65. அயலிலாட்டிக்கு அமுதம்!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி, தலைமகட்குச் சொல்லியது.

[(து–வி.) குறித்த பருவத்து வந்தருளாத தலைவனது செயலால் பெரிதும் நோயுற்று நலிந்திருந்தாள் ஒரு தலைவி. அவளுக்குத் தான் கேட்ட நற்சொல்லைக் கூறி அவன் விரைவிலே வந்தடைவான் என்று தேற்றுகின்றாள் தோழி]

அமுதம் உண்க, நம் அயல்இ லாட்டி
கிடங்கில் அன்ன இட்டுக்கரைக் கான்யாற்றுக்
கலங்கும் பாசி நீர்அலைக் கலாவ
ஒளிறுவெள் அருவி ஒண்துறை மடுத்துப்
புலியொடு பொருத புண்கூர் யானை 5
நற்கோடு நயந்த அன்புஇல் கானவர்
விற்கழிப் பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடிஇடி கரையும்
பெருமலை நாடனை 'வரூஉம்'என் றோளே.

அகழியைப் போன்றதாக இருசாரும் கரையமையப் பெற்று விளங்குகின்ற காட்டாற்றின் கண்ணே, கலங்கும் பாசியை நீரின் அலைகள் அலைத்தவாலே, அது எங்கும் பரவிக்கிடக்கும். ஒள்ளிய வெள்ளருவியையுடைய, ஒளி கொண்ட நீர்த்துறையிடத்தே பாய்ந்து, புலியோடு போரிட்டது ஒரு யானை. அதனால் புண்பட்டு நலிந்த அந்த யானையின் நல்ல கொம்புகளைப் பெற விரும்பிய அன்பற்ற வேட்டுவர்கள், அதன்மேல் அம்புகளை ஏவினார்கள். வில்லினின்றும் புறப்பட்டுக் சென்று தைத்த அம்புகளின் தாக்குதல் காரணமாகச் சுழன்று வீழ்ந்துவிட்ட அந்த யானையினது, அச்சத்தை விளைவிக்கும் அவலக்குரலானது இடித்தல் மிகுந்த காலத்தே இடையில் எழுந்து பேரிடியினைப் போன்று, காடெங்கணும் ஒலித்துக்கொண்டிருக்கும். அத்தகைய பெருமலை நாட்டிற்கு உரியவனான நம் தலைவன், 'வரூஉம்' என்றாள் நம் அடுத்த வீட்டிலிருக்கும் பெண். அப்படிச் சொன்ன அவள்தான், பெறற்கரிய அமுதத்தைப் பெற்று இன்புற்றுச் சிறப்பாளாக!

கருத்து : 'நற்சொல்லைச் சொன்னவள் அமுதம் உண்க; அவள் சொற்போல் தலைவரும் நம்பால் வருக!' என்பதாம்.

சொற்பொருள் : கிடங்கில் - அகழி; அகழி சூழ்ந்த 'கிடங்கில்' எனப் பெயரிய ஊரும் ஆம். இட்டுக் கரை - இடப்பெற்றாற் போன்று செவ்விதாக அமைந்த கரை. சுழி – சுழற்சி, நாமப்பூசன் – அச்சத்தைத் தருகின்ற அவலக் குரல்; கேட்பார் உளத்தும் அச்சந் தோன்றச் செய்யும் சோகக் குரல்.

விளக்கம் : நற்சொல் – ஒன்றை நினைத்துக் கவலையுற்றாரின் காதுகளில் ஏதும் தொடர்பற்ற அயலாரது பேச்சு நடுவே எழுந்தாக வந்துபடும் சொல்; இதனை 'விரிச்சி' என்பர். 'இதனைச் சொன்னார் அமுதுண்டு இறக்க என வாழ்த்துதல், கேட்பாரது மரபு (குறுந். 83 பார்க்க.)

'புலியால் தாக்கப்பட்ட புண்களையுடைய யானையது வருத்தத்தை நோக்கி, அதற்கு இரங்கும் அன்பிலராய், அதன் கொம்பினைப் பெறவிரும்பி அதனைக் கொல்பவர் வேட்டுவர். அதுகாலை, அந்த யானையின் அவலக் குரல் காடெங்கணும் ஒளிக்கா நிற்கும். அத்தகைய மலைதாடன் தலைவன்' என்றனள். அவ்வாறே தலைவனும், பிரிவினாலே தாக்கப்பட்டு நலிந்த தலைவிக்கு அருள் கொண்டிலனாய், அவளை மணந்து இன்புறுத்த நினையானாய்த், தான் பெறும் இன்பமே கருதினனாய், அவட்கு நலிவையே செய்பவனானான்' என்பதாம். அத்தகையோனை 'வரூஉம்' என்ற நற்சொல் கேட்டனம். அச்சொல்லைச் சொன்னவள் அமுதம் உண்க; அவள் 'வாக்கும் நிறைவேறுக' என்பதாம்.

புறப்பொருள் துறையினே இப்படி 'விரிச்சி கேட்டல்' சிறந்த வெற்றிச் சகுனமாகக் கருதப்படும். அகத்துறையிலேயும் அந்த மரபு விளங்கிற்றாதலை இதனாற் காண்கிறோம்.

'கிடங்கில்' ஓய்மான் நல்லியக் கோடனின் ஊரும் ஆகும்.'கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்' என்னும் சான்றோர், நற்றிணை 364 ஆவது செய்யுளைப் பாடியவர். 'கிடங்கிற் குலபதிக் கண்ணன் என்னும் சான்றோர் குறுந்தொகையின் 252 ஆவது செய்யுளைச் செய்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/065&oldid=1731465" இலிருந்து மீள்விக்கப்பட்டது