67. தங்கினால் என்னவோ?

பாடியவர் : பேரி சாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பகற்குறி வந்து நீங்குந் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.

[(து–வி.) பகற்குறி வந்தொழுகும் தலைவனை இரவின்கண் எம்மூரில் தங்கிச் செல்க' எனக் கூறுவாளாய், அஃது இயையாமையின் மணந்து கொள்ளலே தக்கதென உணருமாறு இவ்வாறு கூறுகின்றாள் தோழி.]

சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறைபுலம் பின்றே
இறவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரையக்
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே; 5
கணைக்கால் மாமலர் கரப்ப, மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை
எல்லிமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,
தங்கின் எவனோ தெய்ய; பொங்குபிசிர் 10
முழவுஇசைப் புணரி எழுதரும்
உடைகடற் படப்பைஎம் உறைவின் ஊர்க்கே?

செவ்வானத்தே ஊர்ந்து செல்லும் செழுமையான கதிர்களைக்கொண்ட ஞாயிற்று மண்டிலம், பெரிதான மலைப்பின்னாகச் சென்று மறைய, அதனால் மக்களியக்கம் அற்றுப்போன கடற்றுறையும் தனிமையுடையதாய் ஆயிற்று. இறாமீனைத் தின்று வானில் எழுந்த கருங்கால்களையுடைய வெண்மையான நாரைகளும், வெள்ளிய மணற்குன்றின் மேலமர்ந்து தம் அரிய சிறைகளை வீசிப் புலர்த்தியபின்னர், கரையிடத்துள்ள கருங்கிளைகளையுடைய புன்னை மரங்களிலே சென்று தங்குவன ஆயின. திரண்ட தண்டினைக்கொண்ட கரிய மலரானது மறையும்படியாக, நீர் பெருகும் கழியிடத்தே சுறா மீன்கள் தத்தம் துணையோடும் கூடியவாய் இயங்குதலையும் மேற்கொண்டன. அவ்விடத்தே, இரவின்கண்ணே ஒலிக்கும் குளிர்ந்த கடலினிடத்தே, மிக்க பந்தங்களைக் கொளுத்திக் கொண்டவராக, எம் ஐயன்மாரும் மீன் வேட்டையின் பொருட்டாகப் போயுள்ளனர், அதனாவே, பொங்கியெழும் பிசிரையும் முழவொத்த ஒலியையும் கொண்டவாக அலைகள் எழுத்து மோதி உடைகிள் கடற்கரைப் பாங்கிலேயுள்ள, தங்குதற்கினிய எம் ஊருக்கு எம்முடன் வந்தீராய்த் தங்கியிருப்பீரானால், எதுவும் குறை உண்டாகுமோ?

கருத்து : 'இரவிலே எம்மூரிலுள்ள எம் இல்லிடத்துத் தங்கிப் போதலாம்' என்பதாம்.

சொற்பொருள் : செழுங்கதிர் – செழுமையான கதிர்கள்; செழுமை ஒளியின் செழுமையையும், வெப்பத்தின் செழுமையையும், அதனால் உலகுக்கு உண்டாகும் நன்மையின் செழுமையையும் குறிக்கும். மால் வரை – பெருமலை; மேற்கு மலை. வெண்கோடு – வெண் குன்று; மணற்குன்று; உப்பின் குவையும் ஆம். இறை கொள்ளல் – தங்குதல், மாமலர் – கரியமலர். கரப்ப – மறைய. 'சுடர்' - தீப்பந்தங்கள். பிசிர் – நுண் திவலை.

விளக்கம் : 'குருகு இறைகொண்டன' என அவையும் தம் உறைவிடத்துச் சென்று தங்குமாறு போலத் தலைவனும் தங்குதற்குரியன் என அவனது கடமை உணர்த்துகிறாள். 'எமரும் வேட்டம் புக்கனர் எனக் கூடுதற்கான செவ்வியும், 'உறைவின் ஊர்' என ஊரது இனிமைச் செறிவும் உரைத்து அவனைத் தங்கிபோக என்கின்றாள். மணந்த பின்னரன்றி அவளுரில் அவளில்லிடத்து அவளோடுங்கூடி இன்புறுதல் வாயாது ஆதலின், அவன் மனம் விரைய மணந்து கோடலிற் செல்லும் என்பதாம். "துறை புலம்பின்றாதலின் நீ செல்லுதலை அனைவரும் அறிவர். கழியிடைச் சுறாவழங்குதலின் நின் குதிரைகட்கு ஏதமாம். தங்கும் குருகிணம் கலைந்து ஆர்ப்பரித்தலால் அலருரை உண்டாதல் கூடும். வேட்டம் புக்க எமர் நின்னைக் காண நேரின் துன்புறுத்தலையும் செய்வர்' என அச்சுறுத்தி இவைபற்றி எண்ணாது இவளுடன் கூடியின்புறுவதற்கு ஏற்ற வகையால் இவளை மணந்து கொள்க" என்கின்றாள்.

மேற்கோள் : 'இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது' என் நச்சினார்க்கினியர் காட்டுவர். (தொல். பொருள், சூ 114 உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/067&oldid=1731470" இலிருந்து மீள்விக்கப்பட்டது