53. அன்னை நினைத்தது!

பாடியவர் : நல்வேட்டனார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு நீட்டிப்பத் தோழி சிறைப்புறமாகச் சொல்வியது.

[(து–வி.) வரைந்து வருவேன் எனக்கூறிய தலைவனின் சொற்கள் வாயாவாயின. அதனால், தலைவியின் வாட்டமும் மிகுதிப்பட்டது. இந்நிலையில், ஒருநாள் தலைவியும் தோழியும் உரையாடியிருந்த இடத்தருகே, ஒருசார் வந்து செவ்வி நோக்கியபடி நின்றிருந்தான் அவன். அவனைக் கண்ட தோழி, தலைவிக்குச் சொல்வாளேபோல, அவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றனள்.]

யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான்அஃது
அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?
எவன்கொல், தோழி அன்னை கண்ணியது?
வான்உற நிவந்த பெருமலைக் கவாஅன்
ஆர்கலி வானம் தலைஇ, நடுநாள் 5
கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று
முளிஇலை கழித்தன முகிழ்இண ரொடுவரும்

விருந்தின் தீம்நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
முனியா தாடப் பெறின் இவள் 10
பனியும் தீர்குவள் செல்கஎன் றோளே!

தோழி! நின் மேனியது வாட்டத்திற்குக் காரணம், நீ தலைவனைப் பிரிந்திருத்தலால் உண்டாய காமநோய்தான் என்று அன்னையிடம் கூறுதற்கு அஞ்சினேனாக, யானும், அவள் பலகாற் கேட்பவும், அதனை மறைத்தே நின்றேன், 'வானத்தைப் பொருந்துமாறு போல மிக்குயர்ந்த பெரு மலைப் பக்கத்தே மிக்க இடியோசையையுடைய மேகமானது மழை பெய்யத் தொடங்கிற்று. நள்ளிருட் போதிலே அது பெரும் பெயலாகவும் பொழிந்தது. அதனால், கற்களையுடைய காட்டாற்றிடத்தே புதுவெள்ளம் வருகின்றது. மரங்கள் கழித்த காய்ந்த இலைகளோடு, அவற்றின்பால் முகிழ்த்திருந்த பூங்கொத்துக்களையும் அடித்துக் கொண்டு வருவதான. அந்தப் புதுவெள்ளத்தின் இனிய நீரானது இவளது நோய்க்கு மருந்தும் ஆகும். குளிர்ச்சியுண்டாக அதனைப் பருகியும், கண்ணால் நோக்கிக் களித்தும், வெறுப் பின்றி நெடுநேரம் ஆடியும் வந்தால், இவள் தன் மெய் நடுக்கமும் தீர்ந்தாளாவள். அதனால், இவளுடன் ஆங்குச் செல்வாயாக என்றனள், அன்னை. அவள் அவ்வாறு உரைத்தது எதனாலோ? தான் நமது ஒழுகலாற்றை அறிந்து கொண்டதனாலோ? அல்லது, அருளினாலோதான் சொன்னாளோ? எதனால் அவ்வாறு கூறினாள்? அவள் எண்ணியதுதான் யாதோ?

கருத்து : 'இவளது வாட்டத்தை அன்னையும் அறிந்தளள்: இனி இவள் இச்செறிக்கப்படுதல் நிகழும். அதனாலே, விரைந்து மணந்து கொள்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : ஆர்கலி வானம் பேராரவாரத்தைக் கொண்ட மேகம்; ஆரவாரம் இடிக்குரலால் உண்டாவது. முளிஇலை – காய்ந்த இலை. முனியாது – வெறுக்காது.

விளக்கம் : வரைவு நீட்டித்தமையினாலேதான் இத்துணையும் துயரம் ஏற்படலாயிற்று எனக் குறிப்பால் உணர்த்துகின்றாள் தோழி. இனி 'அன்னை அறிந்தனள் கொல்லோ' என்று கூறியதனால், அவள் அறிந்தால் களவிற் கூட்டம் வாயாது என்பதும் ஆம். 'அறிந்தனள் கொல்லோ' என்றது, அவனுக்குரிய மலைநாட்டினின்று இழிந்துவரும் காட்டாறு அதுவாதலால், 'தாம் அவ்விடத்திற்கு வந்திருப்பது அவ்வாறு கூறிய அன்னையின் அருளினாலே தான்' என்றதாம். அவள் அன்புடையாள் ஆதலின், தலைவன் வரைந்துவரின் மறாது மணத்திற்கு இசைதலும் நேர்வள் என்பதுமாம் 'மருந்தும் ஆகும்' 'பனியும் தீர்குவள்' என்றாள் எனச் சொல்லியவாற்றால், வுறவை அன்னை அறிந்தனள் என்பதைப் பெற வைத்தனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/053&oldid=1731435" இலிருந்து மீள்விக்கப்பட்டது