நற்றிணை நாடகங்கள்/புதுமணப் பெண்
4. புது மணப் பெண்
இரவெல்லாம் இவளுக்குத் தூக்கமே வரவில்லை; அவனுக்குத் தெரியாமல் இருக்கப் படுக்கையில் உறங்குவதுபோலக் கண்ணை மூடிக்கிடக்கின்றாள். கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும், அவன் போகப்போகும் காட்டின் கொடுமை எல்லாம் பட்டப்பகல் வெட்ட வெளிச்சமாகத் தோன்றுகிறது. அவன் வெயிலில் துடிக்கிற துடிப்பு இவளைத் தூக்கிவாரிப் போடுகிறது. இவள் நடுநடுங்குகிறாள்; அலறுகிறாள். 'உறங்குகிறாள்' என்று வெளியே சென்று, பயணத்துக்கு முன்ஏற்பாடாக மூட்டை முடிச்சுக் கட்டிக்கொண்டிருந்தவன், அலறுதல் கேட்டு உள்ளே வருகிறான்; "என்ன கண்ணே !" என்கிறான். “ஒன்றுமில்லை; கெட்ட கனவு" என்று கண்ணை மூடிக்கொண்டு இவள் மறுபக்கம் திரும்பிக்கொள்கிறாள்.
அன்றிரவு அவளுடைய உயிர்த் தோழி வந்திருக்கிறாள்; பயணத்திற்கு வேண்டுவனவற்றை உடனிருந்து ஏற்பாடு செய்கின்றாள். தோழிக்கும் அவன் போவது வருத்தம் தான்: போவது நல்லது என்று அவள் அவனோடு கூடித் துணிந்துவிடுகிறாள். ஆதலால், தோழி முகத்தில், துன்பத்தில் ஓர் இன்பம்—இல்லை—ஓர் ஆறுதல் ஒளிர்கிறது: நிகழ்கால இருளில் எதிர்காலக் காலைச் செவ்வானம் விடிவதனைக் காண்கிறாள். தன் கண்ணான காதலியின் அலறலைக் கேட்டவன் தோழியிடம் வருகிறான். நடையில் ஒரே தயக்கம், துன்பம் நிழலிடும் முகம், சுருங்கிய நெற்றி, ஒளியிழந்து திகைப்பே ததும்பும் கண்-இவ்வாறு காண்கிறாள் தோழி அவனை. "கனவிலும் அலறுகிறாள்; அழுகிறாள்; நடுநடுங்குகிறாள்: எப்படிப் பிரிவது? நீ தான் அவளைத் தேற்றவேண்டும். அவள் முழு மனத்தோடும் உடன்பட்டால் அன்றிப் போவது பெருங் கேடாக முடியும்" என்று பெருமூச்சுவிடுகிறான். "கனவு இல்லை. அவள் உறங்கவே இல்லை" என்று தோழி கூறிக்கொண்டே அவள் படுத்திருந்த அறைக்குள் நுழைகிறாள்.
'சில்' என்ற காற்றுப் பலகணி வழியாகப் படுக்கை அறைக்குள் வீசுகிறது. அங்கு எரிந்துகொண்டிருந்த விளக்குச் சிறிது சாய்ந்து, பின், தூண்டப் பெற்றதுபோல வலமாகச் சுழித்தெழுந்து ஒளிர்கிறது. வெள்ளி, கீழ்வானத்தில் முளைத்தெழுந்து முத்துக் கொத்துப் போல விளங்குவதும் பலகணி வழியே தெரிகிறது. அவள் முகத்தில் ஒளி விழுகிறது. ஆனால், நிழல், முகத்தை மறைப்பதுபோலத் தோன்றுகிறது. வெளியில் மேகம் வெள்ளியை மறைக்கிறதா? இல்லை. உள்ளத்தில் பொங்கி எழும் கவலைதான் நிழலிடுகிறது என்பது தோழிக்கு விளங்கிவிடுகிறது. தோழி, அருகில் வந்து நிற்பதனை அவள் உணர்ந்து விழித்துப்பார்க்கிறாள். "தூங்காமல் என்ன புரண்டுபுரண்டு முகம் வீங்கிக் கிடக்கிறாய்! ஏன் இப்படி? வா! தோட்டத்தில் சிறிது உலவி வரலாம் " என்று கூறிக்கொண்டே, தோழி மூலையில் உள்ள தண்ணீர்த் தாழியில் மலர விட்டிருக்கும் குவளைப் பூவை எடுத்து அவள் கண்ணை ஒற்றித் துடைக்கிறாள்; பூவை அவள் தலையில் சூடி விடுகிறாள். மேற்கே இறங்கிக்கொண்டிருக்கும் திங்களின் நிலவொளியில் தோட்டம் அழகாகத் தோன்றுகிறது. வேப்ப மரத்தின் அடியில் வலை வைத்தது போன்ற நிழலில் இருவரும் அமர்கின்றனர்.
2
"அடுத்த ஊரில் உள்ள செல்வர்கள் வெருட்டி விட்டார்களாம். பாவம்! பட்டினியால் மெலிந்த சிறுவன், நீ படுத்தவுடன் இங்கே வந்தான். அவர்தம் பயணத்திற்குக் கட்டிய மூட்டையை அவிழ்த்து அவன் பசியை ஆற்றினார்" என்று பேசத் தொடங்குகிறாள் தோழி.
"எனக்குத் தெரியும். நான் தான் தூங்கவில்லையே! இல்லை என வருவார்முன்னே இல்லை என்பது, உயிர்போவதுபோலப் பெரு வருத்தமாகிறது."
"எத்தனைக் கீழ் மக்கள்—எவ்வளவு செல்வமாக வாழ்கிறார்கள்! யாருக்குப் பயன்? உங்களிடம் அத்தகைய செல்வம் கொழித்த லாகாதா? பழைய குடி! அழகிய வீடு! ஆனால், சிறு வீடு! வயிற்றுக்குக் குறைவில்லை. இருந்தாலும், பட்டினி மக்களோடு பங்கிட்டுப் பட்டினி கிடக்கத்தான் பிறந்தோமா? வள்ளன்மை உள்ளத்திற்கு, ஏற்ற வருவாய் இல்லையே! இதனால், நீங்கள் வருந்தும் வருத்தத்தை உங்கள் வாயும் அறியாது; எண்ண அலைகள் வீசும் உங்கள் தலையோடு உறவு கொண்டாடும் தலையணையே அறியும்: பிறர் அறியார். ஆனால், நான் அறிவேன்."
திங்கள் மேகத்திற்குள் ஓடி மறைகிறான். நிழல் பரவுகிறது. தலைவி பெருமூச்சு விடுகின்றாள்: "ஆம், எத்தனை ஏழைகள்? எத்தனை அகதிகள்? கண்டுகண்டு என்மனமும் கல்லாய்விட்டது" என்கிறாள்.
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் வாழ்வுக்கும் பொருள் வேண்டும். உன் மனம்போல அவர் மனமும் புழுங்குவதால் அன்றோ, அவரும் பொருள் தேடச் செல்கின்றார்! உன்னைப் பிரிந்துபோவதே பெருவருத்தம். புண்ணில் வேல் எறிவது போல அதற்குமேல் நீயும் அவர் போவதைத் தடுப்பதுபோல நடுநடுங்கி நின்றால், அவர் மனம் என்ன ஆகும்? ஆண்மை எல்லாம், அன்பு அழுகைமுன், குழைந்து செயலற்றுநிற்கும்.
"அவர் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா?"
பேச்சைவிடப் பேராற்றல் படைத்தது பெண்கள் அழுகை. "நான் அழவேண்டும் என எண்ணவே இல்லை; தூங்கவே எண்ணினேன். ஆனால், இரவெல்லாம் அவர் செல்லப்போகும் காட்டின் கொடுமையே கண்ணெதிர் சுழன்றுகொண்டிருந்தது. அதனைக் கண்டபின், எப்படி என் மனம் துணியும்? என்னையும் அறியாமல் அலறினேன். தம்மைப் பேணிக்கொள்ள அறியாதவர் அவர்; தாய்போல நான் அவரை ஆட்டிப்படைக்கிறேன்' என்பார். தண்ணீரும் இல்லாவிடத்தில் தத்தளிப்பதா, அந்தக் குழந்தை உள்ளம்? என்ன வெப்பம்! என்ன பாறை! என்ன காடு!""என்ன கொடுமை கண்டாய் ! காட்டுக்கு எப்போதாவது போய் இருக்கிறாயா?"
"எல்லாம் நீ கூறியதுதான் கனவில் வந்தது.', "நான் என்ன சொன்னேன்? நீ என்ன கனவு கண்டாய்?'.
"நிழலோ, மரமோ இல்லாத வெறும் வெட்ட வெளி. கண்ணுக்கு எட்டிய தொலைவு எல்லாம் வெறும் களரி நிலம்தான். நீர்ப்பசையே காணோம். நிலம் எல்லாம் இறுகிச் சுட்ட செங்கல்போலக் கெட்டியாகிப் பின் வெளியில் பிளந்துகிடக்கின்றது. பாம்பு கடித்தால் நஞ்சு தலைக்கேறுவது போலச் சூரிய வெப்பமும் 'விர்' என்று தலைக்கேறுகிறது. சூரியனும் உச்சியில் வந்து சுழலுகிறான். வெயிலின் கொடுமையால் எங்குப் பார்த்தாலும் பேய்த்தேர் அந்தரத்தில் நீரலைபோல மருட்டி ஓடுகிறது. ஒரு பெரிய யானை—பாவம்! உணவின்றி, உரம் குன்றி நிற்கிறது. சுற்றிச் சுற்றிப் பார்த்து அதன் கண் பஞ்சடைகிறது. எவ்வளவு பெரிய யானை ! ஆனால், எவ்வளவு சிறிய கண் ! அந்தக் கண்களும் பொலிவிழந்து ஒளி மழுங்கிக் கிடக்கின்றன. பேராற்றல் படைத்தும் பீடழிந்து வாடுகிறது: எப்படிக் குன்றிப் போய்விட்டது, இந்த யானை! களைத்துநின்ற நிலையில் தரை 'சுறீல்' என்று அண்டிக்கொள்கிறது. ஏதோ காலைப் பற்றிக்கொண்டதுபோலத் தோன்றவே சடுக்கெனக் காலைத் தூக்கித் தரையை ஓர் உதை உதைக்கிறது. எவ்வளவு பருத்த கால் ! என்ன உதை ! ஆ ! என்ன, ஒன்றும் தோன்றவில்லை. ஒரே மேகம் மூடிக்கொண்டதுபோல ஆய்விட்டதே ! இல்லை, இல்லை. இதோ தெரிகிறது. உதைத்த உதையால் வெளுப்புப் பூத்த களரி நிலத்தரை தூசாகிறது. புழுதி எல்லாம் உதைக்கு எதிருதைபோலக் 'குப்'பென்று மேலே கிளம்புகிறது; யானையின் மேலே மூடிக்கொள்கிறது. சிறிது நேரம் யானையே தோன்றவில்லை. சிவபெருமான் சாம்பலில் பண்டரங்கக் கூத்தாடி வெண்பொடி மூழ்கி நிற்பதுபோலப் புழுதியாடி நிற்கிறது யானை. அந்தோ ! தண்ணீராட விரும்பும் யானை இவ்வாறு வெள்ளைச் சுடு நீறாடி வருந்துகிறது.
"இப்படிப் பாலைவனத்தின் அருவழியில் முடிவிலாது சென்று அலைந்து வருந்தும் வருத்தம் எல்லாம் தணியும் நாள் என்றோ? நல்ல காலம்! பாறைகள் மலிந்த இடம் ஒன்று தோன்றுகின்றது. எதிர்பாராத காட்சி ! கல்லில் தண்ணீர்! ஆம், அதோ சிறிய கூவல் ! சிறு குழி ! ஆனால், வற்றாத நீர் நிலை! ஊற்றுப் பெருகிக்கொண்டே இருக்கும் கூவல்! இதனைக் காண்கிறது யானை; தண்ணீரைத் துதிக்கையில் உறிஞ்சி உறிஞ்சி உடல்மேல் ஊற்றிக்கொள்கிறது; வருந்திய வருத்தமெல்லாம் மெல்ல மெல்லத் தணிகிறது; உடலும் தூயதாகின்றது; நீர் வேட்கையும் தணிகிறது.
"யானையும் வருந்தும் இத்தகைய காட்டில் அவர் நெடுந்தொலைவு செல்லவேண்டும் அன்றோ? எத்தனை வருத்தம்! இன்பமாக இங்கு வாழ்ந்தவர் எவ்வாறு வருந்துவார் ! எத்தனை நாள்! எத்துணைத் தொலைவு! இந்தக் காடுதானே நீ கூறியது? இதில் அவர் நடந்து வருந்தி அலைவதுபோலக் கனாக் கண்டு அலறினேன்; நடுங்கினேன்! வயிறெல்லாம் பற்றி எரிகிறதே!" என்று கூறி முடிக்கின்றாள் அவள்.
3
"ஆமாம். நெடுந்தொலைவு சென்று வருந்தத்தான் செய்வர்; இங்கும் வருந்துவர்; அங்கும் வருந்துவர்; நீ சொல்லும் நடை வருத்தம் அன்று" என்கிறாள் தோழி.
"பின் என்ன வருத்தம்? ஐயோ ! இன்னும் என்ன அச்சுறுத்தப் போகிறாய்?"
"அச்சம் அன்று; ஆறுதல். யானையின் வருத்தம் சொன்னபோதே நடை வருத்தம் கூறி முடியவில்லையா? மேலும் வருந்துவர் என்றால் வேறொன்று உண்டு. இந்தக் காட்சி அவருக்கு எதனை நினைப்பூட்டும்? அவர் மனமும் உன் மனமும் ஒன்றாயிற்றே! அவர் கண்ணால் இதைப் பார். உன் பெருமையாம் வருத்தமன்றோ தோன்றும்?"
"என்ன, என் தலையிலெல்லாவற்றையும் தூக்கிவாரிப் போடுகிறாய்? என்ன காட்சி? ஆம், விளங்குகிறது. உலகம் ஒரு பாலைவனம். அன்பு என்ற நீரும் இல்லை: பிரிவு என்ற நிழலும் இல்லை. பயனற்ற களர்நிலம் போன்ற மனம் படைத்த மக்களே வெம்பி வெம்பி மனம் இறுகிப் பிளவுபட்டுக் கிடக்கின்றனர். யானை போன்ற பேராற்றல் படைத்தவர்கள், அருள் உள்ளத்தால், கலைஞராய் வாழ உலகிற்கு உழைக்கின்றனர்; கொடுமை வெயிலில் புழுங்கி, மெலிந்து, களர் மனத்தைத் திருத்தப் பார்க்கின்றனர். வறண்ட உள்ளம் குப்பையும் கூளமுமாய்ப் புழுதியாகிறது. அந்த உணர்ச்சிப் புழுதியில் இவர்களும் முழுகி மாசுபட்டவர் போல மாறிநின்று வாடவேண்டுவதுதான்! இவர்கள் வருத்தம் தீரத் துணை ஏது? அன்பு ஏது? எங்குப் பார்த்தாலும் வறண்ட பாலைவனம்.
. ஆனால், எதிர்பாராத கற்பாறையாம் வறுமை வாழ்வில், நல்ல குடியில், அன்புக் கூவல் சுரக்கிறது. வற்றாத அன்பு. அங்குச் சென்று வருத்தம் எல்லாம் நீங்க, இன்பம் அடைகின்றனர் அப்பெரியோர்; மேலும் உலகினைத் திருத்தச் செல்கின்றனர். இவ்வாறு காண்பார் அவர்."
"இப்போது தெரிகிறதா வருத்தம்? நம் குடும்பம் இத்தகைய சிறு கூவல் அன்றோ? இது வற்றாத வளம் படைத்துச் செல்வத்தில் சிறந்திருந்தால் எப்படி இருக்கும்! இப்படி எண்ணி வருந்துவார் இங்கிருந்தும் இந்த வருத்தத்தில்தானே மாழ்குகிறார்? இங்கிருந்து வருந்தினால் வருத்தத்திற்கு முடிவு இல்லை; அங்கு வருந்தினால் விரைவில் பொருள் தேடி வர முடியும்."
"ஆனால், கொடிய காடாயிற்றே!"
"என்ன கொடுமை! யானை போன்றவர் புழுங்கி வருத்தம் தீரும் வழிதானே! கூவல் இல்லையா, நடை வருத்தம் தீர! யானை வருத்தம் போமானால் இவர் வருத்தம் போகாதா? வருத்தம் தணியும் காடுதானே அஃது? அருவழி வருத்தம் தோன்றாது; அறவழி வருத்தமே தோன்றும். அஃது உன் வருத்தம். அது தீரப் பணம் வேண்டும். அதனை விரைந்து சென்று, மிக விரைந்து முயன்று கொண்டுவருவர். யானை போன்றார் துணை உண்டு. கல்லில் நீர்போல எதிர் பாராதபடி புதையல்போலச் செல்வம் எதிர்கிடக்கும். ஆதலின், அவர் வருத்தம் விளங்கவில்லையா? இதற்கு வருந்தலாமா?"
"என் செய்வேன்? மனம் கேட்கவில்லையே!"
"நீ அறிவுடையவள் ஆயிற்றே! எதனையும் பொறுப்பாயே! உலகம் வாழவேண்டும் என்று இருவரும் வருந்துகின்றீர்கள்; பட்டினி கிடக்கும் மக்களைக் கண்டு பரிகின்றீர்கள். இங்கு உலகம் இவ்வாறு வாடுகிறது. இந்த உன் வருத்தத்திற்கு அவரும் வருந்துகிறார். அவர் வருத்தத்திற்கு நீயும் வருந்துகிறாய். இதுதான் தவம். உலகிற்கு எனத் தவம் கிடக்கின்றீர்கள். உன் வாட்டம் கண்டு அவர் தவம் கிடக்கின்றார்: அவர் தவம் கண்டு நீ தவம் கிடக்கின்றாய். 'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.' மேலும் பிறருக்கு உதவவேண்டும்—வேளாண்மை செய்ய வேண்டும்—என்ற வேள்வி நாட்டமாம் பரிவும், அருளுள்ளமும் உங்களிடம் உண்டு. தவம் என்றால் துறவிகள் தாம் செய்வர் என்று பலர் கருதுகின்றனர். துறவிகளுக்கு உணவளிப்பதற்காக இல்லறத்தார் துறவினை மறந்தனரா என்று கேட்கின்றனர் சிலர். 'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம்' எனபது முழு உண்மை அன்று: வேண்டுமானால் அரை உண்மை எனலாம். பெரியோர்களுக்கென எப்போதும் தவம் செய்பவரே இல்லறத்தார். 'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி நிரந்தரமாம் மற்றையவர்கள் தவம்'—இதுவே முழு உண்மை. உங்கள் வாழ்வில் நீங்கள் காணவில்லையா?"
"வருத்தம் எல்லாம் தவமா?"
"பின் என்ன? வீண் வருத்தம் வெறும் வருத்தம். பிறர்க்கென வருந்துவது தவம். உனக்காகத்தானே இத்தனையும்? வேறொரு பெண்ணை மணக்கவா தவம்கிடந்து வருந்துகிறார்...ஆம், ஆம். மற்றொரு பெண்ணை மணக்கத்தான் இந்தத் தவம் எல்லாம். நல்ல பெண்ணை மணக்கவேண்டுமானால் தவம் செய்ய வேண்டாவா ?" என்று தோழி சிரிக்கின்றாள்.
"என்ன! மற்றொரு பெண்ணை அவர் மணப்பதா ?"
"பொறாமையா? ஆனால், நீதானே மகிழ்ச்சியோடு பாடினாய்."
"நான் பாடினேனா? என்ன இது? இடிமேல் இடி."
"இடிமேல் இடி இல்லை. விடுகதைக்குள் விடுகதை. நீ விடுவித்த விடுகதைதானே."
"நான் எப்போது விடுவித்தேன். என் மனத்தினைக் கலக்காதே."
"கலக்கம் ஏன்? களிப்புத்தான் ! ஒரே பெண் தான். ஆனால், சூழ்நிலைக்கேற்ப வேறு வேறு பெண்ணாகலாம்: 'நாய் வயிற்றிற் கரு நாயாம்: மனித வயிற்றிற் கரு மனிதனாம்' என்பது நீ கூறும் உவமை அன்றோ?"
"நீ கூறுவது ஒன்றும் விளங்கவில்லையே !"
"அவருடைய ஆசிரியர் வந்ததனைப் பற்றிப் புகழ்வாயே! அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்!"
4
கோடைக்காலம். ஒரே வெயில் கொளுத்துகிறது. தோட்டத்திலும் புழுக்கம். கதிரவன் மலையில் விழுகிறான். மஞ்சள் வெயில்...பின் செவ்வானம்...மாலை மயக்கம்...இருட்டு...கூடு திரும்பும் குருவிகளின் இசையரங்கு...தென்றல் விருந்து...அமைதி...இவ்வாறு உலகம் மாறிமாறித் தோன்றுகிறது. அவன்,உடல் குளிரப் பொய்கையில் ஆடி வரப்போகிறான். வீட்டின் முற்றத்தே முல்லைகள் இங்கொன்றும் அங்கொன்றும் மலர்கின்றன. இதோ எல்லாம் பூத்துச் சிரித்து மகிழ்கின்றன. வான்மீன்களும் முல்லைப் பூப்போல இங்கொன்றும் அங்கொன்றும் பூப்பதுபோலத் தோன்றுகின்றன. இருட்டியதும் வானமெல்லாம் வான்மீன்கள் எப்படியோ நிறைந்துவிட்டன. இந்த இன்பப் பொறிகள் தலைவியைக் கண்டு பழைய தோழி போலக் கண் சிமிட்டி மின்னுகின்றன. காலம் தாழ்த்து வந்த காக்கை கரைந்துகொண்டே மரத்தில் போய்த்தங்குகிறது. "என்ன, காகம் இந்த நேரத்தில் கரைகின்றது! விருந்து வருகிறதா என்ன?” என்று தலைவி தனக்குள் பேசிக்கொள்கிறாள்; வீட்டின் வெளியில் விளக்கேற்றி முல்லைப் பூவைத் தூவி வழிபடுகிறாள்.
ஏதோ காலடி கேட்கிறது. அவள் திரும்பிப் பார்க்கிறாள். ஒருவர் வருகிறார். அறிவுடன் அன்பும் கலந்து ஒளிரும் கண்கள்...அறிவு உழுத நெற்றி...காலத்தோடு அநுபவமும் சேர்ந்து திரைத்த கன்னங்கள்...உள்ளம் தூயதானதுபோல நரை பழுத்த தாடி...உறுதியை வற்புறுத்தும் மோவாய்க்கட்டை...வழி நடந்த களைப்பு... முதுமையின் இளைப்பு...பயணத்தில் புழுதி படிந்த வெள்ளாடை...இவ்வாறு ஒருவர் காட்சியளிக்கிறார். 'தலைவர் என்னிடம் பலமுறை பேசிய ஆசிரியர்...பாவாணர்...முதுபேரறிஞர்...இவர்தாம்' என இவளுக்குத் தோன்றுகிறது. அவருடைய பாடல்கள் அறிவுரைகள் என்று தலைவன் கூறியவை எல்லாம் அவர் வடிவத்தில் இவள் காண்கின்றாள்; அவை காதில் ஒலிக்கின்றன. வழிபடச் சென்ற கடவுள் நேரே வந்தாற் போன்ற மகிழ்ச்சியில் இவள் முழுகுகிறாள். இதற்குள் பெரியவரும் வாயிலை அடைகிறார்; "அம்மா, ஊர்கிழார் இருக்கின்றாரா?" எனக் கேட்கின்றார். அன்பும், இன்பமும், அறிவும், பரிவும் குழைந்த குரல், இவள் மனத்தினைக் குழைவிக்கிறது. தலைவனுடைய ஆசிரியப் பெருந்தகையாம் அன்றோ? "வாரா விருந்தன்றோ நீங்கள்? பொருள் கொடுத்து இசை வளர்ப்பார் பலர். கலைப் பொருளை...அறிவுப் பொருளை......உண்மையை......அன்பை...வாரி வழங்கி மக்களை நல்வழிப்படுத்தும் நல்லிசைப் புலவருக்கு ஒப்பு உண்டோ? நல்லிசை விருந்து நாளும் வருமோ? எங்கள் தவமே தவம்!" என்று அடி வீழ்ந்து அவள் வணங்குகின்றாள்.
"அம்மா, என்னை நீ எப்படி அறிவாய்? வியப்பாக இருக்கிறதே!"
"வியப்பொன்றும் இல்லை; என் கணவர் பலமுறை தங்களைப் பற்றிப் பேசியுள்ளார்; தங்கள் பாடல்களைப் பாடுவார். எனக்கும் பல பாடல்கள் மனப்பாடம் ஆகி உள்ளன. அவர் உடல் வடிவைத் திருத்தி யமைத்து வளர்த்த தாய் தந்தையரைக் காணவில்லை. நான், அவர் உயிர் வடிவை, உள்ள வடிவை, குணப் பண்பைத் திருத்தியமைத்த உங்களைக் காணவேனும் கொடுத்து வைத்தேனே!"
"நல்லது. அவருக்கு ஏற்ற மனைவி. அவர் எங்கே."
"உங்கள் அறிவுப் பிள்ளை குளிக்கப் போயிருக்கிறார்; இதோ வந்துவிடுவார். வந்த களைப்புத் தீரத்தோட்டத்து ஓடையில் குளிக்கலாம்; புத்தாடையும் உடுத்துக்கொள்ளுங்கள்: விரைவில் உணவும் கொள்ளலாம்; இதற்குள் அவரும் வந்துவிடுவார்."
நீயே பெண்; உன் அன்பே அன்பு; ஊர்கிழார் தவம் செய்தவர். அவர் வந்தபின் நீராடுகிறேன். நீ சென்று வீட்டு வேலையைப் பார்க்கலாம்.""ஒரு வேலையும் இல்லை. சமையல் வேலைதான்—சிறிது செய்ய வேண்டும்."
"மனைவி கணவனைப் பேணுவதில் தாயுமாவாள் என்பதனை உன்னிடம் உணர்கிறேன். எனக்குப் பெருவிருந்தொன்றும் அமைக்க வேண்டா. நீ உன் வேலையைப் பாரம்மா! நான் வான் மீன்களைப் பார்த்துக்கொண்டே சிறிது ஓய்வாக இருக்கிறேன்."
உள்ளே போகிறாள். பாலும் பழமும் உண்பதாகக் கணவனும் மனைவியும் முடிவு செய்திருந்தனர். வந்தவர்க்கு என்ன உணவு அமைப்பது? சமையல் செய்யும் ஆளும் இல்லை. உணவுப் பொருள்களை எங்குப் போய் வாங்கிவருவது! வந்தவரோ, களைத்திருக்கிறார். காலம் தாழ்த்தவும் கூடாது. கடம்பமான் இறைச்சி இருந்தது நினைவிற்கு வருகிறது. புறக்கடையில் உலர்ந்த கிளைகளை ஒடித்து வருகிறாள் அவள். சக்கிமுக்கிக்கல் கொண்டு பஞ்சில் தீ மூட்டி அடுப்பைப் பற்ற வைக்கின்றாள். முன்பின் செய்தறியாதவள் என்று தெரிகிறது, கை தேய்கிறது. வெள்ளைக் கொழுப்புப் படிந்த அந்த ஊனிறைச்சியைப் பதம் செய்து நெய்யிட்டு அவள் சமைக்கிறாள். சுவை ஊட்டுகின்றாள்; உணவு ஒருவகையாக அமைகிறது. வேலை செய்தறியா மெல்லிய கைகள்...ஒளி பெற்ற நெற்றி...மெல்லியலுக்கேற்ற உடல் மென்மை...இவை எல்லாம் தோன்ற அவள் வெளிவருகிறாள். புகை படிந்த நெற்றியில் முத்துப் பூத்தாற்போல வியர்வை அரும்பி நிறைந்துள்ளது. விரைந்து செய்த அலுப்பில் பெருமூச்சு விட்டுக்கொண்டு குறுகுறு நடந்துவருகின்றாள்.
தலைவன் இதற்குள் வந்துவிடுகிறான்; தன் ஆசிரியரைக் காண்கிறான். "வாரா விருந்தோ வந்துள்ளது. ஆனால், என்ன உணவு தருவது? யார் உணவு அமைப்பார்? பொருள்களும் கையில் இல்லை. எப்படி அவளிடம் கூறுவது?" வாடுகிறான். மனம் அலைகிறது. "வேலை செய்தறியா அவள் என்ன செய்வாள்? நான் சென்று ஏதேனும் உணவமைக்கலாமா?"—இவ்வாறு எண்ணிக்கொண்டே அடுப்பங்கரைக்கு வருகிறான் தலைவன். அடுப்பின் ஒளியில் தலைவியணிந்திருந்த மணியாரம் பளிச்சென்று ஒளிர்கிறது: இவன் காணாத காட்சி. எதிரே குறுகுறு நடந்து, பெருமூச்சு விட்டு, நெற்றி வேர்வை நிலத்தில்விழ வருகிறாள் தலைவி. இரைத்துக் கொண்டு வருவது கண்டு அவன் நடுங்குகிறான். இடிமேல் இடிபோல் தோன்றுகிறது. “கண்ணே, உடம்புக்கு என்ன?" என்று நைகிறான்.
"உடம்புக்கா! எனக்கு என்ன? தங்கள் ஆசிரியர் வந்திருக்கிறாரே, பார்த்தீர்களா? அவருக்குக் கடம்பமான் இறைச்சியை நெய்யிலிட்டுச் சோறு சமைத்து வைத்துவிட்டு வருகிறேன். பாலும் பழமும் உண்டு. 'போதுமல்லவா? பாவம் அவர் பட்டினிபோலும்! 'விரைந்து உண்ணலாம்; குளிக்கலாம்' என்று புத்தாடை கொண்டுவைத்தேன். நீங்கள் வரவேண்டும் என்றார்."
"என்ன! எப்படி என் ஆசிரியர் என்று உணர்ந்தாய்? அதுதான் அவர் உன்னைப் புகழ்கிறார்! இதற்குள்ளாகவா சமையலாய்விட்டது? நீயா செய்தாய்? என்ன வியர்வை? என்ன இரைப்பு ? புகையில் புழுங்கினாயா? அதோ கரி."
"கரியா? அடுப்பங்கரையில் கரியிராதா ? புகையிராதா?" "ஆனால், புகையில் புழுங்குவானேன்?" "என்ன அழகு! ஆம், புகையே பேர் அழகு ! என்ன அழகிய கபில நிறம்? அதுவும் அடுப்பொளியில் ஒளிர்வது மற்றும் ஓர் அழகு! என்ன வளைவு வளைவாகப் பரவி மேலெழுந்து செல்கின்றது? இதுவரை நான் காணாத அழகிய காட்சி!"
"என்ன, ஆசிரியர்போலப் பாடத் தொடங்கிவிட்டாயா?"
"இல்லை. எங்கே மதம் கெடுகின்றதோ என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல காலமாக கடம்ப மானிறைச்சியும் நெய்யும் நறுமணம் வீசின. பக்கத்திலிருந்த உலர்ந்த கிளைகள் விறகாக வேள்விசெய்தன. சிறிது ஈர விறகும் கிடந்து புகையின் அழகினைக் காணச்செய்தது!"
"ஆம்!கண்ணும் சிவந்து உள்ளன. நம்பவே முடியவில்லையே! வாராவிருந்து வந்துளதே என்று எண்ணிய ஏக்கத்தை எல்லாம் இன்ப வெள்ளமாக மாற்றிவிட்டாயே! உடல் எல்லாம் வாடியுள்ளாய்!"
"உள்ளமெலாம் தளிர்த்துள்ளேன்...வாட்டம் என்ன? விருந்தினை எண்ணியபோது, அவர் பாடலே நினைவு வந்தது. அவற்றைப் பாடிக்கொண்டே சமையல் செய்தேன். வாட்டமே தெரியவில்லை. எனக்கு ஒரு பெரு மகிழ்ச்சி. பெரு மக்கள் வாழ, அவர் வழி நின்று உலகிற்கு உழைப்பதன்றோ மக்களாய்ப் பிறந்ததன் பயன்? இன்றுபோல என்றும் நம் வாழ்வு இவ்வளவு பயனுடையதாய், இன்பமுடையதாய்க் கழியுமோ? என்ன பார்க்கிறீர்கள்? கரி பூசிக்கொண்டு அலங்கோலமாக இருக்கிறேனென்றா?""இல்லை, கண்ணே! இல்லை! என்றும் இல்லாத அழகு, இன்று உன் முகத்தில் ஒளிர்கிறது. அந்த ஒளியில், உன் ஒற்றையாரமும் கிளர்ந்து மின்னிப் பொலிகிறது. அன்னமும் தோற்கும் நடையை இன்றே கண்டேன்."
"என்னைப் பாடுவதாகச் சொல்லி, நீங்களே பாடத்தொடங்கிவிட்டீர்களா?"
"பாட்டாவது! கற்பனையா இது? முழுக்க முழுக்க உண்மை. உன் உடல் அழகினையே. இதுவரையில் கண்டேன்: அன்பாகக் கனிந்த உடலம் என அறிவேன். என்னையே உயிராகக் கொண்டு வாழ்கிறாய் என அறிவேன். ஆம்! வெற்றுடலையே கண்டு களித்துக் கண்மூடிநின்றேன். இன்றுதான் என் கண் திறந்தது. உன் உயிர் அழகினைக் காண்கிறேன்; அறமும் அருளும் கலந்த உள்ளத் தொளியினைக் காண்கிறேன். பெருமக்கள் வழிநின்று ஒழுகும் உன் கடவுள் வாழ்வினைக் காண்கிறேன். இவ் வாழ்வின் பெருமையை நீ உன் வாயாரப் புகழ, என் காதாரக் கருத்தாரக் கேட்கிறேன். இந்தப் பெருமை எல்லாப், என் ஆசிரியர் உன்னைக் கண்டவுடனே அறிந்துகொண்டார். அவர் வருகையில் எனக்கு ஒரு புதுப் பெண்ணைப் பெற்றெடுத்துத் தந்துள்ளார். என்னே என் அறியாமை இருந்தபடி! நீ ஒரு புது மணமகள். வெற்றுடலைக் கண்டு களித்து, அதன் மணவாளனாக இத்தனை நாள் அமைந்தேன். மாணிக்கக் கல் கையில் இருந்தும் அதனைக் கூழாங்கல் எனக் கொண்டு, அதனால் புது அடுப்பு மேடை தேய்த்த கதைதான் என் கதை. நீயே மாணிக்கம்; அதனை அறிந்த இன்றே நல்ல நாள்! ஆமாம் ! நீ ஒரு புது மணப் பெண். புதுமணம் செய்துகொள்ள வேண்டும். உன் குறு நடைக் கூட்டம் வேண்டும். நானும் புது மணமகனாக உன்னை உயிரறிய, உடலறிய, உள்ளம் அறிய, உள்ளத் திறைவனறிய, என் ஆசிரியர் அறிய மணக்கும் வாய்ப்பும் வருகிறதே..."
"என்ன, ஏதேதோ பேசுகின்றீர்கள்!" என நாணித்தலை குனிகின்றாள்.
"உண்மையே பேசுகின்றேன். தனக்கென வாழாப்பிறர்க் குரியாளராக நாமும் நம் குடும்பமும் வாழவேண்டும். ஆனால், நம் வாழ்வு இத்தகைய சிறு வாழ்வாக அமைந்து பயனில்லை. வருவார்க்கு அடையாப் பெருங்கதவம் படைத்த வீட்டில், வருவார் உண்டு எஞ்சியதனை, உண்பதே அமுதம் என்பது உனது உட்கோள். பஞ்சம் மிக்க நாட்டில் பட்டினி வாட்டுகின்றது. அதனைக் கண்டும் உணராது போனேன். அவ்வாழ்வு வாழச் செல்வம் வேண்டும். பஞ்சம் மிக்க நாட்டில் பொருள் ஏது? பிற நாடு சென்றே தேடுதல் வேண்டும். அருமை அன்று ! உண்மையும் உறுதியும் உண்டானால். அப் பொருள் வருமுன், உன் மனம் குளிர உன்னைப் புது மணமகளாக மணப்பது எங்கே? ஆமாம். பொருள் தேடி வருதல் வேண்டும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் வாழ்வுக்கும் பொருள் வேண்டும். இதனை உணராது போனேன்! புது மணப்பெண்ணுக்குப் பரியம் கொடுக்கத்தானே வேண்டும்! விருந்து வந்ததன் பயன் கண்டாயா?"
5
தோழி பேசுகிறாள்:
" 'இவ்வாறு நிகழ்ந்தது' என நீ கூறவில்லையா'? ஆம்! அந்தப் புதுப்பெண்ணை மணக்க வேண்டாவா? உடலாகக் கண்ட பெண்ணை, உயிராக, அருளாக, அன்பாக, அழகாக, அறிவாகப் பாட்டாகக் கண்டதும் வேறு பெண்தானே? சாவாப் பெண் அன்றோ? இந்தப் புதுப்பெண்ணை அன்றோ தலைவர் காதலிக்கின்றார் ! மணக்க விரும்பினால், அந்த வேட்கை தணிய வேண்டுமன்றோ? சாவாப் பெண் வேண்டும் என்றால் தவம்தான் செய்யவேண்டும், அந்தத் தவம்தான் செய்யப் போகிறார். அதனை வருத்தம் என்று வருந்துவது ஏன்?"
"ஆம்! அவரது உயரிய எண்ணம் அஃது! ஆசிரியரும் அன்று வாழ்த்தினார்; செல்வம் வரும் நாளும் குறிப்பிட்டார். இன்னும் சில நாட்களே உண்டு. அவர் கூறியது பொய்யாது: அவர் முக்காலமும் அறிந்த அறிஞர் அல்லரா! அதோ பல்லியும் நல்ல செய்தி சொல்கிறது."
"இந்தக் காளை சிறுவீடு மேயப் போனது மிக விரைந்து மேய்ந்து திரும்பியது" என்று அயல்வீட்டு ஆயர் மகள் பேசிக்கொள்வது இவர்கள் காதில் விழுகிறது.
"கேட்டாயா இந்த நற் சொல்லை? விரைவில் நம் காளையாய தலைவரும் திரும்புவார். நீ அன்றோ நல்ல பெண்! பொழுது விடிவதற்கு முன்னரே தலைவர் புறப்பட்டு வெளிநாடு சென்று பொருளீட்டி வந்து, உலகெலாம் வாழ உன்னுடன் என்றென்றும் கூடி வாழ்வாராக!"
பல்லி முன்போல் 'டக் டக்' என்கிறது. "ஆமாம் நல்ல சகுனம்! தலைவரை மலர்ந்த முகத்துடன் வழியனுப்பு" என்கிறாள் தோழி.
கோழி கூவுகிறது. தலைவன் புறப்படுகிறான். தலைவியைத் தழுவி முத்தமிடுகிறான்."வாழ்க!" என்று பாடிக்கொண்டே தலைவன் வழிமேல் விழி வைத்துத் தலைவியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். தலைவிக்கு உறுதி கூறுவதுபோலப் பல்லி மற்றொரு முறை 'டக் டக்' எனப் பேசுகிறது. "வாழ்க!" என்று உள்ளுக்குள்ளே பாடுகிறாள் தலைவி.
6
இந்தச் சிறு கதையைப்பத்து வரியில் பாடுகிறார் இளந்தேவனார் என்ற சங்கப் புலவர்;
பைங்கண் யானைப் பரூஉத்தாள் உதைத்த
வெண்புறக் களரி விடுநீறு ஆடிச்
சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலிசிறு கூவலில் தணியும்
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ
எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்
கிளரிழை அரிவை நெய்துழந்து அட்ட
விளர்ஊன் அம்புகை எறிந்த நெற்றிச்
சிறுநுண் பல்வியர் பொறித்த
குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே.
—நற்றிணை 41.