80. நோய்க்கு மருந்து!

பாடியவர் : பூதன் தேவனார்.
திணை : மருதம்.
துறை : சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து–வி.) தோழியால், தலைவியைக் கூட்டுதற்குப் பெரிதும் மறுத்து ஒதுக்கப்பட்ட தலைவன், தன் பெருங்காதலை அறிந்து தனக்கு உதவாது தன்னை அவள் அவ்வாறாக ஒதுக்குதலை நினைந்து, அவள் கேட்குமாறு, தன் நெஞ்சிற்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது]

'மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம் பாற்பயம் கொண்மார், கன்றுவிட்டு,
ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன், இவன்' என, 5
இழைஅணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் அல்லது,
மருந்துபிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கு

"மன்றிடத்தேயுள்ள எருமைகளுள், அகன்ற தலையினை உடையதான காரெருமையின் இனிய தீம்பாலாகிய பயனைக் கறந்து பெறும் பொருட்டாகக், கன்றினைக் குடிக்கவிட்டுப் பாலைக் கறந்து கொள்வார்கள் ஆயர்கள். அதன் பின்னர், ஊரிடத்துள்ள மாடுமேய்க்குஞ் சிறுவர்கள், அதன் மேலே ஏறிக்கொண்டவராக, அதனை மேய்த்து வருவதற்கும் செல்வர் அத்தகைய, பேரிருள் நீங்கும் விடியற்காலத்திலே, விருப்பத்தோடு இவன் வந்தான்; உடுக்குந் தழையும் சூட்டும் தாரும் நமக்குத் தந்தான்" என்று கருதினாள். கழலணிந்து விளங்கியவரான பிற ஆயமகளிரோடு, தகுதி கொண்ட நாணமும் தன்னைத் தடை செய்யத் தைத்திங்களின் முதல்நாளிலே, குளிர்ந்த பொய்கையிடத்தே சென்று நீராடும் பெருத்த தோள்களையுடைய இளமகள் அவள். அவளல்லாது, யான் அடைந்த இந்த நோயினைப்போக்குதற்கான மருந்து தானும் பிறிது யாதொன்றும் இவ்வுலகிலே இல்லை. நெஞ்சமே! இனி யாம் யாது செய்வோமோ?

கருத்து : "எம் இந்த நோயின் தகைமையை அவள் தோழியும் உணர்ந்தாளில்லையே?" என்பதாம்.

சொற்பொருள் : மன்றம் – வீட்டு முற்றம். குறுமாக்கள் - மாடு மேய்க்குஞ் சிறார்; பால் கறந்ததன் பின்னர்க் கன்றுகளை வீட்டிலே விட்டுவிட்டு, மாடுகளை மேய்த்தற்கு ஓட்டிச் செல்வர் என்க. பெரும்புலர் விடியல்–பேரிருள் புலர்கின்ற விடியல்: அதிகாலை இருளுக்குப் பேரிருள் என்பது பொருத்தமாதலின் இப்படிக் கூறினான். தகுநாண்–தகுதி கொண்ட நாணம்; போலியாக நாணமுடைமை காட்டும் தோற்றம் அன்று என்பதாம். குறுமகள் - இளையோளாகிய தலைவி.

விளக்கம் : 'மன்றம்' என்றது, வீட்டின் தொழுவிடத்துப் பொதுவிடத்தைக் குறிக்கும். அவளால் வந்துற்ற நோயாதலினாலே, இதற்கு மருந்தும் அவளேயன்றிப் பிறிதொன்றும் இல்லை' என்பான், 'மருந்து பிறிதில்லை" என்கின்றான். தைத்திங்களில் நீர் குளிர்ச்சிமிகக் கொண்டதாயிருப்பது பற்றித் 'தைத்திங்கள் தண்கயம்' என்றான். 'பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்த், தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' என வரும் குறுந்தொகையடிகளும் (196), 'தைஇத் திங்கள் தண் கயம்போல' என வரும் புறநானூற்று அடியும் (70-6) இதனை வலியுறுத்தும். 'தமக்கு நல்ல கணவனை வேட்டு நோன்பு பூண்ட மகளிர், தைமுதல்நாள் நோன்புகழித்து நீராடச் செல்வர்; அவ்வேளை இவனைக் கண்டாள். 'இவனே தனக்குத் தெய்வந்தந்த காதலன்' எனக் கருதி ஏற்றாள்' என்க. அதனையுணர்ந்து உதவுங் கடப்பாடு உடையவளான தோழி, அதனை மறுத்து, அவனை ஒதுக்குதற்கு நினைதல் பொருத்தமற்றதாகும் என்பதும் கூறப்பட்டது.

இறைச்சி : 'மன்றத்து எருமைகளுள் பாற்பயனுடைய கார் ஆனிடத்துப் பாற்பயனைக் கொண்டு ஊர்மக்கள் இன்புறுதல் போல, ஆயமகளிர் கூட்டத்துள் வந்த தலைவியின் காதற்பயனைப் பெற்று இன்புறத் தலைவலும் விரும்பினான்' என்க. ஊர்க் குறுமாக்கள் பாற்பயனை அளித்தபின் அதனையும் பிற எருமைகளைப்போல மேய்ச்சற்குக்கொண்டு செல்வதுபோன்று, தோழியும் தனக்குத் தலைவியை இன்புறக் கூட்டியபின். இல்லிற்குத் தம்முடன் அழைத்தேக வேண்டும்' என்று கூறுகின்றானும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/080&oldid=1731503" இலிருந்து மீள்விக்கப்பட்டது