49. அறிந்தால் என்னவோ?

பாடியவர் : நெய்தல் தத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது. (1): சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்த தூஉம் (2) ஆம்.

[(து–வி.) இரவுக் குறியிலே தலைவனைக் கூடுதற்கான வாய்ப்பை எடுத்துக்காட்டித் தோழி, தலைவியை அதனை மேற்கொள்ளும் விருப்பினளாக்க முயலுதல் (1); தலைவன் இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைவியது ஆற்றாமையினைக் கண்டு வியப்பாள்போல இவ்வாறு கூறி தலைவன் விரைய வரைந்து கோடலே தக்கதெனக் கருதுமாறு தூண்டுதல் (2).]

படுதிரை கொழீஇய பால்நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே;
முடிவலை முகந்த முடங்குஇறாப் பரவைப்
படுபுள் ஓப்பலின் பகல்மாய்ந் தன்றே;
கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து 5
எமரும் அல்கினர்! 'எமார்ந் தனம்' எனச்
சென்றுநாம் அறியின், எவனோ—தோழி!
மன்றப் புன்னை மாச்சினை நறுவீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண்கடற் சேர்ப்பன்வாழ் சிறுநல் ஊர்க்கே? 10

தோழி! படுகின்ற அலைகள் கொண்டு குவித்த, பாலைப் போன்ற வெண்மை நிறத்தையுடைய மணல்மேட்டிடத்தே விளையாட்டயர்ந்திருந்த வளைக்கையினரான இளமகளிர், அதனை நீங்கிச்சென்று, தம் தம் மனையிடத்தே உறங்கியபடி இருத்தலினாலே, கடற்றுறை தனிமையுற்று விளங்குகின்றது. முடித்தலையுடைய வலைகளால் கடலினின்றும் முகக்கப்பெற்றமுடங்குதலையுடைய இறால்மீன்களைக் காயவிட்டு, வந்து படியும் புள்ளினங்களை ஓட்டியிருத்தலினாலே, பகற்போதும் ஒருபடியாகக் கழிந்து போயிற்று. கொம்புகளைக் கொண்ட சுறாமீன்களைப்பற்றிக் கொணர்ந்த மகிழ்ச்சியினராக, எம் ஐயன்மாரும். இரவிற் செல்லும் மீன் வேட்டையினைச் கைவிட்டவராக, இல்லிடத்தே தங்கியிருப்பாராயினர். அதனாலே, மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையிடத்துள்ள நறிய பூக்கள், வீட்டு முற்றத்திடத்தேயுள்ள தாழையின் பூக்களோடு சேர்ந்து மணங்கமழ்ந்து கொண்டிருக்கும், தெளிந்த கடல்நாட்டவனான தலைவன் வாழ்கின்ற, நன்மை கொண்ட சிற்றூரிடத்தே சென்று. நாம் அவனது நினைவிலே மயங்கினேம் எனக்கூறி, அவன் கருத்தினை அறிந்துவரின் என்ன குற்றமாமோ?

கருத்து : 'அனைவரும் துயில, யாமே நின் பிரிவால் வந்துற்ற நோய் காரணமாகத் துயிலிழந்தோம். யாமும் இனிதே துயில் கொள்ளுமாறு, எம்மைப் பிரியாதேயிருக்கும் மணவாழ்வினை நாடாயோ' என்பதுமாம்.

சொற்பொருள் : முயக்கம் – வளைவு: காய்தலாற் சுருங்கும் சுருக்கம். ஏம் – இன்பம்; ஏமார்ந்தனம்; மயக்கம். இன்பத்தை விரும்பினோம்; மயங்கினோம்.

விளக்கம் : 'துறை புலம்பின்று' என்றாள், அவ்வழி வருதலை யாரும் அறியார் எனற் பொருட்டு 'பகன் மாய்ந்தன்று' என்றாள், கடலிடத்துச் செல்லும் பரதவரது இயக்கமும் இராதெனற் பொருட்டு. 'எமரும் அல்கினர்' என்றாள், அவராலும் ஏதமின்று என்பதனைக் காட்டுவற் பொருட்டு. இதனால், இல்லை நீங்கிச் சென்று, தலைவனை இரவுக் குறியிலே சந்தித்ததற்கு நல்ல சந்தர்ப்பம் என்று வற்புறுத்தினாள். இவ்வாறு கொள்ளின் இரவுக்குறி நயத்தலாயிற்று.

இனி, 'அனைத்தும் ஒடுங்கின இந்த இரவின் யாமத்தும், அவனைக் காணாதே வருந்தினமாய், யாம் மட்டுமே துயில் ஒழிந்து மயங்கினேம் எனக் கூறினாள்' எனக்கொண்டால், 'தலைவியின் ஆற்றாமையை வியந்து வரைவு வேட்டலை நயந்தாள்' என்று ஆகும்.

'கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து எமரும் அல்கினர்' என்றது, தலைவியது தகுதிப்பாட்டைக் கூறி, அவ்வாறே நும்மை அணைத்துத் தன்பாற் கொள்ளும் வேட்டம் வாய்த்தாலன்றி, இவளும் அமைந்திராத பெருங்காதற்றிண்மை உடையாளாய் அதனை மறவாள் என்றதாம்.

உள்ளுறை : 'மன்றப் புன்னை மாச்சினை நறுவீ, முன்றில் தாழையொடு கமழும் ஊர்' என்றதனால், அவ்வாறே இவ்விடத்தாளாகிய நீயும் அவ்விடத்தானாகிய அவனுடன் அவனில்லிற் கூடியிருந்து இல்லறமாற்றுவாய்' என்றனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/049&oldid=1731424" இலிருந்து மீள்விக்கப்பட்டது