42. மறப்பதற்கு அரிதாகும்!

பாடியவர் : கீரத்தனார்.
திணை : முல்லை.
துறை : வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
[(து–வி) வினையைச் செவ்விதாக முடித்ததன் பின்னர்த் தன் நாட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறான் தலைவன். காட்டு வழியே வருவதாகக் குறித்திருந்த கார் காலத்து வரவைக் கண்டதும், அவன் மனம் முன்னை நினைவுகளாலே மயங்குகின்றது. அதனைக் கூறுபவனாகத் தேரை விரையச் செலுத்துமாறு பாகனை ஏவுகின்றான்.]

மறத்தற்கு அரிதால் பாக! பல்நாள்
அறத்தொடு வருந்திய அல்குதொழில் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீர் அவல
நாநவில் பல்கிளை கறங்க, மாண்வினை
மணிஒலி கேளாள், வாணுதல்; அதனால் 5
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே
இல்புக்கு அறியுந ராக மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்
சில்போது கொண்டு பல்குரல் அழுத்தி
அந்நிலை புகுதலின், மெய்வருத் துறாஅ 10
அவிழ்பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே.

பாகனே! பன்னாட்களாகக் கோடையின் வெம்மையோடு வாடிக் கிடந்தது இந்த உலகம். அது தீர்ந்து, உயிரினம் தத்தம் தொழிலை மேற்கொள்ளுமாறு, தொன்மை வாய்ந்த மழையும் இதுகாலைப் பெய்தது. பள்ளங்களிற் புதுநீர் நிரம்பியுள்ளது, அதனை வாயெடுத்து உரைப்பவான பலவாய தவளைக் கூட்டங்கள் ஒலித்தலைச் செய்கின்றன. அதனாலே, மாண்பான தொழிற்றிறம் பொருந்திய தேர்மணியின் ஒலியினையும் அவள் கேளாள். முன்னரும், இப்படித்தான் ஒள்ளிய நெற்றியினளான அவள் கேளாளாயினள்.

"முற்படச் சென்று நம் வரவைக் கூறுமின்' என ஏவப்பெற்ற இளைஞரும், விரையச்சென்று என் மனைக்கண்புகுந்து அறிவித்திருந்தனர். கேட்டதும், அதுகாறும் கழுவி ஒப்பனை செய்யாத தன் கூந்தலை மாசுதீர மெல்லக் கழுவத் தொடங்கினாள் அவள். கழுவியபின், சிலவாய மலர்களைப் பலவாய் தன் கூந்தலிடத்துப் பெய்தவளாக முடித்துக் கொண்டும் இருந்தாள், அவ்வேளையிலே, யானும் சென்று வீட்டுள் நுழைந்தேன். என்னைக் கண்டதும், அவள் தன் ஒப்பனையை மறந்தாள். மேனி துவளக் கூந்தல் அவிழ்ந்து சோர வந்து என்னைத் தழுவித் திளைத்தாள். மடப்பத்தையுடைய அவளது அந்தச் செவ்விய நிலை என்னாலே மறத்தற்கு அரிதாகும். அதனாலே விரையச் செல்வோமாக!

கருத்து : 'அந்தச் செவ்வியை இன்றும் யான் நுகருதற்கு ஏதுவாகத் தேரை விரையச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : வறம் – கோடையின் வெம்மை. அவல். பள்ளம். வாள் – ஒளி. இளையர்—ஏவலிளையர். பல்குரல் – பலவாக முடிக்கப்படுவதான கூந்தல். மகிழ்ந்தயர்தல் – இன்புற்று மயங்கித் தளர்தல்.

விளக்கம் : முன்னர் நிகழ்ந்த அதே நிகழ்ச்சியை இப்போதும் வேண்டுகின்றான் என்று கொள்க. 'மண்ணாக் கூந்தல்' என்றது, பிரிவுத்துயரத்தின் மிகுதியைக் கூறியதாம். 'நாவுடைமணி' என்றது, தவளைச் சதங்கைகளை. வறத்தொடு பொருந்திய உலகு தொழிற்கொளீஇய பழமழை பொழிந்த தன்மையைப் போன்றே, பிரிவுத்துயரால் அவளும் பெரிதும் வாட்டமுற்றுச் செயலொழிந்துகிடந்தாள். வருகைச் செய்தி கேட்டதும் தன்னைப் புனைந்து கொள்ளத் தொடங்கினாள்' என்று கொள்க.

மேற்கோள் : 'இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள்.சூ. 146 உரை.) இளம்பூரணனாரும், 'தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறுதற் கண்ணும்' என்னும் துறைக்கே மேற்கோள் காட்டுவர் (தொல். பொருள். சூ.144 உரை.)

பிறபாடங்கள் : 'அறத்தொடு வருந்திய அல்குதொழில் கொளீய'; 'புதுநீர் அவல் வர'; 'நாவுடை மணியொலி' 'இல்புக்கு அறிவுணர்வாக',

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/042&oldid=1731403" இலிருந்து மீள்விக்கப்பட்டது