நற்றிணை 1/079
79. எப்படித் தடுப்போம்?
- பாடியவர் : கண்ணகனார்.
- திணை : பாலை.
- துறை : பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள், தோழிக்குச்
சொல்லியது.
[(து—வி.) தலைவன் தன்னைப் பிரிந்து போதற்கு நினைந்தானாதலை அறிந்து வருந்தி நலனழிந்தாள் ஒரு தலைமகள். அவள், தன்னைப்பற்றி உசாவிய தோழிக்குத் தன் வருத்தத்தை இப்படிக் கூறுகின்றாள்.]
'சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீக்
கூரை நம்மனைக் குறுந்தொடி மகளிர்
மணல்ஆடு கழங்கின், அறைமிசைத் தாஅம்
ஏர்தர லுற்ற இயக்குஅருங் கவலைப்
பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'
என்றுநாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று—
அம்ம! வாழி, தோழி!—
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே?
தோழி! நீதான் வாழ்க! "மனைக்கு வேலியாக அமைந்துள்ளன ஈங்கை. அந்த ஈங்கையின் தேன்துளிகளை மிகவுடைய திரண்ட நாள் மலர்கள், கூரையிட்ட நல்ல மனைக்கண்ணே வாழ்வோரான குறுந்தொடியணிந்த இள மகளிர் மணல்பரந்த முற்றத்திடத்தே ஆடியிருக்கும் கழங்குக் காய்களைப் போலப் பாறைகளின் மேலிடமெல்லாம் உதிர்ந்துகிடக்கும். அத்தகு அழகினைப் பொருந்தியதும். இயங்குதற்கு அரியதுமான கவர்த்த நெறியிலே முற்படப் பிரிந்து சென்றோராயினும், அவர்தாம் வந்து நம்மோடுங் கூடியிருத்தற்கு வேண்டியதாகிய காலம் இதுவாகும். இக் காலத்தே, நம்மோடுங் கூடியிருக்கும் நீவிர் நம்மைப் பிரிந்து செல்லுதலைக் கருதுதலினாலே, இனி இதனினும் செயற்கரிதான கொடுமையும் யாதும் உண்டாமோ?" என்று, நம் தலைவரிடம் நாம் எடுத்துக் கூறினேமாக, நமது காமநிலையைச் சொல்லுவோம். அங்ஙனம் சொல்லாது, அவரைப் போதற்கு விட்டேமாயின், நம் உயிரோடும் முடிதற்குரிய துன்பமும் நம்பால் வந்தடைவதாகும். அன்றி, வேறு முயற்சியினால் நம் காதலரின் செலவினைத் தடுப்பேம் எனக் கருதினையானால், அதனையும் எனக்கு உரைப்பாயாக.
கருத்து : 'காதலரது பிரிவுச் செலவினை எவ்வாறேனும் தடுத்தாகவேண்டும்' என்பதாம்.
சொற்பொருள் : சிறை–வேலி. நாள் வீ –அன்றைக்குப் பூக்கும் புதுமலர். உறை–தேன்துளி. ஏர் – அழகு. கவலை – கவர்த்த நெறி; மயக்கந்தரும் நெறியும் ஆம்.
விளக்கம் : ஈங்கை பூத்து உதிர்தல் கூதிர்க்காலமாகிய ஐப்பசி புரட்டாசித் திங்களில் ஆகும். முற்படப் பிரிந்தாரும், கார்காலத்தே மீண்டும் வந்து கூதிர் முன்பனிக் காலத்துத் தலைவியருடனே கூடியிருப்பர். இதுவே நாட்டின் மரபாகப் பிரிதற்கு உரியதல்லாத கூதிரின்கண்ணே பிரிய நினைக்கும் தலைவனின் கருத்தினை நினைந்து தலைவி பெரிதும் மன வேதனையடைகின்றாள். ஈங்கை கூதிர்ப்பருவத்தே உதிரும் இயல்பினதாதலை, 'ஈங்கை செவ்வரும்பு ஊழ்த்த வண்ணத் தூய்ம்மலர் உதிரத், தண்ணென்று இன்னாது எறிதரும் வாடை' (குறு 110) என வருவதனாலும் அறியலாம். காமம் – காம விருப்பம்.
'காமம் செப்புதும்' என்றது. அதுதான் கற்புடை இல்லத் தலைவியருக்குப் பொருந்தாத ஒரு மரபாயிருப்பினும், பிரிவைத் தாங்கி உயிரோடும் இருத்தற்கு இயவாத உழுவலன்பால் வந்தமைந்த உள்ளக்கலப்பினது செறிவை நினைந்து, அந்த மரபையும் ஒதுக்குவமோ? என்று கேட்பதாம்; இதுவே கருத்தாதல், 'செப்பாது விடினே, உயிரோடும் வந்தன்று' என்பதனாலும் வலியுறும்.
இறைச்சி : 'தேன் நிறைந்த ஈங்கைமலர், வண்டால் உண்ணப்படாதே பாறைமிசை உதிர்ந்து வீழ்ந்து கெடும்' என்றாள். அவ்வாறே தானும் தலைவனுக்கு இன்பந் தருதலின்றி, வறிதே உயிரிழந்து அழிவதனை உறுதியாகக் கொண்டதனால்.