85. நின் நசையினான்!

பாடியவர் : நல்விளக்கனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைவன் வரவுணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.

[(து–வி ) இரவுக் குறிக்கண் தலைவனின் வரவினை அறிந்தனள் தோழி; தலைவனைத் தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதற்குத் தூண்டக் கருதினள்; தலைவிக்குச் சொல்வாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றனள்.]

ஆய்மலர் மழைக்கண் தெண்பனி உறைப்பவும்
வேய்மருள் பணைத்தோள் விறல்இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறுவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக்
கன்றுடை வேழம் நின்றுகாத்து அல்கும், 5
ஆர்இருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி
வாரற்க தில்ல—தோழி—சாரல்
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை
தேம்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தன்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்குமலை நாடன் நின் நசையி னானே! 10

தோழி! மலைச்சாரலிடத்தே வேட்டமாடும் கானவன், அம்பினை எய்து வீழ்த்திக் கொன்று, முட்பன்றியின் கொழுவிய தசையினைக் கொணர்ந்தனன். அதனைத் தேன்மணங் கமழுகின்ற கூத்தலை உடையாளான அவன் மனைவியானவள், தான் தோட்டத்திலிருந்து கிண்டிக் கொணர்ந்த கிழங்குகளோடும் சேர்த்துக், காந்தள் மலர்கள் நிரம்பியிருக்கும் அழகுடைய சிறுகுடியிடத்தே உள்ளவர் அனைவருக்கும் பகுத்துத் தருவாள். அத் தன்மைகொண்ட உயர்ந்த மலைநாட்டினன் நம் தலைவன். அவன், நின்பால் விருப்பத்தையும் உடையவன். அழகான குவளை மலர் போன்ற குளிர்ச்சியான நின் கண்களிடத்தே தெளிந்த நீர்த்துளிகள் மிகுதியாகத் துளிர்ப்பவும், மூங்கிலையொத்த பருத்த நின் தோள்களிடத்து விளங்கிய வெற்றித்தொடிகள் சுழன்று நெகிழவும், அவற்றை நோக்கிப் பழிபேசும் இயல்பையுடைய இப் பழைய ஊரிடத்தே பெரிதும் அலரெழுதலும் நிகழும். ஆயினும், குறுகிய கோடுகளையுடைய பெரிய புலிக்கு அஞ்சியதாய்க், குறுக நடக்கும் நடையினதான கன்றினையுடைய பிடியானையானது, தான் அசையாதே நின்றபடி அதனைக் காத்துத் தங்கியிருக்கின்ற தன்மையினையுடையதும், மிகுந்த இருள் சூழ்ந்து செல்வார்க்கு அச்சத்தை தந்துகொண்டிருப்பதுமான சிறுநெறியின் வழியாக, அவன் இனியும் வாராதிருப்பானாக!

கருத்து : 'இரவுக்குறி வேட்டு வருதலைத் தலைவன் கைவிட்டு, நின்னை மணந்து கொள்ளுதலிலே கருத்தைச் செலுத்துவானாக' என்பதாம்.

சொற்பொருள் : ஆய்மலர் – அழகிய குவளை மலர். 'தெண்பனி' தெளிந்த கண்ணீர்த்துளி. விறல் – வெற்றி. அம்பல் – அலர். இருள் கடுகிய – இருள் செறிந்து சூழ்ந்துள்ள. முளவு மான் – முட்பன்றி; முள்ளம்பன்றி. கிழங்கு – மனைப் படப்பைக்கண் பயிரிட்டிருந்த கிழங்கு.

விளக்கம் : 'விறல் இழை' என்றது. 'முன்னர்ப் பூரிப்பால் தலைவனைத் தன்பால் ஈர்த்த வெற்றிமிடுக்கோடு விளங்கிய இழை' எனச் சுட்டி, அதுதான் தற்போது நெகிழ்ந்துபோயின வாட்டத்தைக் குறித்துக் கூறியதாம். அம்பல் – சிலரே அறிந்து, அங்கங்கே தம்முட் கூடிக்கூடி நின்று மறைவாகப் பேசும் பழிச்சொற்கள். இதனைச் 'சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்லுவது என்று விளக்குவர் இறையனார் களவியலுரைகாரர்—(சூ. 22 ன் உரை.). 'அம்பலூரும் அவனாடு மொழிமே' எனக் குறுந்தொகைக்கண் (51) வருவதும் காண்க. கண்ணீர் வடிதலையும் தோள்பணை நெகிழ்தலையும் கூறினாள், தன்னாலும் தேற்றவியலாத துயர மிகுதியைப் புலப்படுத்தற்கு. இதனால் இரவுக்குறி மறுத்து வரைவுவேட்டு வற்புறுத்தினள் ஆயிற்று.

உள்ளுறை : 'கானவன் கொணர்ந்த பன்றித் தசையைக் கிழங்கோடு சிறுகுடிக்குப் பகுத்துக் கொடுத்துக் கொடிச்சி மகிழுமாறு போலத், தலைவன் பெற்ற களவு மணத்தை, மணவிழவோடு ஊரினர் அறியும் பலரறி மணமாகச் செய்து களிப்புறக் கருதினள் தோழி' என்பதாம். 'தானும் புவிக்கு அஞ்சுமாயினும், அகலாதே நின்று தன் கன்றைக் காத்து நிற்கும் பிடியினைப் போலப், பழிக்குத் தான் அஞ்சினும் தலைவியைப் பழிசூழாதே நின்று காக்கும் கடப்பாட்டினள் தான்' என்று தோழி தன் அன்பினை உணர்த்தியதுமாம்.

இறைச்சி : 'புலியை அஞ்சிய பிடியானை, அதனையுணராத தன் இளங்கன்றைப் பேணி நிற்றலைப் போலப் பிரிவால் தலைவிக்கு வரும் துயரத்திற்கு அஞ்சிய தோழி, அதனை அறியாதே களவு உறவில் திளைக்கும் தலைவியைப் பேணிக் காத்து நிற்கின்றனள்' என்பதாம்.

இதனைக் கேட்கும் தலைவன், இரவுக்குறி வாயாது போம் என்றறிபவனாகத் தலைவியை விரைந்து மணந்து கொள்ளுவதற்கான முயற்சிகளிலே ஈடுபடுவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/085&oldid=1731515" இலிருந்து மீள்விக்கப்பட்டது