41. குறுநடைக் கூட்டம்!

பாடியவர் : இளந்தேவனார்.
திணை : பாலை.
துறை : பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது.

[(து–வி.) தலைவனது பிரிவினை அறிந்த தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அதனைக் கண்ட தோழி. ஆடவர் பொருள்தேடி வருதலால் வருகின்ற இல்லறத்தின் செவ்வியைக் காட்டி ஆற்றியிருக்குமாறு உரைக்கின்றாள்.

பைங்கண் யானைப் பரூஉத்தாள் உதைத்த
வெண்புறக் களரி விடுநீறு ஆடிச்
சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலிஉறு கூவலின் தணியும்
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ! 5
எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்
கிளரிழை அரிவை! நெய்துழந்து அட்ட
விளர்ஊன் அம்புகை எறிந்த நெற்றிச்
சிறுநுண் பல்வியர் பொறித்த
குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே. 10

ஒளி சிதறும் ஆபரணங்களை அணிந்தோளான தலைவியே! இரவுக்காலத்தே வந்தடைந்த நல்ல புகழையுடையவரான விருந்தினருக்கு, நெய்யைத் துழாவிக் கொழுவிய தசைக் கறியினைச் சமைத்தனை. அவ்வேளையிலே, அதனிடத்தினின்றும் எழுந்த அழகிய புகையானது நின் நெற்றியிடத்தே படர்ந்தது அதனால், நின் நெற்றியிடத்தே நுண்ணிய பலவாய் வியர்வுத் துளிகளும் தோன்றின. அத்தளர்ச்சியினாலே, குறுக நடந்தவளாகச் சென்ற நினது கூட்டத்தை மிகவும் விரும்பினராக இன்புற்றவர் நின் தலைவர். பசிய கண்களையுடைய யானையது பருத்த காலால் உதைக்கப்பட்டுப் பொடிபட்டதான, வெள்ளிய மேலிடத்தைக் கொண்ட பாழ் நிலத்தேயுள்ள புழுதியிலே மூழ்கியவராகச், சுரத்தின் கண்ணே பெற்று வருந்திய வருத்தமெல்லாம், பாறைப் பகுதியே மிக்குள்ளதான சிறு கிணற்றிடத்தே சென்று தணித்துக் கொள்பவர் வழிப்போக்கர். அத்தகைய வழிகளூடே, நெடுந்தொலைவுக்குச் சென்று, அவரும் நின் பொருட்டாக வருந்துவர், காண்பாயாக!

கருத்து : 'அவர் வருந்துவது, இல்லறமாற்றியும், விருந்தோம்பலிலே சிறந்தும் புகழடைவதற்காகவே' என்பதாம்.

சொற்பொருள் : களரி – களர்பட்ட பாழ்நிலம். நீறு – புழுதி. பார் – பாறை; கூவல் – கிணறு. 'நல்லிசை விருந்து' என்பது, சான்றாண்மை உடையாருக்கு அளிக்கும் விருந்து. 'நெய்துழந்து அட்ட விளர் ஊன்' என்பது நெய்யுடை ஊனடிசிலும் ஆம். 'குறுநடை'—குறுக நடக்கும் நடை: இது இரவுப்போதிலே விருந்தினரை உபசரித்த தளர்ச்சியால் உண்டாய வருத்தம்.

விளக்கம் : 'குறுநடைக் கூட்டம் வேண்டுவோர்' என்றது 'நின்பால் கடமைகளையாற்றும் செவ்வி சிறந்திருப்பதனைக் கண்டும் நின்னை விரும்புவார்' என்பதாம். 'புகை படிந்து வியர்வரும்பிய நெற்றியுடன் குறுநடை நடந்து வரும்' அந்தத் தலைமைப் பண்பினைத் தலைவரும் பெரிதும் விரும்பினர். எனவே, நீதான் அதனை விரும்புதலும், அவர் தாம் அதற்கு வேண்டுமளவு பொருள்தேடி வருதலும் வேண்டியவாமே என்கிறாள் தோழி. கோடைக் காலத்து, வழியிடை தம்மேற் படிந்த புழுதியைச் சிறுகூவலிடத்து நீரிற் கழுவித் தம் வருத்தம் தீர்தலைப் போலப், பிரிவுத் துயராலே வந்துற்ற நின் பசலையெல்லாம், அவர் மீளவந்து நின்னை இன்புறுத்த மறைந்துபோம் என்பதாம்.

பிற பாடம் : 'பா அர் மலி சிறு கூவல்' என்பது. 'பாரம் மலி சிறு கூவல்' எனவும் வழங்கும். பாரம் - பருத்தி: பருத்தி வாணிபர் சென்று தங்கிக் களைப்பாறியதனால், சூழவும் பருத்திப் பஞ்சுத் துகள் மலிந்து கிடந்த இடம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/041&oldid=1731400" இலிருந்து மீள்விக்கப்பட்டது