9. வருந்தாது செல்வாயாக!

பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாலை.
துறை : உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.

[(து.வி.) தலைமகனுடன் தலைமகள் போகத் துணிந்துவிட, அவனும் அவளை அழைத்துச் செல்லுகின்றான். அவர்கள் வழியினைக் கடந்து போகும் வேளையிலே, அவன் அவளுக்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.]

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கணகண் டாங்கு
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நலமென் பணைத்தோள் எய்தினம்; ஆகலின்
பொரிப்பூம் புன்கின் அழற்றழை ஒண்முறி 5
சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி
நிழற்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வாலெயிற் றோயே!
மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்
நறுந்தண் பொழில, கானம்; 10
குறும்பல் லூர யாம் செல்லும் ஆறே.

வெண்மையான பற்களை உடையாளே! இனி நாம் செல்லுதற்குரித்தான காட்டு வழியெல்லாம், மாவினது அரும்பைக் கோதியவாறு மகிழ்ச்சியுறுகின்ற குயிலினங்கள் கூவிக் களிக்கும், நறிய தண்மைவாய்ந்த சோலைகளை உடையன; அல்லாமலும், வழியினை ஒட்டியபடியே, பலப்பல சிற்றூர்களையும் கொண்டிருப்பன.

நெஞ்சுரத்தின்கண் என்றும் அழிவில்லாதவராய், உயரிய செயலினைச் செய்கின்றவரான மாந்தர், தாம் அதுகுறித்து வழிபட்டுப் போற்றும் தெய்வத்தினைத் தம்முடைய கண்ணெதிரேயே தோன்றக்கண்டாற் கொள்ளும் மகிழ்ச்சியைப் போல, யாம் நின்னை அடைதற்கு முயன்றதனால் உண்டான சுழற்சியுடைய வருத்தமெல்லாம் தீரும்படியாக, நின்னுடைய நலம் வாய்ந்த மென்மைகொண்ட பணைத்த தோள்களை இப்போது நேராகவே அடைந்துவிட்டோம். ஆதலினாலே, பொரியைப் போலத் தோன்றும் பூக்களையுடைய புன்கினது அழகிய தகைமைகொண்ட ஒள்ளிய இளந்தளிரினை, சுணங்கு பரந்து அழகு செய்திருக்கும் நின்னுடைய பருத்த முலைகளிடத்தே, அவை என்னை மேலும் தாக்கி வருத்தும் பேரழகினைக் கொள்ளும்படியாக, நீயும் அப்பிக் கொள்வாயாக. நிழலைக் காணும்போதெல்லாம் அவ்விடத்தே நெடும்பொழுது தங்கியிருந்து, வழிநடந்த வருத்தம் நீங்கக் களைப்பாற்றிக் கொள்வாயாக. மணலிடங்களைக் காணும்போதெல்லாம், வண்டலிழைத்து, அவ்விடத்தே சிறிது விளையாடி இன்புறுவாயாக. இங்ஙனமாக, நெறிகடக்கும் வருத்தத்தைப் போக்கியவளாக, நீயும் இனிதே என்னுடன் செல்வாயாக!

கருத்து : சுரநெறியைக் கடந்து விட்டோம்; இனிச்செல்லும் வழி இனிதானது ஆதலின் இன்புற்றுச் செல்வாயாக' என்று தேற்றுவதாம்.

சொற்பொருள் : அழிவிலர் – அழிவற்ற நெஞ்சுரத்தை உடையவர்; இவரது முயற்சி பேரின்பத்தை நாடியதாக இருக்கும். அலமரல் – சுழற்சியுடைய. பணைத்தோள் பருத்ததோள். புன்கு – ஒரு வகை மரம்; புங்கு என்றும் வழங்குவர்.

விளக்கம் : 'மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் நறும் தண் பொழில்' என்ற றதனால், வசந்த காலத்தின் வருகையைக் கூறினனாம். 'முலை அணங்கு கொள்ளல், அதன்பால் பேரழகு குடிகொண்டு காண்பாரைத் தாக்கி வருத்தும் செவ்வியைப் பெறுதல். 'தோள் எய்தினன்' ஆதலின், அவன் அதனை விரும்புகின்றான்.

மேற்கோள் : இதனைப் புணர்ச்சி நிகழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி ஏகு என்றது (தொல்.அகத். 41. உரை). எனவும், 'பாலைக்கண் புணர்ச்சி நிகழ்ந்தது (அகத்.15.உரை) எனவும் கூறி, நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/009&oldid=1731250" இலிருந்து மீள்விக்கப்பட்டது