23. கரப்பு அரிய!

பாடியவர் : கணக்காயனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.

[(து–வி.) தலைமகன் விரைய வந்து வரைந்து தன்னை மணந்து கொள்வான் என்று எதிர்பார்த்தாள் தலைவி. அவன் களவுறவிலேயே நீட்டித்து ஒழுகி வகுகின்றதைக் கண்டதும், தலைவியது ஆற்றாமை மிகுதியாகின்றது. அதனைக் கண்ட தோழி, தலைவனிடத்தே இவ்வாறு கூறுகின்றனள் ]

தொடிபழி மறைத்தலின் தோள் உய்ந் தனவே;
வடிக்கொள் கூழை ஆயமோடு ஆடலின்;
இடிப்பு மெய்யதுஒன் றுடைத்தே; கடிக்கொள
அன்னை காக்கும் தொல்நலம் சிதையக்
காண்தொறும் கலுழ்தல் அன்றியும், ஈண்டுநீர் 5
முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறுபா சடைய செப்புஊர் நெய்தல்
தெண்நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்புஅரி யவ்வே!

பெருமானே! இவளது தோள் வளைகள் பழிக்கு அஞ்சியவாய்த் தாம் கழன்று வீழாதாய் இவளது வருத்தத்தை மறைக்கின்றன. அப்படி மறைத்தலினாலே, இவளுடைய தோள்களும் தாம் மெலியாவாய்ப் பிழைத்தன. வாரி முடிக்கப்பெற்ற கூந்தலையுடைய இவள் தன் ஆயத்தாரோடும் விளையாட்டயர்கின்றாள். அப்படி விளையாட்டயர்தலினாலே, இவள் மேனியிடத்தே மெலிவு தோன்றுகின்ற ஒரு செயலையும் உடைத்தாயிற்று. காவல் மிகுதிப்பட, அன்னையானவள் பேணிக் காக்கும் இவளது பழைய நலமனைத்தும் சிதைந்து போயின. அவற்றைக் காணுந்தோறும், இவள் கண்கள் அழுதலைச் செய்கின்றன. அல்லாமலும், நெருங்கிய நீர் மிக்கதும், முத்துச் சிப்பிகள் படுகின்ற கடற்பரப்பினை உடையதுமான கொற்கைப் பட்டினத்துக் கடலின் முன்னுள்ள கடற்றுறையிடத்தே, சிறிதான பசிய இலைகளையுடைய செப்பம் அமைந்த நெய்தலது, தெளிந்த நீர்மையினையுடைய மலரினைப் போன்றவான இவளது கண்களும், அழுதலால் அழகு தொலைந்தவாயின. இனி, இவள் தன் காமத்தைப் பிறருக்கு ஒளிப்பது என்பதும் அரியதாம்!

கருத்து : 'ஆதலினாலே, விரைந்து இவளை வரைந்து வந்து மணந்து கொள்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : வடிக்கொள் கூழை – வாரி முடித்தலையுடைய தலைமயிர். இடிப்பு – இடித்தல்: மெலிவும் ஆம் கடி–காவல். செப்பு–செம்மை தெண் நீர்–தெளிந்த நீர்மை; செப்பம்.

விளக்கம் : 'தோள் உய்ந்தன' வென்றது, 'பிறர் கூறும் பழிச்சொற்களினின்று' என்று கொள்க. மேனியின் மெலிவு உண்மையாயினும், அது தோழியரோடு விளையாட்டயர்தலினாலே உண்டாயிற்றெனப் பிறர் கருதிப் பழித்தலிலர் ஆயினர். 'இவற்றை அறிந்த தலைவி கண்கலங்கியவளாகத் துயருற்று நலிகின்றனள்: அதனை மறைத்தல் இனி அரிது’ என்பதாம். ஆகவே 'இனிக் களவும் வெளிப்படும்; அலருரையும் பெருகும்; அதனைப் போக்குதற்கு, அவனை மணந்து இன்புறுத்துதலை நீயும் விரைய மேற்கொள்வையாக' என்பதாம். 'ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை' என்றது, நும்மிருவரது வதுவையினாலே இவளது தமரும் இவ்வூரும் பெரிதும் சிறப்படையும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/023&oldid=1731341" இலிருந்து மீள்விக்கப்பட்டது