66. கண் சிவந்தவோ?

பாடியவர் : இனிசந்த நாகனார்.
திணை : பாலை.
துறை : மனை மருட்சி.

[(து–வி.) உடன்போக்கிற் சென்ற தன் மகளது செயல் அறத்தோடு பட்டதென்று தேறினும், மெல்லியளாய அவள் தான் வெஞ்சுரத்தை எப்படிக் கடந்து செல்வாளோ?' என்ற ஏக்கம் தாய்க்கு மிகுதியாகிறது. அவள் தன்மகளை நினைந்து இப்படிப் புலம்பிக் கூறியபடி கலங்குகின்றாள்.]

மிளகுபெய் தன்ன சுவைய புன்காய்
உலறுதலை உகாஅய்ச் சிதர்சிதர்ந்து உண்ட
புலம்புகொள் நெடுஞ்சினை ஏறி, நினைந்துதன்
பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகிப்
புன்புறா உயவும் வெந்துகள் இயவின் 5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளிமழுங்கி அமர்த்தன கொல்லோ
கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்,
காழ்பெயல் அல்குற் காசுமுறை திரியினும்,
மாண்நலம் கையறக் கலுழும்என் 10
மாயக் குறுமகள் மலர்ஏர் கண்ணே!

கூந்தலிற் சூட்டியிருந்த மாலையானது சிக்குண்டாலும், குறிய வளைகள் நெகிழ்ந்து சரியினும், பரல்கள் பெய்தலைக் கொண்ட அல்குலிடத்தே விளங்கும் மேகலையானது தன்னிற் பொருத்தப்பெற்ற பொற்காசுகள் முறைதிரிந்து கிடப்பதாய்ப் போனாலும், மாட்சிப்பட்ட தன் அழகெல்லாம் அழிந்தொழியுமாறு கண்கலங்கும் பேதைமை உடையவள், என் அழகிய இளமகள் ஆவாள்.

மிளகினைப் பெய்தாக்கியதுபோன்ற சுவையினையுடைய புல்லிய காய்களையும், காய்ந்த கிளைகளையும் கொண்ட உகர் மரத்தின், வண்டினம் சிதைத்து உண்டதனாலே வருத்தமுற்றிருந்த நெடிதான கிளை யொன்றின்மேல் ஏறியிருந்தபடி, காட்டின் வெம்மையை நினைந்ததாய்த், தன்னுடைய புள்ளி விளங்கும் பிடரிடம் வெறிபடுமாறு புல்லிய புறவும் வருந்தியபடி தங்கியிருக்கும் வெம்மையான புழுதியையுடையது காட்டுவழி. தான் விரும்பிய காதலனோடு கூடிச் சென்றனளானாலும், என் மகளது குவளைமலர் போன்ற அழகிய கருங்கண்கள் அவ்விடத்தே சிறப்புற்றவையாய்த் தம்முடைய ஒளியும் மயங்கிப்போயினவாய்க் கலக்கம் அடைந்தனவோ?

கருத்து : 'அதனை நினைந்தே என் வருத்தம் மிகுதியாகின்றது' என்பதாம்.

சொற்பொருள் : சிதர் – மரவண்டு. சிதர்ந்து உண்ணல் – துளைத்து உண்டல். எருத்தம் – பிடரி. உயவும் - வருந்தும். காசு – பொற்காசு. முறை திரிதல் – முறை பிறழ்தல். மாயக் குறுமகள் – அழகிய இளமகள்.

விளக்கம் : 'நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்' என்றது, தான் அந்தப் போக்கினையே அறமெனக் கொண்டு அவளை அவனுடன் முறையாக மணவினையாற் கூட்டிவைக்காத அறியாமையை எண்ணி வருந்திக் கூறியதாம். தன் அணிகள் முறைபிறழின் அவற்றைச் சரிசெய்து கொள்ளவும் அறியாதே கண்கலங்கும் பேதைமை கொண்டவள், எவ்வாறுதான் தன் காதலனுடன் சென்று இவ்லறத்தை நடத்துவாளோ?' என எண்ணுகின்றாள் தாய். 'அணிகளின் சிதைவுக்கே கலங்கும் அவள், வெம்மையும் கொதிப்பும் புழுதியும் வருத்தி நலிவிக்குங் கானத்தே, அதனைப் போக்கவும் வழியற்ற இடத்தே, கண்கலங்கிப் பெரிதும் புலம்புவாள் அல்லளோ?' என்றும் நினைக்கின்றாள்.

'எருத்தம் வெறிபட மறுகி' என்றது, வெறியுற்றாடும் வெறியாடி, தன் கழுத்தை அசைத்தாடும் தன்மைபோல அசைத்துக்கொண்டு என்பதாம். 'மாயக் குறுமகள்' என்றது தன் உறவை மறைத்து ஒழுகியதையும், உடன் போக்குச் குறிப்பைக் காட்டாதே வஞ்சமாக மறைத்ததையும் நினைந்து வருந்திக் கூறியதாம்.

உள்ளுறை : 'பட்டுப்போன உகாயின் நெடுஞ்சினையிடத்து ஏறியமர்ந்து வருந்தும் புறவினையுடைய வெந்துகள் இயவு' என்றனள்; வானிற் பறத்தலையே உடைய புறவும் வெம்மைக் காற்றாதாய் வருந்துமாயின், வம்புழுதியிடை நடந்துபோகும் தன் மகளது நிலைமைதான் என்னாகுமோ?' எனக் கலங்கியதும் இதுவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/066&oldid=1731467" இலிருந்து மீள்விக்கப்பட்டது