34. முருகன் மடவன்!

பாடியவர் : பிரமசாரி.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி, தெய்வத்திற்கு உரைப்பாளாய், நெறி விலக்கியது.

[(து–வி.) களவுக் காலத்துத் தலைவனின் பிரிவினாலே துயருற்ற தலைவியைக் கண்டு. 'இவள் முருகால் அணங்கினாள்’ என அன்னை வெறியெடுப்பக் கண்ட தோழி, முருகனை முன்னிலைப் படுத்தினளாக இவ்வாறு கூறுகின்றாள்.]

கடவுட் கற்சுனை அடைஇறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவிஇன் இயத்து ஆடும் நாடன் 5
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்னணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக; 10
மடவை மன்ற வாழிய முருகே!

எம் கடவுளான முருகே! நின் இத்தகைய மடமையோடுங் கூடினாயாக. நீ நெடுநாள் வாழ்வாயாக! கடவுள் தன்மை பொருந்திய மலைச்சுனையிலேயிருந்தும், இலைகளை விலக்கி மேலெழுந்து வளர்ந்திருந்தவும், பிறர் கொய்யாத தன்மையுடையவுமான குவளை மலர்களைக் கொய்து, அவற்றோடு குருதியின் ஒள்ளிய செந்நிறத்தை உடையவான செங்காந்தட் பூக்களையும் கொய்து கலந்து, இரண்டும் கலந்தவண்ணம் விளங்கும்படியான மாலைகளைக் கட்டுவர். அப்படிக் கட்டிய மாலைகளைச் சூடிக்கொண்ட வராகப் பெருமலையின் பக்கம் எல்லாம் பொலிவுபெறுமாறு ஆடுகின்றவர் நினக்குத் தொண்டு நேர்ந்தாரான சூரரமகளிர். வீழும் அருவியின் ஒலியே தம் ஆட்டத்திற்குரிய இனிதான பக்க இசையாகக் கொண்டு அவர் ஆடிக்கொண்டிருக்கும் அத்தகைய நாட்டையுடையவன் எம் தலைவன். அவனது மார்பைத் தழுவிப் பிரிந்ததன் காரணமாக, அந்நினைவு தருதலாலே வந்தது, பசலை மிகுதியாகப் படர்தலைக் கொண்டதான், நீங்குதற்கரிய இக்காமநோய். இது நின்னாலே வருத்திக் கொடுக்கப்பட்ட நோயன்று என்பதனை நீயும் அறிவாய். அறிந்தும், தலை நிமிர்ந்து, கார்காலத்தே மலர்கின்ற கடப்பமலரின் மாலையைச் சூடியவனாக வெறியாடும் வேலனானவன் நின்னைக் குறித்து வேண்டவும் நீயும் வெறியயரும் எம் மனையிடத்தே வந்து தோன்றினை! அங்ஙனம் வந்த நீதான். யாம் போற்றிப் பரவும் கடவுளே யாயினும் ஆகுக! திண்ணமாக, நீயும் அறியாமை உடையை காண்!

கருத்து : முருகே! இவளை இவள் தலைவனோடு விரைவிலே மணம்பெற்று இன்புறுதற்கு உதவினையானால், இவளது நோய்தானே தீரும்' என்பதாம்.

சொற்பொருள் : கடவுட் கற்சுனை – கடவுட்டன்மையுடைய மலையிடத்துக் கற்பாங்கானவிடத்தே அமைந்திருக்கும் சுனை. கடவுட்டன்மையாவது, சூரரமகளிரன்றிப் பிற மானுட மகளிர் சென்று நீராடியும் மலர்கொய்தும் பயன்படுத்தாத தன்மை. குருதி ஒன்பூ – இரத்தச் சிவப்பு நிறம் ஒளிரும் செங்காந்தட்பூ; இது முருகனுக்கு உரியதாதலின் இதனை மானுட மகளிர் சூடார். சூர்மகள் – சூரர மகளிர்: முருகனுக்குப் பணிபூண்ட தேவகன்னியர்: 'குறமகள்' என்றும் பாடம். அப்போது முருகை மேற்கொண்டு வெறியயரும் கன்னியரான குறவர் மகளிர் என்க.

விளக்கம் : 'தலைவனோடு மணவிழா நேர்தற்கு அருளிச்செய்து தலைவியின் துயரைப் போக்காத முருகன் 'அணங்கிய நோய்' என வெறியாடும் வேலன் அழைக்க வந்தானாயின், அவன் மடவன்' என்கின்றாள் தோழி. இதனைச் செவிலி கேட்கத் தோழி கூறச், செவிலி நற்றாயொடும் சொல்ல, அவள் விரைவிலே தன் மகளுக்கு அவள் விரும்பிய காதலனையே மணஞ்செய்விக்கும் முயற்சிகளை நாடி முயல்வாளென்பது மரபாகும்.

இறைச்சி : ‘சூரரமகள் அருவியையே இன்னிசையாகக் கொண்டு முருகைப் போற்றி வெற்பகம் பொலிவுபெற ஆடிக்களிக்குமாறு போலத், தலைமகளும் தன் தலைவனது அன்பிலே திளைத்தாளாக, அவனூர் பொலிவு பெறுமாறு அவனோடு கூடிக்களித்து இல்லறம் நிகழ்த்தக் கருதியிருப்பாள் என்பதாம்:

மேற்கோள் : 'இது முருகற்குக் கூறியது' என நச்சினார்க்கினியரும் (தொல். பொருள். சூ. 114 உரை); 'இது முருகனை முன்னிலையாகக் கூறியது' என இளம் பூரணனாரும் (சூ 112 உரை) காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/034&oldid=1731380" இலிருந்து மீள்விக்கப்பட்டது