35. கண் பசந்த காரணம்!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.

[(து–வி.) மணம் பெற்றுத் தலைவி தலைவனோடு கூடியதன் பிற்றை நாளிலே, தலைவன், தோழியிடத்தே. 'நீ இதுகாறும் தலைவியை நன்றாக ஆற்றுவித்திருந்தனை' எனப் புகழ்ந்து கூறுகின்றான். அதனைக் கேட்ட தோழி, தலைமகனின் சால்பைப் புகழ்வாளாக இப்படிக் கூறுகின்றனள்.]

பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி, பழம்செத்துப்
பல்கால் அலவன் கொண்டகோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 5
இரைதேர் நாரை எய்தி விடுக்கும்
துறைகெழு மாந்தை அன்ன இவள்நலம்
பண்டும் இற்றே: கண்டிசின் தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
ஞெகிழ்ந்த கவின்நலம் கொல்லோ மகிழ்ந்தோர் 10
கட்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?—இவள் கண்பசந் ததுவே!

பொங்கிவந்து மோதுகின்ற அலையானது பொருதியதனாலே, நேரிதாகிய மணல் அடுத்திருப்பதான கடற்கரையினிடத்தே உதிர்ந்துகிடந்த புல்லிய காம்பையுடைய கருநாவலின் பெரிய கனியினைத், தம்மினமென்று கருதி வண்டினம் மொய்க்கும். அவ்வேளையிலே, அதனைப் பழமென்றே உணர்ந்து, பலவாய கால்களையுடைய நண்டானது சென்று பற்றிக்கொள்ளும். நண்டு பற்றிக் கொண்டதினின்றும் அதனை மீட்டற்கு இயலாவாய்த் தளர்ச்சியுற்ற வண்டுகள், மேலெழுந்து, அதனைச் சூழநின்று பேரொலி செய்தவாய்ப் பூசலிட்டிருக்கும். அவ்வேளையிலே, இரையைத் தேடிய ஒரு நாரையானது வரக்கண்டதும், அதற்கஞ்சிய நண்டு, பழத்தைக் கைவிட்டுச் சென்று ஓடிப் பதுங்கும். அதன்பின், வண்டுகளின் பூசலும் அடங்கும். அத்தகைய கடற்றுறை விளங்கும் குட்டுவனின் மாந்தை நகரத்தைப் போன்றது, இவளுடைய எழில் நலமாகும். அதுதான் முன்னரும் இத்தன்மையதே என்பதைக் காண்பாயாக. விலகாதே பக்கத்தேயிருந்து நீ தலையளி செய்தாலும், இவளது கண்கள் பசலைநோயுற்றதன் காரணம். சிறிதளவு முயக்கமானது கைநெகிழ்ந்ததனாலே உண்டாகிய அழகின் சிறப்பாகுமோ? கள்ளுண்டு மகிழ்ந்தார்க்குக் கள் இல்லாதே போகுங்காலத்துப் பிறந்த வேறுபாட்டைப் போன்றதான காம மயக்கத்தின் வேறுபாடு தானோ? இதனை யான் அறியேனே!

கருத்து : 'நின் காதலது மிகுதியே இவளது துயரத்தை ஆற்றுவித்துக் காத்தது' என்பதாம்.

சொற்பொருள் : அசாந்து – தளர்ந்து. நரம்பு – யாழ் நரம்பு. புன்கால் – மெல்லிய காம்பு. இருங்கனி – கரிய கனி.

விளக்கம் : 'களவுக்காலத்தே ஒன்றுபட்டிருந்து நீதான் இன்புறுத்தின காலத்தும், அணைத்திருந்த நிலை சிறிது நெகிழ்ந்ததற்கே பசந்த தன்மையுடையவள் தலைவி. இத்தன்மையினை உடையவளை ஆற்றுவிப்பது நின்னையன்றிப் பிறராலே செயத்தகும் ஒரு செயலாகுமோ? கள்ளுண்டு களித்தோர் உண்டதன் பின்னரும் நெடும்பொழுதிற்கு அந்தக் கள்ளினது மயக்கத்தின் நினைவிலே திளைத்தவராக இன்புறுதல் இயல்பு. அவ்வாறே, இவளும் நின்னோடு பெற்ற இன்பத்தின் நினைவாலே, தன்னை மறந்து, நின் பிரிவை ஒரு வேளை ஆற்றியிருந்திருக்கலாம். ஆனால், இவள் கண்கள் நின்னைக் காணாவாய்ப் பசந்தன என்பதும் உண்மை. அதுதான் எதனாலோ?' இவ்வாறு கூறுகின்றாள் தோழி. இது தலைவனது மேம்பாடே தலைவியை ஆற்றியிருக்கும் திண்மையளாகச் செய்து காத்தது என்று போற்றியதாம்.

உள்ளுறை : நாவற் கனி தலைவியாகவும் தும்பிகள் தோழியராகவும், ஞெண்டு தலைவனாகவும். இரைதேர் நாரை தமராகவும் கொள்க. நாவற்கனியைத் தம்மினம் என்று மயங்கிக் காத்துச் சூழ்ந்த தோழியரினின்றும், அதனைத் தானடைந்து இன்புறுதற்கு உரியதென உணர்ந்த ஞெண்டானது பற்றித் துய்க்கத் தொடங்குவது, தலைவியோடு தலைவன் கொண்டிருந்த களவுறவாகவும், அதனைக் கண்டு கலங்கிய தோழியரது பூசல், அதுகண்டு விலகியெழுந்து பூசலிட்ட வண்டினத்தின் பூசலாகவும் கொள்க. தமர் அறிந்தமை கண்டு தலைவன் நாரை வரக்கண்டு ஒதுங்கியது, ஞெண்டு ஒதுங்கியதற்கு ஒப்பாகும். நாரையும் கனியை முடிவில் ஞெண்டிற்கே விட்டு அகல்வதுபோலத் தமரும் தலைவனுக்கே அவளை மணத்தால் தந்து ஒன்றுபடுத்தினர் என்பதாம்.

மேற்கோள் : 'களவுறவினாலே இன்புற்ற நிலையிலும், முறையாக மணந்து துய்க்கப் பெற்றோமில்லையே என்ற கவலையினாலே உண்டானது தலைவியின் வேறுபாடு என்றும், அதுதானும் மணவுறவினாலே நீங்கியது எனவும், இச் செய்யுளைக் காட்டிக் கூறுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 150 உரை.)

'தலைமகன், தலைமகளிடத்தே இற்கிழமையை வைத்தவிடத்து, அறத்தினானாதல் பொருளினானாதல் அவனுக்காகிய இசையும் கூத்தும் முதலியவற்றான் அத்திறத்தை மறத்தலும் நிகழும். அக்காலத்தே அவனைத் திருத்துதலின் பொருட்டாகத் தோழி இவ்வாறு கூறுதல் உண்டு' என்பார் இளம்பூரணனார். (தொல். பொருள். சூ 148. உரை.) இவ்வாறு கொள்ளின் செய்யுள் மேலும் பொருள்நயம் சிறத்தலையும் அறிந்து உணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/035&oldid=1731382" இலிருந்து மீள்விக்கப்பட்டது