17. உரைத்தல் உய்ந்தனன்!

பாடியவர் : நொச்சி நியமங்கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : முன்னிலைப் புறமொழியாகத் தோழிக்குச் சொல்லியது.

[(து—வி.) பகற்குறிக்கண் வந்து கூடிச்செல்லும் தலைவன் ஒருநாள் வாராதுபோகத் தலைவிக்கு வருத்தம் மிகுதியாகின்றது. பிற்றை நாளிலே, குறியிடத்திற்குத் தோழியுடன் வந்திருந்த அவள், தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்பது அறிந்து, தன் தோழிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டு உணருமாறு இவ்வாறு கூறுகிறாள்.]

நாள்மழை தலைஇய நல்நெடுங் குன்றத்து
மால்கடல் திரையின் இழிதரும் அருவி
அகல்இருங் கானத்து அல்குஅணி நோக்கித்
தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்பு
ஏந்துஎழில் மழைக்கண் கலுழ்தலின், அன்னை 5

'எவன்செய் தனையோ?நின் இலங்குஎயிறு உண்கு'என.
மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி! சாரல்,
காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி 10
தீம்தொடை நரம்பின் இமிரும்
வான்தோய் வெற்பன் மார்புஅணங்கு எனவே.

தோழி! விடியற்காலை வேளையிலே மழையானது பெய்யத் தலைப்பட்ட நன்மையினையுடைய நெடிய குன்றத்தினின்றும், கருங்கடலின் அலையினைப்போல இழிகின்ற அருவி நீரானது, அகன்று பெரிதான காட்டினிடத்தே தங்கியோடுகின்ற, அந்த அழகினை நோக்கினேன். அவரைக் கூடிய இடம் அதுவாகலின், அடக்கவும் அடக்கும் எல்லையுள் நில்லாவாய்ப் பேரழகினையுடைய குளிர்ந்த என் கண்கள் அழுதலைத் தொடங்கின. அவற்றினின்றும் நீர் பெருகி வழியலாயிற்று. அதனைக்கண்ட அன்னையும், 'எதனால் அழுகின்றனையோ? அழாதே! நின் விளங்கும் எயிற்றிடத்தே யான் முத்தங் கொள்வேன்' என, மென்மையான இனிய சொற்களை என்பாற் கூறினாள். அதனைக் கேட்டதும் மிகவிரைவாக, உயிரினும் சிறந்ததாக நாம் பாதுகாக்கும் நாணத்தையும் அறவே நான் மறந்துவிட்டேன். 'மலைச் சாரலிடத்தே காந்தட் பூவினை ஊதித் தேனுண்ட கருநிற வண்டானது, இனிதாகத் தொடுத்தலையுடைய நரம்பினைப்போல ஒலிக்கா நிற்கும் வானோங்கிய வெற்பினுக்கு உரியவனான வலைவனது மார்பினைப் பிரிந்தமையினாலே உண்டான தருத்தத்திற்கு அழுதேன்' என்று சொல்லுதற்கும் வாயெடுத்தேன். அவ்வளவில் நினைவு தெளியவும், அதனைச் சொல்லாது யானும் நேற்றுப் பிழைத்தேன்.

கருத்து : 'என் களவுறவை அன்னையும் அறிந்தமையால் இனி இப்படிப் பகலில் வந்து சந்திப்பது இயலாது; அதனால் அவரை மணந்துகொள்ளல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : நாள் மழை – விடியலிற் பெய்த மழை. மால் கடல் – கருங்கடல். அல்கல் – தங்குதல். நீர் சுழல்பு – நீரைப் பெருக்கி. எயிறு உணகு – முத்தமிடுவேன். காந்தள் – காந்தட்பூ. மணிநிறம் – கருநிறம். நரம்பு – யாழ் நரம்பு.

விளக்கம் : 'மார்பு அணங்கு' என்றது, மார்பைத் தழுவும் நினைவால் எழுந்த வருத்தத்தை. பிரிவிடத்துத்தாம் முன்னர்க் கூடியிருந்த இடத்தைக் கண்டதும், நினைவுகள் பலவும் அணியணியாக மேலெழ இப்படித் தலைவி வருந்துதல் இயல்பாகும் என்று கொள்க.

இறைச்சி : 'காந்தளை ஊதித் தேனுண்ட தும்பி, அடுத்துப் பிற பூக்களை நாடிச் செல்லாது. அதனையே சுற்றி நின்று முரலும் மலைநாடனாயிருந்தும், நம்மைக் கூடியபின், நம்மை மறந்து பிறரை நாடியவனாக, நம்மைக் கைவிட்டனனே' எனக் கூறியவளாக இரங்குகின்றனள்.

மேற்கோள் : களவு அறியப்பட்ட இடத்துத் தலைவிக்குச் சொல் நிகழ்ந்ததற்கு இச் செய்யுளை நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டுவர் (தொல். பொருள். 111 உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/017&oldid=1731299" இலிருந்து மீள்விக்கப்பட்டது