18. படர் அகல வருவர்!

பாடியவர் : பொய்கையார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
சிறப்பு : கணைக்கால் இரும்பொறையது போர் வென்றி.

[(து–வி.) பொருளைத் தேடி வருதலின் பொருட்டாகப் பிரிந்துசென்ற தலைவனின் நினைவினாலே, தலைவி பெரிதும் வாடி மெலிவுற்றனள். அந்த மெலிவைப் போக்குதற்குக் கருதும் அவளது தோழி, தலைவனது சொன்ன சொற் பிழையாத மாண்பைக் காட்டி இவ்வாறு கூறுகின்றாள்.]

பருவரல் நெஞ்சமொடு பல்படர் அகல
வருவர் வாழி தோழி; மூவன்
முழுவலி முள்எயிறு அழுத்திய கதவின்,
கானல் அம் தொண்டிப் பொருநன், வென்வேல்
தெறல்அருந் தானைப் பொறையன் பாசறை 5
நெஞ்சம் நடுக்குறூம் துஞ்சா மறவர்
திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக்
கடா அம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடா அநிலை ஒருகோட் டன்ன
ஒன்றிலங்கு அருவிய குன்றிறந் தோரே.

தோழீ! நீ நெடிது வாழ்வாயாக! 'மூவன்" என்பானின் நிரம்பிய வலிமையினையுடைய முட்போன்ற பற்களைப் பறித்துக் கொணர்ந்து அழுத்திவைத்த கதவினையுடையது, கடற்கரைச் சோலைக்கண்ணதான தொண்டிப் பட்டினம். அதற்குரிய தலைவனாகத் திகழ்பவன், வெற்றி வேலினையும், பகைவரால் வெல்லுதற்கு அரிதான படைப் பெருக்கினையும் உடையவனாகிய சேரமான். அவனுடைய பாசறைக் கண்ணும் வீரர்கள் யாவரும் நெஞ்சம் நடுக்கங்கொள்ள உறக்கங் கொள்ளாதவராகக் கலங்கியிருந்தனர். அவர் அனைவரும், அலையோய்ந்த கடலினைப்போல் இனிதாகக் கண்ணுறங்குமாறு, மதன் ஒழிந்ததாய்ச் சினமடங்குதலைப்பெற்றது, பாசறையைக் கலக்கிய மதங்கொண்ட போர்க்களிறு. பிறரால் தடுத்தற்கு அரிதான மறத்தன்மையை உடைய அதனது ஒற்றைக் கொம்பைப்போல, ஒன்றாக விளங்கிய அருவியை உடைய குன்றத்தைக் கடந்து சென்றோர் தம் தலைவர். அவரும், வருத்தங்கொண்ட நெஞ்சத்தோடு நீ கொண்ட பலவாகிய துன்பமும் அகன்று போகுமாறு, நின்பால் விரைந்து வருவர்.

கருத்து : 'அதுகாறும் நின் கவலையை ஆற்றியவளாக நீயும் கண்ணுறக்கம் கொள்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : பருவரல் – வருத்தம். படர் – பிரிவுத்துன்பம். 'மூவன்' ஒரு குறுநில வேந்தன். பொருநன் – தலைவன். பொறையன் – இரும்பொறை மரபினனாகிய சேரமான் கணைக்கால் இரும்பொறை. திரைதபு கடல் – அலையோய்ந்த கடல். கடா அம் – மதம்.

விளக்கம் : தோற்றாரது பற்களைப் பறித்துவந்து தம் கோட்டைக் கதவுகளிலே பதித்துவைத்த வெற்றியைக் கொண்டாடுதல் பண்டைய தமிழர் மரபாதலைச் இச்செய்யுள் காட்டுகின்றது. யானை ஒரு கோட்டினை உடையதானது போர்க்களத்திலே அதனது மற்றைய கோட்டினை இழந்ததனாலும் ஆகலாம். அதனால் மதங்கொண்டு, அது பாசறையை இரவெல்லாம் கலக்கிப் பின்னரே ஓய்ந்தது என்க.

உள்ளுறை : மறவர் இனிது கண்படுப்பத் தன் மதத்தைக் கழுவிய யானையைப்போல, நீயும் இனிது கண்படுப்ப, நின் பல்படர் அகல, நின் தலைவரும் விரைந்து வந்து நினக்கு அருளிச்செய்வர்' என்பதாம்.

பிற பாடம் : தடாஅ நிலை ஒருகோடு' என்பது, 'தடவு நிலை ஒருகோடு' எனவும் வழங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/018&oldid=1731317" இலிருந்து மீள்விக்கப்பட்டது