நற்றிணை 1/052
52. நீங்க மாட்டோம்!
- பாடியவர் : பாலத்தனார்.
- திணை : பாலை.
- துறை : தலைமகன் செலவு அழுங்கியது.
[(து–வி.) தலைவியைப் பிரிந்து பொருள்தேடி வருதலிற் செல்லுதற்குத் தன் மனம் தூண்டுதலைச் செய்யத், தலைவியைப் பிரிந்து போதற்கு இயலாதும், பொருளார்வத்தை ஒதுக்குதற்கு முடியாதும் துன்புறுகின்றான் ஒரு தலைவன். முடிவில், தலைவியின் நினைவே வெற்றி பெறுகின்றது. அவன் தன் மனத்திற்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்
மணம்கமழ் நாற்றம் மரீஇ, யாம்இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி
வீங்குஉவர்க் கவவின் நீங்கல் செல்லேம்;
5
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்துறை வாழ்க்கை புரிந்துஅமை யலையே;
அன்புஇலை வாழிஎன் நெஞ்சே! வெம்போர்
மழவர் பெருமகன் மாவண் ஓரி
கைவளம் இயைவது ஆயினும்,
10
ஐதே கம்ம, இயைந்துசெய் பொருளே!
கருத்து : 'இவளைப் பிரிந்து வரும் பொருள் எந்துணைப் பெரிதாயினும் அதனை வேண்டேன்' என்பதாம்.
சொற்பொருள் : மாக் கொடி – கருங்கொடி. மரீஇ – பொருந்தி. உவர்–சுவை; உவர்த்தல் கொண்ட உப்பினையன்றிச் சுவை தருவது யாதுமின்று; ஆதலின் 'உவர்' சுவையாகக் கொள்ளப்படும். ஆள்வினை – முயற்சி. புரிதல் – விரும்பல்.
விளக்கம் : 'கூந்தல் நாற்றம் மரீஇ' என்றது. கூந்தலே அணையாகக் கொண்டு துயின்று பெறுகின்ற இன்பமிகுதியை வியந்து கூறியது. 'ஆகம் அடைய முயங்குதல்' ஆவது, வளியிடைப் போகா முயக்கம் ஆகும். 'என் நெஞ்சே' என்றது முன்னர் எனக்கே உரியையாயிருந்து, இதுகாலை எனக்கு எதிராகப் போகின்ற நெஞ்சமே என்பதாம். ஐது என்றது மெல்லிதும் ஆம். 'ஓரி' கொல்லி மலைத் தலைவன். 'வல்வில் ஓரி' எனப் புகழ்பெற்றவன். 'அதிரல், என்பது புனலிப்பூவையும், மோசிமல்லிகைப் பூவையும் குறிக்கும்.