48. கண்ணுள் போலச் சுழலும்!

பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ,
திணை : பாலை
துறை : பிரிவுணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது

[(து–வி) தலைவியைப் பிரிந்து போதலைப்பற்றித் தலைவன் தோழியிடத்தே கூறுதலும், அவள், அதனால் தலைவிக்கு நேரும் துயர மிகுதியை அறிவுறுத்தி, அவன் நினைவை மாற்ற முயல்வாளாக, இவ்வாறு கூறுகின்றாள்.]

அன்றை அனைய ஆகி, இன்றும்எம்
கண்உள போலச் சுழலும் மாதோ—
புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி,
புறவுஅணி கொண்ட பூநாறு கடத்திடைக் 5
கிடின்என இடிக்கும் கோல்தொடி மறவர்
வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாது!
அமரிடை உறுதர, நீக்கி, நீர்
எமரிடை உறுதர ஒளித்த காடே.


ஐயனே! கோங்கினது மெல்லிய இதழ்மிக்க குடை போன்ற புல்லிய புறவிதழ்களையுடைய பூக்கள், வைகறைப் பொழுதிலே வானிடத்துக் காணப்படும் மீன்களோ எனக் காண்பார் கருதும்படியாகத் தோன்றும். அவ்வாறு காடெங்கணும் அழகு கொண்டிருந்ததாய் மலர்மணம் வீசியபடி யிருந்த கன்னெறியிலே, முன்பும் நீர் சென்றீர். 'கிடின்' என முழக்கமிடும் வீரவளைகளை அணிந்தோரான மறவர்கள், கூர்மை பொருந்திய அம்பினாலே செயலாற்றும் திறனுடையோர் ஆவர். அவர்கள், நம்பால் எதிரிட்டு வந்து, நம்முடன் போரினைத் தொடங்கினர். அவர்கட்கு அஞ்சாதே போரிடத்தே ஈடுபட்டு அவர்களை வெற்றி கொண்டு நீர் போக்கினீர். அவ்வேளையிலே, எம்மைப் பின்தொடர்ந்தாராக எம் ஐயன்மார் அவ்விடத்தே வந்து சேரவும், அவர்கட்கு எதிர்நிற்கத் துணியாதே, எம்மைக் கைவிட்டு நீங்கிச் சென்றீராய், அவர்கள் பார்வையிற் படாவண்ணம் ஒளித்துங் கொண்டீர். அந்தக் காடானது அற்றை நாளைப் போன்ற நிலையதேயாகி. இற்றை நாளினும், எம் கண்ணிடத்தே இருப்பதுபோலத் தோன்றிச் சுழலா நிற்கும்!

கருத்து : நும்மையே துணையாகக் கொண்டு வந்தேமாகிய எம்பால், அருளின்றிப் பீரிதல் பொருந்தாது என்பதாம்.

சொற்பொருள் : மறவர் – ஆறலைப்போராகிய பாலை நிலமாக்கள். வடி நவில் அம்பு – வடித்தல் பொருந்திய அம்பு; கூர்மையாகவும், எய்யப் பெற்றுக் கறைபடாதேயும் விளங்கும் அம்பு.

விளக்கம் : தலைவியைப் பிரியக் கருதிய தலைவனுக்கு, முன்னர்த் தன் இல்லத்தாரைப் பிரிந்து உடன்போக்கிலே வந்த தலைவியது பேரன்புத் திறத்தையும். அதுகாலை நேரிட்ட மறக்கமுடியாததொரு நிகழ்ச்சியையும், இப்படி எடுத்துக் கூறுகிறாள் தோழி. 'மறவரை அஞ்சாது எதிரிட்டு வென்று போக்கி, எம்மவர் வரவும் ஒளித்தீர்' என்றது, 'எம்மவருக்குத் துன்பமிழைப்பின் எம்முள்ளம் நோதல் கூடுமென்ற அருளினாலே, அன்று நும்மை எளியராகக் காட்டிக் கொண்டீர்' என்பதாம். இதனால், 'நும் ஆண்மைக்கு இழுக்கெனக் கருதாது, தலைவியின் நலத்தையே கருதினவரான தகுதி படைத்திருந்த நீர் தாமோ, இன்று இவளுக்கு அழிவைத் தருவதான இச் செயலைத் துணிந்தீர்' என வினவியதும் ஆம். எமரையும் பிரிந்தோம்; உறுதுணையெனக் கொண்ட நீரும் பிரிந்துபோயின், என்னாவளோ? எனக் கலங்குகின்றாள் தோழி. 'காடு வளம் பெற்றிருந்த காலத்தேயே வழிப்போவரைத் தாக்கும் மறவர், காடு வளங்குன்றிக்கிடக்கும் கோடைக்காலத்தே தாக்குதலைத் தவிர்வரோ? ஆதலின், அதுகாலை நமக்கு ஏதம் வருமோவென யாம் அஞ்சமாட்டேமோ?' என்றதாம். 'ஒளித்த காடு கண்ணுள் போல இன்றும் சுழலும்' என்றது, 'நுமக்கு அவ்விடத்தே எம் நினைவு கிளர்ந்தெழ நீர் வினைபாலும் செல்லா மனத்தீராய்த், தலைவியின் நினைவாலே இடையில் திரும்புதலை மேற்கொண்டு, அதனால் பழியையும் பெறுவீர்' என்றதுமாம்.

இறைச்சி : கோங்கம்பூ மலர்ந்ததாய்க் காடும் அழகு கொண்டிருந்ததென்பது, 'நீரும் மகிழ்வோடு தலையளி செய்திருக்கத், தலைவியும் தன் எழில் குன்றாளாய் இல்லறமாற்றிப் பெருமையடைவாள்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/048&oldid=1731422" இலிருந்து மீள்விக்கப்பட்டது