலும் ஓருயிருமாகக் களித்து மகிழ்ந்து வருகின்றார்கள். திருமணமோ நடைபெறவில்லை. மண வாழ்க்கைக்கு வேண்டும் பொருளினைத் திரட்டிவரத் தலைவன் தமிழ்நாடு கடந்து செல்லவேண்டுவதாகிறது. கற்புடைய கன்னியின் கவலை சொல்லப் போமா? இதனை அறிந்த ஊர்ப்பெண்கள் வாயை மூடமுடியுமா? இத்தகைய பழி தூற்றப்பெறுதலுக்கு அலர் எழுதல் என்று பெயர். மனக்கவலையால் தலைவியின் உடலம் வாடுகிறது. உள்ளுக்குள்ளோ கையாறு; வெளியிலோ அலர்—இவ்வாறு, இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்துப் புலம்புகிறாள் தலைவி. இதனைக் கண்ட அவளுடைய உயிர்த்தோழி ஒரு சூழ்ச்சி செய்கின்றாள். தன் மகனைத் தான் வைதாலும் பிறர் வைய மனம் பொறாள் தாய்: இதுவே உலகியற்கை. தலைவனைத் தோழி பழித்தால், அதனைப் பொறாது தலைவி தலைவனைப் பாராட்டுவாள் எனத் தோழி நினைக்கின்றாள்; அந்தப் பாராட்டு ஓர் ஆறுதலைத் தலைவிக்குத் தரும் என உணருகின்றாள்; எனவே, தலைவனை இயற் பழிக்கின்றாள். அதாவது: தலைவன் இயல்பினைத் தோழி பழிக்கின்றாள்.

4

"ஐயோ! அழகின் செல்வியே! உன் பழைய அழகெல்லாம், கனவாய்ப் பழங்கதையாய்ப் பொய்யாய் அடியோடு தொலைந்து போயிற்றே (தொகல்வின் தொலைய)" என்று வருந்திக்கொண்டே, தோழி, தலைவிக்கு ஆறுதல் அளிக்க, அன்பாக அவள் உடலைக் கையால் தடவிக்கொடுக்கின்றாள். மெலிந்த உடலில் கைப்பட்டதும், தோழியின் துன்பம் பொங்குகிறது. " ஆ! தலையணைபோல மெத்தென நின்ற தோள்கள்-பச்சை மூங்கில் எனத் திரண்டு நிறம் கொண்டு அழகாக விளங்கிய தோள்கள் - பொலிவெலாம் இழந்து எலும்பும் தோலுமாய் நாளுக்கு நாள் மெலிந்து போய்விட்டனவே (தோள் நலம் சாஅய்)" என்று நைகின்றாள்.

தலைவன்மேல் பாய்கின்றது தோழியின் உள்ளம். ஆனால், பல சொற் பேசவில்லை. துன்பத்தினைப் பாராட்டுவதன்றே அவள் நோக்கம்; "இப்படி எல்லாம் வாட, உன்னை அணைத்து வாழ அவருக்கு அருள் இல்லாது போய் விட்டதே! (நல்கார் என்ற பெயர் பெற்றாரே)" என்று தொடங்குகிறாள்.

"அம்மட்டுமா அவர் கொடுமை இருந்தபடி! அன்பு காட்டாமற் போனாலும் கண்காண அருகில் இருந்தாலும் ஓர் ஆறுதலாய் இருக்கும். அதற்கும் இடம் இல்லாமல், துறவிபோல நம்மை அடியோடு விட்டொழிந்து, எங்கோ நீங்கிப் போயினரே!(நீத்தனர்!) என்னே!என்னே!" என்று புலம்புகிறாள்!

"இதுவே நம் நிலைமை. ஆனால், ஊர் நம்மைச் சும்மா விடுகிறதா? ஊரார் எல்லாம் பழி தூற்றுகின்றனர்.

பாவம் பாவம் என்கின்றனர்; அவரைப் பழிக்கின்றனர்" என்று முடிக்கின்றாள்; பெரும் பழியின் ஆரவாரத்திற்கு ஓர் உவமை கூறுகின்றாள். அவளும் அவளூரும் அறிந்தது ஒரு செய்தி போலும் அது! சேரன் குட்டநாட்டுத் தலைவன் ஆதலின், குட்டுவன் என்றும் அவனுக்குப் பெயர். அவனுடைய ஊர் கழுமலம் (சீகாழி யன்று). அஃது ஒரு கோட்டை. கிள்ளி வளவன் ஒரு சோழன். சோழர்களுக்குச் செம்பியர் என்றும் பெயர் உண்டு. இந்தச் செம்பியனுக்கும் சேரனுக்கும போர் மூண்டது. சோழன், சேரநாடு சென்று, குட்டுவனுடைய கழுமலக் கோட்டையின் மதில் (அகப்பா) முழுதும் அழியத்தாக்கினான். நூறி நுறுங்குகிறது அகப்பா; கடும்போரின் கொடுமை அதனோடும் நிற்கவில்லை; பட்டப்பகலில், செம்பியன் அந்த ஊரைக் கொளுத்துகிறான்; 'இது ஒரு வீரயாகம்' (பகல் தீ வேட்டல்) எனக் கருதுகிறான் போலும்! ஊரார் என்ன ஆகி இருப்பர் ! கண்டவர் என்ன நடுங்கி இருப்பர்! இந்தக் கடும்போரின் ஞாட்பின் — ஆரவாரம் மிகமிகப் பெரிது. "குய்யோ முறையோ! ஆ ஆ கொடுமை? என்ன வீரம்! என்ன வீரம்!" என்ற முறையீடுகள் ஒருபுறம்; போரின் குழப்பம் ஒருபுறம்; ஊர் எரிதலால் மதிலும் மாளிகையும் விழும் இடி ஒலி ஒருபுறம்.

"இந்த ஞாட்பின் ஆரவாரத்தைவிட உன்னைப்பற்றி ஊரார் எழுப்பும் அலர் மிகப்பெரிது" என்று சுட்டுகின்றாள் தோழி.

இதன் பொருள் என்ன? சோழன், சேரன் நாட்டினுட்புகுந்து, உட் கோட்டையையும் அழித்துத் தீ மூட்டிவிட்டான். தலைவன், தலைவியின் நிறையைத் தகர்த்துப் புகுந்து, உயிர்க்குயிராய் நின்ற நாணம் எனும் மதிலையும் நூறி நுறுக்கித் தன் கைக்கொண்டு, முன்னைய நிலைமை அடியோடு அழியக் காதல் தீயினையும் கவலைத் தீயினையும் ஊர் சுடுவிளக்கமாக அவள் உள்ளத்தில் மூட்டிவிட்டான்." "ஈதே ஊரார் கூறும் பழி" என உவமை வழியேமெல்லத் தலைவியின் மனத்தில் உறைக்கக் கூறுகின்றாள் தோழி. ஈதே இயற் பழித்தல். நேரே இவ்வாறு பழிப்பது நாகரிகமன்று. தலைவியும் தலைவனும் வேறல்லர்; ஆதலின், தலைவியின் எதிரே பழிப்பதும், தலைவன் எதிரே பழிப்பதே ஆம். உவமை வழியாகக் கூறியதுமட்டுமன்று இங்குள்ள பண்பாடு. தன் வாயால் கூறாது, ஊரார்தம் வாயில் வைத்துக் கூறுவதும் பண்பாட்டின் பெருமையாகும். இவ்வாறு உள்பொருள் தோன்றுவதற்கு இறைச்சி என்று பெயர்.

"தொல்விகன் தொலையத் தோள்நலம் சாஅய்
நல்கார் நீத்தனர்.......குட்டுவன்
அகப்பா அழிய நூறிச் செம்பியன்
பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது
அலர்எழச் சென்றனர்"

என்பதே தோழி இயற் பழித்த பேச்சு.

5

தோழி எதிர்பார்த்தபடி, தலைவன் இயல்பாம் பெருமையானது பட, அதாவது, தோன்றப் பேசுகிறாள் தலைவி. ஊர் பழிக்கப் பொறுத்திருக்குமா அவள் அன்பு உள்ளம்? இயற்பட மொழியும்போது, தோழி இயற்பழித்த பேச்சைக் கொண்டு மொழிகின்றாள்; "நல்கார் நீத்தனர். உண்மையே ஆயினும்" என்று புகழத் தொடங்கி விளக்குகின்றாள்.

"நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்." நல்கார் என்று பேர் எடுத்துப் போய்விட்டார்; ஆனால் நம்மை நல்குபவர் என்று பெயர் எடுப்பார். நட்டவர் அல்லரா? நட்டல் என்பதன் பொருள் யாது? (நள், நடு, நள் + து, நட்பு) என்பவை ஒரே அடிச் சொல்லில் பிறந்தவை. வித்தினை நடுவது என்றால் என்ன? மண்ணில் அதனை நடுவாகச் செய்வது; ஒன்றாகும்படி மூடிவிடுவது; ஒன்றாய் இயைந்து வளரவிடுவது. "நட்டோர்; நண்பர்" என்றாலும் நம் உயிராம் நடுநிலையாய், நம்மால் மூடி மறைக்கப்பெற்று நம்மோடு இணைந்து ஒன்றாகித் தோன்றுபவர் என்று பொருளாம். (நட்ட விதை, தோன்றும்போதே விளங்கும்; அதுவரை மறைந்திருக்கும்.) "நம்பால் அவருக்கு உள்ள நட்பே அவரை இயக்குகின்றது. அவர் தோன்றுவர்; நமக்கென இயங்கியது அப்போது வெளியாக நம்மை நல்குவர்; தலையளி செய்வர். அவர் சென்றதும் நம் மணவாழ்க்கைக்குப் பொருள் தேடியன்றோ? பழி அவர்மேல் படாதபடி அவர் வாழ்வாராக!" என்று இயற்பட மொழிகின்றாள் தலைவி.

நாகரிகமாக—இறைச்சி வழியாக அல்லது மறைமுகமாகப் பழிதூற்றியதற்கும், மறைமுகமாகவே விடைகூறித் தலைவரை இயற்பட மொழிகின்றாள் தலைவி; “அலர் எழச்சென்றனராயினும், காடிறந்தார் நல்குவர்" என்று தோழி கூறியதனையே கொண்டுமொழிந்து தலைவன் பெருமை தோன்றப் பேசுகிறாள். தோழி கூற்றுக்கு விடையும் தலைவன் பெருமையும் மற்றொரு புனைந்துரையின் வழியே விளங்குகின்றன.

தலைவன், தமிழ்நாட்டினைக் கடந்து வேற்று நாட்டில் பொருள் ஈட்டச் சென்றுள்ளான். தமிழ் நாட்டின் வட எல்லை வேங்கட மலையும் அதனைச் சூழ்ந்த காடுமே ஆம். அங்குத் தலைவனாக ஆண்டு வருபவன் புல்லி என்ற வீரன். மின்னல் வெட்டில் பாய்ந்து தாக்கி, வென்று மறைபவன் அவன். மிக விரைந்து பாயுமாம் அவன் குதிரை—கடுமா அஃது. அவனுடைய காட்டினை—இறந்து—கடந்து சென்றுள்ளார் தலைவர். "(கடுமான் புல்லிய காடிறந்தோரே.)"

அந்தக் காட்டின் புனைந்துரை அழகாக அமைந்துள்ளது. காடு—காட்டினைச் சுற்றிப் பெரிய மலைகள், (நெடுவரை)—மலைகளில் பெரிய பிளப்புக்கள் (விடர்கள் அல்லது குகைகள்)—இவை தோன்றுகின்றன. வறண்ட மலைகள் அல்ல—பச்சைப் பசேர் எனத் தோன்றும் வளம்மிக்க மலைகள் அவை. காடு நிறைந்த மலைகள் அல்லவா! ஆனால், கடுங்காடு அவை. கொடிய காட்டு விலங்குகள் நடையாடுகின்றன அங்கே. "யானைகளும், ஆணும்பெண்ணுமாக, இல்லற அன்பின் காட்சி விளக்கந் தந்து உலாவுகின்றன. தலைவரும் இவற்றைக் காண்பார் அல்லரோ? நம்மை நினைப்பார். நம் இல்லறத்தினை உறுதிப்படுத்தவேண்டும் என்ற படிப்பினையையும் அங்கே படிப்பார்" என்று தலைவி நினைக்கின்றாள்.

அம்மட்டுமா? அங்கொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைச் சாரலில் காந்தள் நன்றாக மலர்ந்து கிடக்குமன்றோ! (அலர் கவிந்து மாமடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் அது.) காந்தள், கைவிரல்களை விரித்தாற்போல் மலரும்—பாம்பு படம் விரித்துக் கொட்டாவி விட்டாற் போலக் காந்தள் மலரும் என்பர். "அரவு பைத்து ஆவித்தன்ன அங்காந்தள் அவிழ்ந்து அலர்ந்த" (1658) என்பது சிந்தாமணி. "காந்தள், பாம்பு தன் படத்தை விரித்துக் கொட்டாவி கொண்டால் அன்னவாக முகை நெகிழ்ந்து பின்பு அலர்ந்தன" என்பது அதற்கு நச்சினார்க்கினியர் கண்ட உரை. இதனை அதிவீரராம பாண்டியர், “பாம்பு பைத்து ஆவித்தென்னமென் காந்தள் பருமுகை அவிழ்ந்து" என்று பொன்னேபோலப் போற்றி ஆள்கின்றார். இவற்றிற்கு எல்லாம் ஊற்று நாம் ஆராயும் பாடல்தான். நிற்க.

பாம்புபோலத் தொலைவில் காட்சியளிக்கும் இந்தக் காந்தளிடையே தொங்கும் வாயான தும்பிக்கையையே சிறப்பிலக்கணமாகக் கொண்ட, தன் காதலனான, ஆண்யானை (ஞால்வாய்க் களிறு) செல்கின்றதனை அதன் பெண் யானையாம் பிடி காண்கின்றது. அந்தக் காந்தளஞ்சாரலில் தும்பிக்கை தோன்றுகிறது. (பாந்தட் பட்டென) பாம்பிடையே தன் காதலன் சிக்கியதாகப் பிடி எண்ணிவிடுகிறது. அதன் கவலைக்கு அளவு உண்டா? முடிவு உண்டா? இந்தத் துஞ்சாத் துயரத்தால, காதற்பிடி அலறுகிறது; அஞ்சிக் குமுறுகிறது; கலங்கிப் பிளிறுகிறது. இது பெரியதொரு பூசல்; ஆரவாரம். மலையும் காடும் இதனோடு ஒரு குரலாகப் புலம்பிப் பிளிறுவன போலத் தோன்றுகின்றன. நீண்ட மலையில் உள்ள பிளப்புக்களாம் குகைளில், இந்த ஒலி சென்றதும், எதிரொலியாகத் திரும்புகிறது. இடி தொடர்ந்து இடிப்பது போல, இவ் வெதிர் ஒலிகள் பல பல எதிர் ஒலிகளாய்த் தொடர்ந்து பிளிறுகின்றன.

"அஞ்சு பிடிப்பூசல் நெடுவரை விடரகத் தியம்பும் காடு இவர் சென்ற காடு, இதனைக் கடந்து பொருள் தேடச்சென்றார் காதலர்; இக் காட்சியைக் கண்டிருப்பார்; ஆதலின், வந்து தலையளி செய்வார்; நல்குவர்" என்கிறாள் தலைவி. முன்னொரு கால் பிற நாட்டாரிடமிருந்து தோழியறிந்ததனை அவள் வாயாகத் தலைவி உணர்ந்தது ஈதே ஆம். இஃது இப்போது நினைவுக்கு வரத் தலைவி கூறுகிறாள்.

தோழியின் கூற்றிற்கு இதில் என்ன விடை உண்டு? காதலன் பெருந்துன்பங்கண்டு காடும் மலையும் உடன் புலம்பப் பிடி நின்று பிளிறுவது தலைவர் காதிலும் வந்து இயம்பும் அன்றோ? விலங்குகளின் நிலையே இப்படியானால். மக்களின் தலைசிறந்த தலைவியின் நிலை என்ன என்று அவர் எண்ணிப் பாராரா? எண்ணிப் பார்த்தால், விரைவில் பொருள்கொண்டு திரும்பி வந்து நல்காரா?

மற்றொன்றும் இங்குத் தோன்றுகிறது. "தலைவன் அடியோடு கெட்டான் என்று பலர் பழிப்பதும் நடுங்குவதும் அறியாமையே ஆம். பிடி புலம்புவது ஒரு கண்மயக்கில் மருண்டு வெருண்டே அன்றோ? தலைவனாம் யானை பாம்பால் கடியுண்டு கிடக்கவில்லை; மெல்லிய காந்தளிடையே இன்பமாகக் கிடக்கின்றது. தலைவனும் கொடுமைப் பாம்பு வாய்ப்பட்டுத் தலைவியை மறக்கவில்லை; அவளுக்கு எனவே இன்பமூட்டும் பொருளைத் திரட்டப்பொருளிடையே கிடக்கின்றான்; காந்தள் போன்ற அவள் கைவிரலின் பிடியை நினைத்துக்கிடக்கின்றான். தலைவியை மறந்ததாகக் கொண்டு தோழியும் பிறரும் பழி தூற்றுவது அறியாமையே ஆம். தலைவியாம் கன்னியின் கற்பு! மனம் புலம்பியதன் எதிரொலியன்றோ தோழியின் கூற்றும் பிறவும். ஆதலின், அப் புலம்பலும் அறியாமையே ஆம் எனத் தன்மேல் பழியை ஒருவாறு ஏற்றுக்கொண்டு தலைவி தலைவனை இயற்பட மொழிகின்றாள். "ஊரார் கூறும் அலர் பொருளற்றது; பொய்யானது" என்றும் சொல்லாமல் சொல்லிவிடுகின்றாள் தலைவி.

இவ்வாறு, நேர்முகமாக ஒருவரை ஒருவர் எதிர்த்துரையாடாமல், குறிப்பிற் பொருளுணரப் பேசும் நாகரிகப் பண்பாட்டினை என் என்பது! புனைந்துரைகள் வெறும் புனைந்துரைகளாக வளராமல் பேசும் பேச்சுக்கு ஏற்பப் பொருளூட்டம் தருவனவாக அமைவது சங்கப் பாக்களின் தனிச் சிறப்பாகும். சொற் சுருக்கத்தில் பொருட் பெருக்கம் வெள்ளமிடுகிறது.

தொல்கவின் தொலையத் தோள்நலம் சாஅய்
நல்கார் நீத்தனர்; ஆயினும் நல்குவர்
நட்டனர் வாழி தோழி குட்டுவன்
அகப்பா அழிய நூறிச் செம்பியன்
பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது
அலர்எழச் சென்றனர்: ஆயினும், அலர்கவிந்து
மாமடல் அவிழ்ந்த காந்தள் அஞ் சாரலின்
ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்
நெடுவரை விடரகத்து இயம்பும்
கடுமான் புல்லிய காடு இறந் தோரே.

—நற்றிணை 14.

6

குட்டுவன் செம்பியன் அகப்பா நூறித் தீ வேட்டல், கடுமான் புல்லிய காடு—என்பவை சங்க கால வரலாற்றுக் குறிப்புக்கள். இவற்றினை நாம் உள்ளவாறு அறிய முடியாமையால் இக்குறிப்புக்கள்பாட்டின்பத்தினைக் கொலை செய்யவில்லையா என்பதே கேள்வி. குட்டுவன், செம்பியன், புல்லி என்பவை அந்நாளைய மக்களுக்குப் பெரிதும் பொருள் விளங்கி இனித்துமிருக்கும். அவை அவர்கள் உணர்ச்சியையும் தூண்டியிருக்கும். அவ் வகையால் அவை அந்நாளுக்கு உகந்தனவாய் இருந்தாலும், இந்நாளுக்கு உகந்ததோ இந்தப் பாடல் என வினவலாம். நிகழ்ந்ததொன்றனைக் கூறுகின்றாரேயன்றிப் புலவர் கண்ட கனவு அன்று என்பதுமட்டும் அவற்றால் வரும் பெருமை. இல்லையேல், அவை பொருள் புலப்பாட்டிற்கு வேண்டுவனவே அல்ல. இந்தப் பாட்டில் வரும் பொருள், குட்டுவன், செம்பியன், புல்லி என்ற குறிப்பால் சிறக்கவில்லை. "அகப்பா அழிய நூறிப் பகல் தீ வேட்ட ஞாட்பு" என்ற குறிப்பாலும், "மா மடல் அவிழ்ந்த காந்தளஞ் சாரலின்களிறு பாந்தட்பட்டெனத் துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல் நெடுவரை விடரகத் தியம்பும் காடு" என்ற குறிப்பாலுமே இப்பாடல் உயிருள்ளதாகி உணர்ச்சியை ஊட்டுகின்றது.

குட்டுவன், தமிழ் நாட்டின் தென்மேற்கு மூலையில் ஆண்டவன்; புல்லி, வடகிழக்கு மூலையில் வாழ்ந்தவன். தமிழ்நாடு முழுவதும் நம் கண்ணெதிர் இப் பாட்டில் அவ்வாறு தோன்றுகிறது. இதனைக் கடந்து போகின்றான் தலைவன். தாய்நாட்டை—நாகரிக நகரங்கள் படைத்த இன்ப அன்பு நிலையத்தை-விட்டும் போகின்றானே தலைவன் என்பதோர் எண்ணம் பிறக்கின்றது. ஆனால், அங்கும் ஓர் ஆறுதல், புனைந்துரையில் தோன்றுகிறது. நாகரிகத்தின் கொடுமையே பகல் தீ வேட்ட ஞாட்பாகவும், வெளிநாட்டின் அயன்மையே மலைவளம் காட்டுவளம் என்பவற்றோடு தொடர்ந்துநின்று பொருளீட்டும் இடமாகவும் காட்சியளிக்கின்றன. இதனாலும், தலைவியும் தோழியும் ஆறுதல் அன்றோ பெறவேண்டும் ! குட்டுவன் செம்பியன் என்பன பொதுப் பெயர்களே ஆம். பொருளீட்டுவார் செல்லும் காடு, மொழி பெயர் தேயமாம் வடநாட்டதே ஆம். இவை எல்லாம், யாவரும் அறிந்தவையே ஆதலின், "செம்பியன் யார்? குட்டுவன் யார்? புல்லி யார்?" என அறியாதபோதும் இப் பாடல் இனிக்கவே செய்கின்றது.

வரலாற்றுச் சிறப்புக் குறிப்புக்களையும் பொதுமை உண்மைச் செய்திகளாக விளங்குமாறு புனைந்துரைத்தமையே இங்குள்ள சிறப்பு. ஆகவே, மாமூலனார் சிறந்த பாவாணர் என்பதில் ஐயமில்லை. "யோகிகளாய் உபாயங்களால் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர், அறிவன் தேயத்து அனைநிலையோர் ஆவார்" என நச்சினார்க்கினியர் இவர் பெருமையைப் பேசுகிறார். உலகினை விட்டொழியாமலே உலகிற்கும் அப்பாலான உயிர்நிலையாய அன்பின் உண்மையைக் கண்ணெதிரே உயிர் ஓவியமாக எழுதிக் காட்டும் வியப்பினை என் தலைவியின் உள்ள நிலை, அதில் ஒன்றாய்க் கலந்துவிட்ட தலைவன், தன்னையே அழிய மாறி அவளுக்கு என வாழ எடுக்கும் முயற்சி, இவர்களோடு ஒருங்கு துடிக்கும் தோழியின் நெஞ்சம் - இவற்றின் ஒற்றுமைக் காட்சியாக இப்பாடல் விளங்குகிறது. புறத்தோற்றம் எல்லாம், உவமையும் குறிப்புமாக, இந்த உயிரோவியத்தினை எழுதும் கிழியாக அமைகின்றது என்பதும் பின்னர்த்தான் தெளிவாகிறது. புறமும் அகமும் ஒற்றித்து அன்புச் சுடராய் ஒளிர்கிற அழகே, அழகு! உயிராவணமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியில் உரு எழுதி நம் கைத்தருகிறார் மாமூலனார்.

🞸🞸🞸🞸