நற்றிணை 1/068
68. நெஞ்சுண ஆடுவோம்!
பாடியவர் : பிரான் சாத்தனார். திணை : குறிஞ்சி. துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.
[(து–வி.) இரவுக் குறியிடத்தே வந்து ஒருசார் தலைவன் நிற்கின்றான். அதனையறிந்து தோழி, 'தலைவி இற்செறிக்கப்படுதல் உறுதி; இனி இவளை வரைதவே செய்யத்தக்கது' என உணர்த்தக் கருதினளாகத் தலைவிக்குச் சொல்லுபவள்போல அவனும் கேட்கச் சொல்லுகின்றாள்.]
'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது.
இளையோர் இல்லிடத்து இற்செறித் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்' எனக்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்தி
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுஉண ஆடுகம்
வல்லிதின் வணங்கிச் செல்லுநர்ப் பெறினே
'செல்க' என விடுநள்மன் கொல்லோ? எல்லுமிழ்ந்து
உரவுவரும் உரறும் அரை இருள் நடுநாள்
கொடிநுடங்கு இலங்கின மின்னி
ஆடுமழை இறுத்தன்று, அவர் கோடுஉயர் குன்றே.
சிகரங்கள் உயர்ந்திருக்கும் அவருடைய குன்றம், இரவின் நடுயாமப் போதிலே, ஒளியை உமிழ்ந்தபடி எழுகின்ற வலிய இடிக்குரலை எங்கணும் முழங்கச் செய்தபடி, கொடி அசைந்தாடுமாறுபோல மின்னலிட்டதாய், மழையையும் பெய்யா நின்றது. இதனைக் காணும் அன்னை, நாளைக் காலையிலே, விளையாட்டுத் தோழியருடனே கூடி ஓரையாடி இன்புறாமல், இளம் பெண்கள் வீட்டிடத்தே அடைத்துக்கிடத்தல் அறமும் ஆகாது அதனால் செல்வமும் தேய்ந்துபோம்' எனக் கருதுவாளோ? அவள் கருதாள் ஆகலின், வலியச் சென்று வணக்கமுடன் எடுத்துச் சொல்பவரைப் பெறுதல் வேண்டும். பெற்றனமானால், குறிய நுரைகளைச் சுமந்தபடியும் நறுமண மலர்களை இழுத்துத் தள்ளிக் கொண்டதாயும் பொங்கி வருகின்ற புதுவெள்ளத்திலே, யாமும் எம் நெஞ்சம் களிப்பெய்த ஆடாநிற்போம்.
கருத்து : 'அதுதான் வாயாதாகலின், யாம் புதுவெள்ளத்தே ஆடிக் களித்தலும் இயலாமற்போம்' என்றதாம்.சொற்பொருள் : ஆயம் – ஆயமகளிர், ஓரை – ஒருவகை மகளிர் விளையாட்டு! பஞ்சாய்ப் பாவைகோண்டு நீரிடத்தே கூடியாடுவது. இளையோர் – இளையோராகிய மகளிர். ஆக்கம் – ஆகிவரும் செல்வம். எல் – ஒளி. உரவு – வலிமை. ஆடுமழை - பெய்யும் மழைமேகம்.
விளக்கம் : 'புதுநீராடிக் களிக்கும் பிற மகளிரைப் போலாது, அவன் மலையிடத்திலிருந்து வரும் நீராதலால் அதனையே கருதிப் பெரிதும் தாம் களிப்போம் என்பாள் 'அவர் குன்றிடத்திலிருந்து வரும் நீர்' என்றாள். 'செல்கென விடுநள் மன்' என ஐயுற்றதனால் இற்செறித்தல் நிகழும் என்பதனையும், இனிக் கண்டின்புறுதல் வாயாதென்பதனையும் கூறி வரைவு வேட்டனளும் ஆயிற்று. அரையிருள் நடுநாள் குன்றிடத்துப் பெய்யும் பெருமழையைச் சுட்டி, அதனைக் கடந்துவரும் தலைவனை நினைந்து வழியின் ஏதப்பாட்டிற்குத் தாம் அஞ்சினமையும் உணர்த்தினாள். 'சொல்லுநர்ப் பெறின்' என்றாள். தாம் அதுகாறும் மறைத்த களவினை.
மேற்கோள் : நச்சினார்க்கினியர், இச் செய்யுளை. 'வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையுைம் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்' எனக் கூறித் தோழி வற்புறுத்ததாகக் காட்டுவர். (தொல். பொருள் சூ. 114 உரை.)
பிறபாடங்கள் : 'நறுமலர் அருந்தி', 'இலங்க மன்னி'.