19. அறிந்தனையாய்ச் செல்க!

[(து–வி) பகற்குறியிலே தலைவியைக் கூடியின்புற்ற பின்னர் அவ்விடம்விட்டு அகன்ற தலைவனைத் தோழி சந்தித்துத், தலைவியை விரைவிலே வரைந்து கொள்ளுதலைக் கருதுமாறு, இவ்வாறு உரைக்கின்றனள்]

இறவுப்புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பி னன்ன அரும்புமுதிர்பு

நன்மான் உளையின் வேறுபடத் தோன்றி
விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப! 5
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச்
செலீஇய சேறி ஆயின், இவளே
வருவை ஆகிய சில்நாள்
வாழா ளாதல்நற்கு அறிந்தனை சென்மே!

இறால் மீனது மேற்புறத்தைப் போன்ற சருச்சரை, பொருந்திய, பெருத்த அடிப்பாகத்தையுடையது சுறாமீன். அதன் கொம்பைப்போன்ற முட்களைக் கொண்ட இலைகளையுடையது தாழை. அதனிடத்தே, பெருங்களிற்று யானையின கொம்பினைப் போன்று விளங்கும் பூவரும்பு முதிர்ச்சியுற்றிருக்கும். நல்ல பெண்மான் தலையைச் சாய்த்து நிற்றலைப்போல, அது வேறாகத் தோன்றியதாக, விழவெடுக்கும் களத்திடத்தைப்போல எங்கணும் மணத்தைப் பரப்பியபடியும் இருக்கும். அத்தகையதும், வலிய நீரையுடையதுமான கடற்பரப்பிற்குத் தலைவனே! மிகுதியான மணிகள் கட்டியிருக்கப் பெற்றுள்ள நினது நெடிதான தேரினை, நின் பாகன் செலுத்தச் செல்லுதலாலே, நீயும் நின்னூர்க்குப் போகா நின்றனை! ஆயின், நீ மீண்டும் வருவதாகிய இடைப்பட்ட அந்தச் சில நாட்களளவும், நின் தலைவி, நின்னைப் பிரிந்த துயரத்திற்கு ஆற்றாது உயிர்வாழ மாட்டாளாதலையும் நன்றாக அறிந்தவனாகிச் செல்வாயாக!

கருத்து : நின்னைப் பிரிந்து இவள் வாழாள்' என்பதாகும்.

சொற்பொருள் : இறவு – இறாமீன். பிணர் – சருச்சரை. தடவு – பெருமை. உரவு – வலிமை

விளக்கம் : தாழை அரும்பு முதிர்ந்து சாய்ந்துவிட்டதாயின், மணம் எங்கணும் பரவ, அனைவரும் அதுகுறித்துப் பேசாநிற்பர். அவ்வாறே, உங்கள் களவு எவ்விடத்தும் பரவப் பெற்றதாகி, அலவற் பெண்டிரது வாயிடைப்பட்டு அலராகும் தன்மையதுமாயிற்று என்பதாம். புலால் நாற்றத்ததான கடற்கரைப் பாங்கை விழவுக்களம் கமழும் இடம்போலச் செய்தது தாழையரும்பினது மணம்; அவ்வாறே பழிப்பேச்சு மிகுந்த இவ்வூரிடத்தே நீ வேட்டுவரும் மணச்செய்தி பரவியதானால், எமக்கு மிக இளிதாகும் என்கின்றனள். 'வருவையாகிய சின்னாள் வாழாள் ஆதல் அறிந்தனை சென்மே' என்றது, தலைவியின் கற்புப் பாங்கினைக் கூறியதாகும்.

உள்ளுறை : 'தாழையது அரும்பு முதிர்ந்து வேறுபடத் தோன்றி விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப' என்றது, அவ்வாறே தலைவியும் தன்னில்லத்திலிருந்து வேறுபடும் நிலையினளாக, நின்னோடு மணம் பெற்று வாழும் சிறப்பினை எய்தல் வேண்டும்' என்பதாம்..

மேற்கோள் : தவைவன் பிரியக் கருதியவிடத்துத் தோழிக்குச் சொல் நிகழ்ந்ததற்கு இதனை மேற்கோளாக நச்சினார்க்கினியர் கொள்வர்–(தொல். பொரு. 114 உரை).

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/019&oldid=1731325" இலிருந்து மீள்விக்கப்பட்டது